தமிழ்நாடு

தண்ணீரில் மூழ்கி இறப்போர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரிப்பு

தமிழகத்தில் தண்ணீரில் மூழ்கி இறப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 1,899 பேர் மூழ்கி இறந்துள்ளனர்.

கே.வாசுதேவன்

தமிழகத்தில் தண்ணீரில் மூழ்கி இறப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்தாண்டு 1,899 பேர் மூழ்கி இறந்துள்ளனர்.

நாட்டில் உள்ள நீர்வளத்தில் 2 சதவீதம் தமிழகத்தில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. மாநிலத்தில் சுமார் 39 ஆயிரம் ஏரிகளும், குளங்களும் உள்ளன. இதில் 13,770 பெரிய ஏரிகளாகும். மேலும் ஏராளமான ஆறுகளும் உள்ளன. அதேபோல தமிழக கடற்கரை சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை உடையது.

பிற மாநிலங்களைக் காட்டிலும், தமிழகத்தில் நீர்வளம் குறைவாக இருந்தாலும், தண்ணீரில் மூழ்கி இறப்போர் எண்ணிக்கை அதிகம் உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நீரில் இறப்போர் எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகம் 5-வது இடத்தைப் பிடித்துள்ளது.

மாநிலத்தில் 2014-இல் தண்ணீரில் மூழ்கி 1,524 ஆண்கள், 375 பெண்கள் என மொத்தம் 1,899 பேர் இறந்துள்ளனர், 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆனால், 2013-இல் 1,421 ஆண்களும், 296 பெண்களும் என மொத்தம் 1,717 பேர் இறந்துள்ளனர், 13 பேர் காயமடைந்துள்ளனர்.

தேசிய அளவில் சாலை விபத்துக்கு அடுத்தபடியாக, நீரில் மூழ்கி இறப்போரின் எண்ணிக்கையே இரண்டாவது இடத்தில் உள்ளது.

நீரில் மூழ்கி இறப்போரில் பெரும்பாலானோர், நீச்சல் தெரியாததினாலும், நீர் நிலைகளின் ஆழம், தண்ணீரின் அளவு பற்றிய தகவல்கள் தெரியாததினாலும் விபத்தில் சிக்கி இறப்பதாகக் கூறப்படுகிறது.

இதில் பராமரிப்பு இல்லாத குளங்கள், குட்டைகள், ஏரிகள் ஆகியவற்றில் மூழ்கி இறப்போரின் எண்ணிக்கையே அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக தீயணைப்புத் துறையினர் கூறுகின்றனர். அதே நேரத்தில் சுற்றுலா தலங்கள் உள்ள கடற்கரைகள், நீர்வீழ்ச்சி பகுதிகள், அணைகள், ஆறுகள் ஆகியவற்றில் சிக்கி இறப்போரின் எணணிக்கையும் அதிகரித்து வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

நீரில் சிக்கி இறப்போரை காப்பாற்றி மீட்பதற்குரிய வாய்ப்பு இருந்தும், அது

தவறவிடப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். தண்ணீரில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் ஓர் இடத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் நிலையில், அதைத் தடுப்பதற்குரிய முயற்சிகள் போதுமான அளவுக்கு எடுக்கப்படுவதில்லை என அவர்கள் கூறுகின்றனர். உதாரணமாக, சென்னை மெரீனா கடற்கரையில், கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளன. ஆனால், அதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

அதேவேளையில் ஆபத்துக்காலத்தில் செயல்படக் கூடிய தீயணைப்புத் துறை, தண்ணீரில் சிக்கி உயிருக்குப் போராடும் நபரை மீட்பதற்கான நவீன கருவிகளும், பயிற்சிகளும் இல்லாமல் உள்ளனர். தண்ணீரில் சிக்கியுள்ள நபரை மீட்கும் வகையில் மாவட்டத்துக்கு ஓர் இயந்திரப் படகு உள்பட 3 படகுகள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், நீச்சல் உடை, சுவாசக் கருவி, முகத்தில் அணிந்து கொள்ளக் கூடிய கண் கண்ணாடி போன்ற அடிப்படையாகத் தேவைப்படக் கூடிய கருவிகள்கூட இன்னும் வழங்கப்படாமல் இருக்கின்றன.

இதன் விளைவாக தண்ணீரில் ஒரு நபர் சிக்கியிருப்பதாக, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றால்கூட மீட்பு நடவடிக்கையில் துரிதமாக ஈடுபட முடியாத நிலை இருப்பதாக தீயணைப்புத் துறையினர் கூறுகின்றனர்.

தீயணைப்புத் துறைக்குத் தேவையான நவீன கருவிகளும், வீரர்களுக்குத் தேவையான பயிற்சியும் அளிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நடவடிக்கைகளை அரசு எடுக்கும்பட்சத்தில் தண்ணீரில் மூழ்கி இறப்போரின் எண்ணிக்கை ஓரளவுக்கு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பயன் இல்லாத பயிற்சி

தண்ணீரில் சிக்கியிருப்போரை மீட்க, தமிழக தீயணைப்புப் படை வீரர்களுக்கு 12 மணி நேரத்துக்கும் குறைவாகவே பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த விவரம்:

தமிழக தீயணைப்புப் படைக்குத் தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு, தாம்பரம் பயிற்சி மையத்தில் 3 மாதம் பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில் நீச்சல் பயிற்சியும், தண்ணீரில் மூழ்கியோரை மீட்கும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

ஆனால் இந்தப் பயிற்சி, 12 மணி நேரத்துக்கும் குறைவான நேரமே அளிக்கப்படுகிறது. இதில் நீச்சல் பயிற்சிகூட முழுமையாக அளிக்க முடிவதில்லை என்று கூறப்படுகிறது. மேலும் தாம்பரம் பயிற்சி மையத்தில், நீச்சல் பயிற்சி அளிப்பதற்கு நீச்சல் குளமும் கிடையாது. இதனால் தீயணைப்புப் படை வீரர்களுக்கு, பயிற்சி மையத்துக்கு வெளியே உள்ள நீச்சல் குளத்திலேயே பெயரளவுக்கு பயிற்சி வழங்கப்படுவதாகப் புகார் கூறப்படுகிறது.

இந்தப் பயிற்சியின் மூலம் தீயணைப்புப் படை வீரர்களுக்கு, தண்ணீரில் சிக்கியிருப்பவரை மீட்பதற்குரிய மன தைரியமும், நம்பிக்கையும் கிடைப்பதில்லை என அத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே, இந்தப் பயிற்சியை, பலப்படுத்தும் வகையில் தாம்பரம் பயிற்சி மையத்தில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டு, தீயணைப்புப் படை வீரர்களுக்கு முழுமையான நீச்சல் மற்றும் மீட்பு குறித்தான பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும்.

நீரில் மூழ்கி இறந்தவர்கள் விவரம்

ஆண்டு 2012 2013 2014

சம்பவங்கள் 1755 1679 1769

காயமடைந்தோர் 15 13 12

இறந்த ஆண்கள் 1444 1421 1524

இறந்த பெண்கள் 403 296 375

மொத்த இறப்பு 1847 1717 1899

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT