முகப்பு
தமிழ்நாடு

விருதுநகர் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?

விருதுநகர் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், அனைத்து வார்டுகளிலும் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On : 17 செப்டம்பர், 2015 at 7:32 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 12:14 PM

விருதுநகர் நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில், அனைத்து வார்டுகளிலும் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு 50 லட்சம் லிட்டர் வரையில் தேவைப்படுகிறது. இதை முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஆனைக்குட்டம் அணை, காரிசேரி ஒண்டிப்புலி நாயக்கனூர் ஆகிய கல் கிடங்குகள் மற்றும் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் பெறப்படுகிறது. அதிலும், மழைக்காலங்களில் நீர் ஆதாரங்களில் இருப்பு காரணமாக 5 நாள்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது, மழை பெய்யாத நிலை நீடிப்பதால் 10 நாள்களுக்கு ஒருமுறையே விநியோகம் என்ற நிலையுள்ளது.

Advertisement

இதை தவிர்க்கும் வகையில் புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தாலும், அதிலிருந்து கிடைக்கும் நீரானது உப்புத்தன்மையுடன் இருப்பதால் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத நிலையிருக்கிறது. எனவே தேவையை கருத்திற்கொண்டு ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தேவையான குடிநீரை தனியார் மூலம் டிராக்டர், வாகனங்களில் கொண்டு வரப்படும் சுத்தகரிப்புச் செய்யப்பட்ட ஒரு குடம் குடிநீரை  விலை ரூ.15 கொடுத்து பெறுகின்றனர். அதிலும், ஒரு சிலநாள் தனியார் வாகனங்களில் வராததை கருத்திற்கொண்டு முன்கூட்டியே அதிக விலை கொடுத்து வாங்கி வைக்க வேண்டிய சூழ்நிலையிருக்கிறது. அதனால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்தது.

எனவே பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், நகராட்சி பொதுநிதியிலிருந்து 5-வது வார்டில் ரூ.3 லட்சம் செலவில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைத்து செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு குடம் குடிநீர் ரூ.2-க்கு விநியோகம் செய்வதால், பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, இந்நிலையத்தில் காலை, மாலை குறி்ப்பிட்ட நேரத்தில் விநியோகம் செய்யப்படுவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து வரிசையில் நின்று தண்ணீர் பிடித்துச் செல்கின்றனர். இதை பராமரிக்கவும், சில்லரைகாசுகளை வசூல் செய்யவும் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணையும் நியமித்துள்ளனர். எனவே இதேபோல் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைத்து குறைந்த செலவில் குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.

இது குறித்து நகராட்சி தலைவர் மா.சாந்தி கூறுகையில், பொதுமக்களுக்கு சுத்தகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக முதல்கட்டமாக கடந்த ஆண்டு 5-வது வார்டில் குடிநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. தற்போது, சுத்தகரிப்பு நிலையத்தால் பொதுமக்கள் அதிகம் பயனடைந்து வருவதால், படிப்படியாக ஒவ்வொரு வார்டிலும் இந்நிலையம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக பாத்திமா நகர், பர்மா காலனி, ஏ.டி.பி காம்பௌண்ட் பகுதிகளில் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.