வாசன் குழுமத்தின் அசுர வளர்ச்சிக்குப் பின்னால், அன்றைய நிதியமைச்சர் சிதம்பரமும் அவரது மகன் கார்த்தியும் இருந்தனர் என்பது ஊரறிந்த ரகசியம். கார்த்தி சிதம்பரத்தின் தொடர்புக்குப் பின்னால்தான், கணக்கில் உள்ள, கணக்கில் இல்லாத பல கோடி ரூபாய் மூலதனம் வாசன் கண் மருத்துவமனைக்குக் கிடைத்தது. அதன்மூலம் அந்தக் குழுமம் வளர்ந்தது.
இந்த உண்மையை அந்த நிறுவனமே வெளிப்படையாக விளம்பரப்படுத்திக் கொண்டது. 2011-ஆம் ஆண்டு டிசம்பர் 11-ஆம் தேதி ப.சிதம்பரத்தின் தொகுதிக்கு உள்பட்ட காரைக்குடியில் வாசன் கண் மருத்துவமனையின் 100-ஆவது கிளையை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்துவைத்ததே இதற்குச் சான்று.
அப்போதைய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக ஆளுநர் ரோசய்யா உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் இதில் கலந்து கொண்டனர். இதுதொடர்பான செய்தியும் படமும் அனைத்து முக்கிய நாளிதழ்களிலும் வெளியாகின. காட்சி ஊடகங்களும் இந்த நிகழ்ச்சியை முன்னுரிமை கொடுத்து ஒளிபரப்பின.
ஒரு கண் மருத்துவமனையின் கிளையைத் திறந்து வைக்க இந்தியாவின் பிரதமரே அழைத்து வரப்பட்ட விசித்திரத்தை காரைக்குடி மக்கள் வேடிக்கை பார்த்தனர். இதுவே பெரிய விமர்சனமாகிவிடாமல் பார்த்துக் கொள்ள அன்றைய நிதியமைச்சர் குயுக்தியாக ஒரு திட்டம் தீட்டினார்.
வாசன் கிளை தொடக்க விழாவுக்காக பிரதமர் வந்தார் என்று பேசப்படாமல் இருக்க, அப்போலோ மருத்துவனை திறப்பு விழாவையும் நடத்த ஏற்பாடு செய்தார்.
வாசன் கண் மருத்துவமனையுடன் தங்களை இணைத்துக்கொள்ள அரசு நிறுவனங்கள் பல வரிசையில் காத்திருந்தன. மக்கள் நலத் துறை, காப்பீட்டுத் துறை, அரசுத் துறை நிறுவனங்கள் என்று பெரிய பட்டியல் வாசன் குழுமத்துடன் தங்களது தொடர்பை ஏதாவது விதத்தில் ஏற்படுத்திக் கொண்டன.
வாசனின் இணையதளமான www.vasaneye.in என்கிற முகவரியில் ரிசர்வ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, பி.எஸ்.என்.எல்., தூர்தர்ஷன், அகில இந்திய வானொலி, எம்.எம்.டி.சி., ஏர் இந்தியா, இந்திய விமான நிலைய ஆணையம், இந்தியன் வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி, பி.எச்.இ.எல்., ஐ.சி.எப். ரயில் பெட்டித் தொழிற்சாலை, இந்திய உணவுக் கழகம் (எப்.சி.ஐ.), எல்லா அரசுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் என 34 அரசு நிறுவனங்கள் வாசன் குழுமத்துடன் கூட்டாளியாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
பதவியில் இருந்தால் எப்படி எல்லாம் அந்தப் பதவியைப் பயன்படுத்தித் தங்களுக்கு வேண்டிய நிறுவனங்களைக் கொள்ளை லாபம் பெற வைக்க முடியும் என்பதற்கு வாசன் கண் மருத்துவமனை ஓர் எடுத்துக்காட்டு. அரவிந்த் மருத்துவமனை, சங்கர நேத்ராலயா, அகர்வால் கண் மருத்துவமனை போன்ற நிறுவனங்கள் விழிக்கு ஒளியை மீட்டுத் தருவதைத் தொண்டாகக் கருதிச் செயல்பட்டு வரும் தமிழகத்தில், சொத்தை விற்றுக் கண் பார்வை பெறுகின்ற துர்பாக்கியத்திற்குப் பலரைத் தள்ளிய பெருமை வாசன் கண் மருத்துவமனைக்கு உண்டு.
2009 - 10இல் வெறும் ரூ.16 கோடி விற்று முதலாக இருந்த வாசன் கண் மருத்துவமனை 2010 - 11இல் ரூ.311 கோடியாகவும், 2011 - 12இல் ரூ.462 கோடியாகவும், 2012 - 13இல் ரூ.604 கோடியாகவும் உயர்ந்திடக் காரணம் மருத்துவமனைக்குக் கண் சிகிச்சைக்காக நோயாளிகள் லட்சக்கணக்கில் குவிந்ததாலா அல்லது குவிந்ததாகக் கணக்கெழுதிக் கருப்புப் பணம் கணக்கில் காட்டப்பட்டதா என்பதைக் கண்டறியத் தனியாகவே ஒரு புலன் விசாரணைதான் நடத்த வேண்டும்.
2014-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி படுதோல்வி அடைந்ததை அடுத்து, நிலைமை தலைகீழாக மாறியது. ப. சிதம்பரம் கேபினட் அமைச்சராக இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து நான்கு ஆண்டுகள், ஆண்டுதோறும் அசுர வளர்ச்சி கண்ட வாசன் கண் மருத்துவமனை, ஆட்சி கவிழ்ந்தது முதல் திடீரென்று நட்டத்தில் தள்ளப்பட்டு விடுமா என்ன?
வாசன் நிறுவனத்தின் 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கான வரவு-செலவுக் கணக்குகள் அந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட வேண்டும். ஆனால், இன்றுவரை அது தாக்கல் செய்யப்படவில்லை.
ரூ.192 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெற்ற நிறுவனம், வங்கிகளுக்கு ரூ.460 கோடி கடன் பாக்கி வைத்துள்ள நிறுவனம் வரவு-செலவுக் கணக்கை இன்றுவரை தாக்கல் செய்யாமல் காலம் தாழ்த்துவதற்கு என்ன காரணம்?
ஜே.டி.குழுமம் கோடிக்கணக்கான ரூபாயை வாசன் நிறுவனத்துக்குத் தர வேண்டிய அவசியம் என்ன? வாசன் நிறுவனத்துக்கும் சிதம்பரத்துக்குமான ரகசியத் தொடர்பு என்ன? வாசன் நிறுவனம், ஜே.டி.குழுமம் இடையிலான தொடர்பின் பின்னணி என்ன? இவை குறித்தும் ஊழல் ஒழிப்புத் துறை விரிவான அளவில் புலன் விசாரணை நடத்த வேண்டும்.
முதலில் வாசன் நிறுவனத்திடம் வருமான வரித் துறை விசாரணை நடத்த வேண்டும். முன்னரே நடந்திருக்க வேண்டிய இந்த விசாரணை ஆரம்பத்திலேயே தடுக்கப்பட்டு விட்டது.
வருமான வரித் துறை ஆணையர் ஸ்ரீனிவாச ராவைப் பணியிட மாற்றம் செய்ததன் மூலம் சிதம்பரத்தின் விசுவாசிகளான வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணையை தடம்புரளச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஒரு குறிப்பிட்ட தொகையை ஜே.டி. நிறுவனம் வரியாகச் செலுத்த முன்வந்ததை அடுத்து அந்த வழக்கையும் அதிகாரிகள் நீர்த்துப்போகச் செய்தார்கள். சீனிவாச ராவை பணியிடமாற்றம் செய்ததன் மூலம் இந்த விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடக்காமல் தடுக்க முற்பட்டனர்.
ஜே.டி.குழுமத்தில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், வருமான வரித் துறை இணை இயக்குநர் முன்னிலையில் வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு இயக்குநர் நாக பிரசாத்திடம், விசாரணை அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டு அவை இரும்புப் பெட்டியில் வைத்து பூட்டப்பட்டுவிட்டன. இதுவரை அதன் மீது எந்த நடவடிக்கையும் இல்லையே ஏன்?
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.