தமிழ்நாடு

விவசாயிகளுக்கான "கிசான் சுவிதா' செயலி: தமிழில் தகவல்கள் வழங்கப்படுமா?

கிசான் சுவிதா செயலியில் ஆங்கிலம், ஹிந்தி மொழியில் இடம் பெற்றுள்ள தகவல்களை தமிழில் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

ஆ. நங்கையார் மணி

கிசான் சுவிதா செயலியில் ஆங்கிலம், ஹிந்தி மொழியில் இடம் பெற்றுள்ள தகவல்களை தமிழில் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

வேளாண்மைத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நவீன தொழில்நுட்பங்கள் குறித்து, இந்தியாவில் உள்ள அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளும் அறிந்து பயனடையும் வகையில் "கிசான் சுவிதா' என்ற புதிய செயலி (ஆப்) தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில், கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தச் செயலி, விவசாயிகளின் விரல் நுனியில் அனைத்து விவரங்களையும் கொண்டு வந்து சேர்க்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

வேளாண்மைக்கு அடிப்படைத் தேவையான தட்பவெப்ப நிலை, மழை, ஈரப்பதம், காற்றின் வேகம் உள்ளிட்ட விவரங்கள், அந்தந்த மாவட்ட வாரியாக இடம் பெற்றுள்ளன. ஒரு நாளுக்கான தகவலாக மட்டுமல்லாமல், அடுத்தடுத்த 5 நாள்களுக்குரிய விவரங்களும், இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்திடமிருந்து பெறப்பட்டு பதிவிடப்படுகின்றன.

விளைப் பொருள்களுக்குரிய சந்தை நிலவரம், மாநிலம் வாரியாக, ஒரு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள பெருநகரம் முதல் சிறுநகரங்களில் நிலவும் விலை விவரங்கள் வெளியிடப்படுகின்றன. மேலும், கூடுதல் விலை கிடைக்கும் அருகில் உள்ள சந்தைகளின் பெயர்களும், விலையும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதேபோல, வேளாண் ஆலோசகரின் பெயரும், புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. கிசான் சுவிதா செயலி மூலமே, சம்பந்தப்பட்ட ஆலேசாகரை தொடர்பு கொண்டு சந்தேகங்களுக்கு விவசாயிகள் தீர்வு காண முடியும்.

விதை, பூச்சிக்கொல்லி மருந்து, உரம், பண்ணைக் கருவிகள், இயந்திரங்கள் விற்பனை முகவர்களின் விவரம், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பயிர்ப் பாதுகாப்பு முறைகளாக, நாற்று பருவம், வளரும் பருவம், பூக்கும் பருவம், காய்க்கும் பருவத்தில் செடிகளைத் தாக்கக் கூடிய பூச்சிகள் குறித்தும், அதைக் கட்டுப்படுத்துவற்கான வழிமுறைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளன. பூச்சிகளின் விவரம் படங்களுடன் இடம் பெற்றுள்ளன. இதில், இடம் பெறாத பூச்சிகள் குறித்து விவசாயிகளுக்குத் தெரிய வந்தால், அதைப் படம் பிடித்து இந்தச் செயலியில் பதிவேற்றம் செய்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளின் கூடுதல் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதற்காக, சேவை மையங்களும்(கால் சென்டர்) உருவாக்கப்பட்டுள்ளன. இந்தச் செயலியில் உள்ள தகவல்கள், தமிழ் மொழியில் இருந்தால் மட்டுமே விவசாயிகள் பயன்படுத்த முடியும். இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வேளாண்மை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கிசான் சுவிதா செயலி முதல் கட்டமாக ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களைச் சேர்ந்த விவசாயிகளும் பயன்பெற வேண்டும் என்பதற்காக, பிராந்திய மொழிகளிலும் கிசான் சுவிதா செயலியை வெளியிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் செயலி குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேசன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT