இசையை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமானால் தனியார் பள்ளிகளில் இசைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் வலியுறுத்தினார்.
சென்னை ஃபைன் ஆர்ட்ஸ் சார்பில் 16-ஆவது ஆண்டு இசை விழா சென்னை லஸ் முனையில் உள்ள சீனிவாச சாஸ்திரி (ரானடே நூலகம்) அரங்கில் புதன்கிழமை தொடங்கியது.
விழாவில் மூத்த வயலின் இசைக் கலைஞர் டி.ருக்மிணிக்கு "கோட்டு வாத்திய கலைஞர் நாராயண ஐயங்கார்' நினைவு விருது, ரூ.1 லட்சம், தங்கப்பதக்கம், "திக் விஜய நாதவாணி' பட்டம் ஆகியவற்றை "தினமணி' ஆசிரியர் கி.வைத்தியநாதன் வழங்கிப் பேசியது: கர்நாடக இசையிலிருந்து இனம் பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்ட கோட்டு வாத்தியம் நாராயண ஐயங்கார் நினைவாக இந்த விருது அளிக்கப்படுவது பெருமைக்குரிய ஒன்றாகும். அந்த விருதுக்கு இந்தாண்டு தேர்வு செய்யப்பட்ட டி.ருக்மிணி வயலின் வாத்தியத்துக்கே தனிப்பெரும் நளினத்தை ஏற்படுத்திய மிகச்சிறந்த கலைஞர் ஆவார்.
கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக கலைத் துறையில் மிகப் பெரிய மேதைகளாக திகழ்ந்தவர்கள் மறைந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போது இசையின் அடுத்த கட்டத்தைப் பற்றி ஒரு அச்சம் மேலிடுகிறது. ஆனால் அந்த அச்சத்தையெல்லாம் போக்கும் வகையில் இன்று எந்த இசை நிகழ்ச்சிக்குச் சென்றாலும் அத்தனை மேடைகளிலும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இளைய தலைமுறை இசைக் கலைஞர்கள் அதிகளவில் மேடையேறிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. அதைப் பார்க்கும்போது இசை காப்பாற்றப்பட்டிருக்கிறதே என்ற மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க... இன்றைய சூழலில் நிறைய இளைஞர்கள் இசை மீது உள்ள ஆர்வத்தால் இசை படிக்க வருகிறார்கள். அதே ஆர்வத்தை ரசிகர்களுக்கும் ஏற்படுத்த வேண்டியது குறித்து நாம் யோசிக்க வேண்டும். தனியார் பள்ளிக் கூடங்களிலாவது இசைக்கு முன்னுரிமை கொடுத்து அதை மாணவர்களுக்கு முறையாகச் சொல்லிக்கொடுத்தால், இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்கங்களில் ரசிகர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கும்.
மன அழுத்தத்தின் வடிகால்: மனிதனின் மன அழுத்தத்துக்கு ஒரு சிறந்த வடிகாலாகவும், அழுத்தத்திலிருந்து மனிதனை விடுவித்து இறைவன் மீது, இசையின் மீதும் சிந்தனையைத் திருப்பிவிடச் செய்த சூழலை நமது முன்னோர்-பெற்றோர் நமக்கு அளித்திருந்தனர். அதை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு நமக்கு உள்ளது. இசை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றார் கி.வைத்தியநாதன்
இசை அறிஞர் "ஸ்பென்ஸர்' வேணுகோபால்: பெண்கள் பக்கவாத்தியம் வாசிப்பது கடினம் என்று உணரப்பட்ட காலத்தில் ஆண் இசைக் கலைஞர்களுக்கு ஈடுகொடுத்து தலை சிறந்த கலைஞராக விளங்கியவர் ருக்மிணி. அவர் புல்லாங்குழல் மேதை மாலியின் கச்சேரியில்தான் முதல் முதலாக வயலின் வாசித்தார். அப்போது மாலியின் திறமைக்கு ஈடுகொடுத்து சிறப்பாக வாசித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அது அவருக்கு முதல் கச்சேரி மட்டுமல்ல; "அது முதல்' கச்சேரியாகவே இருந்தது அவருக்கு என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.
பக்கவாத்தியம் வாசிப்பவர்களுக்கு ஒவ்வொரு கச்சேரியும் ஒரு பரீட்சை. அப்படிப்பட்ட அக்னி பரீட்சையில் தேறி வந்த தலைசிறந்த கலைஞர் ருக்மிணி அலுப்புத் தட்டாமல் வாசிக்கும் அழகுணர்ச்சியும், மனோதிடமும் மிக்கவர். அவரது வாய்ப்பாட்டின் பாவம் பக்க வாத்தியத்திலும் இழையோடிக்கொண்டிருக்கும். எதையும் அதிகமாக செய்து விடக்கூடாது என்ற அறிவுறுத்தல் இசைக்கும் பொருந்தும். அதிகமாக வருத்தி வாசிக்கும்போது அநாவசியங்கள் இசையில் கலந்துவிடும். சில நேரங்களில் அவற்றை நீக்குவது கடினம். அநாவசியங்கள் குறைய குறைய இசையின் மீது ஆர்வம் கூடிக்கொண்டே போகும் என்றார் அவர்.
விழாவில் சென்னை ஃபைன் ஆர்ட்ஸின் நிறுவனர்-தலைவர் பி.என். முரளிதரன், இசைக் கலைஞர்கள் சித்ரவீணை நரசிம்மன், ஏ.கே.பழனிவேல், துர்கா பிரசாத் ஓ.எஸ்.அருண், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.