சுனாமி மறுவாழ்வு திட்டங்கள் இலக்கை எட்டியதா?
சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட இலவச அடுக்குமாடி குடியிருப்புகள் பெரும்பாலானவை விற்பனை செய்யப்பட்டுவிட்ட
தமிழ்நாடுசுனாமி மறுவாழ்வு திட்டங்கள் இலக்கை எட்டியதா?
சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட இலவச அடுக்குமாடி குடியிருப்புகள் பெரும்பாலானவை விற்பனை செய்யப்பட்டுவிட்ட
திருவொற்றியூர்: சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்ட இலவச அடுக்குமாடி குடியிருப்புகள் பெரும்பாலானவை விற்பனை செய்யப்பட்டுவிட்ட நிலையில், சுனாமி மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் திட்டங்கள் இலக்கை எட்டாத நிலை ஏற்பட்டுள்ளன.
2004-ஆம் ஆண்டு டிசம்பர் 26-இல் பல அடி உயரத்தில் எழுந்த ராட்சத அளவிலான ஆழிப்பேரலைகள் தமிழக கடற்கரையை தாக்கின. இதில், சென்னையில் காசிமேடு மீன்பிடித் துறைமுக வளாகம், கடலோர குடிசைவாசிகளின் குடியிருப்புகள் வாரி சுருட்டி கடலில் கரைந்தன. ஏராளமானோர் உயிரை கடல் பலிகொண்டது. லட்சக்கணக்கானோர் வாழ்வா திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்தச் சுனாமியால் பாதிக்கப்பட்டோரை மீட்டெடுக்க தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசு சுனாமி மறு குடியமர்த்தல் திட்டங்களை அறிவித்தன.
முதல்கட்டமாக வீடுகளை இழந்த சுமார் 2,200 குடும்பங்களுக்கும், அடுத்தடுத்து கடலோரத்தில் வசிப்போருக்கும் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
12 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் பாதித்தோரை மீட்டெடுக்க மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் திட்டங்கள் என்னவாயிற்று? என்றால் கேள்விக்குறியாகவேதான் இருக்கிறது.
கார்கில் வெற்றி நகரில்...: வடசென்னையில் காசிமேடு, திடீர் நகர், அண்ணா நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்டோர் திருவொற்றியூர் கார்கில் நகரிலும், தென் சென்னையில் பாதிக்கப்பட்டோருக்கு செம்மஞ்சேரி கண்ணகி நகரிலும் மறு குடியமர்த்தும் திட்டங்கள் செய்யப்பட்டன.
இதில், காசிமேடில் சுமார் 2200 குடும்பங்கள் அப்போதே மீட்கப்பட்டு உடனடியாக கார்கில் நகரில் தாற்காலிகக் கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டனர். தாழ்வான பகுதி என்பதால் அடுத்தடுத்துப் பெய்த மழையால் கூடாரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன.
இதையடுத்து, மாநகராட்சி சார்பில் தார் சீட்டுகளாலான கூரை வேயப்பட்ட குடியிருப்புகள் வரிசையாக அமைக்கப்பட்டன. இதனிடையே நிரந்தரக் குடியிருப்புகளைக் கட்டும் பணி தொடர்ந்து நடைபெற்ற வந்த நிலையில் தார்சீட்டால் அமைக்கப்பட்ட கூரை வீடுகள் அடுத்தடுத்து ஏற்பட்ட தீவிபத்துகளில் முற்றிலுமாகச் சாம்பாலாயின.
விஷப் பூச்சிகளின் நடுவே..: பின்னர் குறைந்த அளவு வசதிகள் நிரந்தர வீடுகள் என்ற பெயரில் எண்ணூர் அனல்மின் நிலையம் எதிரில் வீட்டு வசதி வாரியத்துக்குச் சொந்தமான இடத்தில் 180 சதுர அடியில் தனித்தனியாக குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டன.
அவசரமாக கட்டமைக்கப்பட்ட இந்த வீடுகளில் தீ விபத்திலிருந்து மீண்ட இந்தக் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டனர். புதர் மண்டிய பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் அச்சத்திலே வசிக்கின்றனர். தொடர் நிவாரண உதவிகள்தான் இவர்களது வாழ்வாதாரம் உள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளில்..: இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டிமுடிக்கப்பட்டதையடுத்து சுமார் 4 ஆண்டுகளுக்குப் முன்பு படிப்படியாக இவர்கள் நிரந்தரவீடுகளில் குடியமர்த்தப்பட்டனர். மேலும், புதை சாக்கடைத் திட்டம், குடிநீர்த் தொட்டிகள், அங்காடி, மீன் விற்பனைக் கூடம், அங்கன்வாடி, தொடக்கப் பள்ளிகள் என அனைத்தும் வசதிகளும் நிரம்பியவையாக இருந்தன. மேலும் சுமார் 400 பேருக்கு தண்டையார்பேட்டையில்
அமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து,
சுனாமி மறுவாழ்வு குடியமர்த்தல் திட்டங்கள் நிறைவு பெற்று தற்போது மாநகராட்சி,
குடிசைமாற்று வாரிய நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இலவசமாக வழங்கப்பட்ட வீடுகள் விற்பனையா?
இந்த நிலையில், நிவாரணங்கள், தாற்காலிக கூடாரங்கள், கூரை வேயப்பட்ட வீடுகள், பாதி நிரந்தர வீடுகள் என தொடர்ந்து சுமார் 8 ஆண்டுகள் வரை பல்வேறு துயரங்களுக்கிடையே பயணித்த இவர்கள் நிரந்தர வீடுகளில் குடியமர்த்தப்பட்டதால் மறுகுடியமர்த்தல் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாகவே அரசு நம்புகிறது.
ஆனால், எர்ணாவூர் சுனாமி நகர் என அழைக்கப்படும் இந்தப் பகுதியில் பல்வேறு திட்டங்களின் கீழ் குடிசை மாற்று வாரியம் மூலம் சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இதில், பல வீடுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும், பலர் வாடகைக்கு விட்டுள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த வீடுகளில் சமூக விரோதிகள் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் கணிசமாகக் குடியேறிவிட்டனர். பெயரளவிற்கே சுனாமி பாதிக்கப்பட்டோருக்கான குடியிருப்பாக இருந்து வருவதை காணமுடிகிறது.
இந்த நிலையில், 12 ஆண்டுகளில் சுனாமி மறுவாழ்வு மறு குடியமர்த்தல் திட்டம் குறித்து முழுமையாக ஆய்வு செய்தால்தான் உண்மை நிலை தெரியவரும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.