முகப்பு
தமிழ்நாடு

வழித்தட ஆக்கிரமிப்புகளால் ஊருக்குள் புகும் யானைகள்!

கடந்த 15 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள யானைகள் வழித்தடத்தில் மனிதர்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள் காரணமாக, யானைகள்- மனிதர்கள் இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே வருகிறது.

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:32 PM
பகிர்:

கடந்த 15 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் உள்ள யானைகள் வழித்தடத்தில் மனிதர்கள் மேற்கொண்ட ஆக்கிரமிப்புகள் காரணமாக, யானைகள்- மனிதர்கள் இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே வருகிறது.

அண்மையில்கூட கோவை மாவட்டம், மதுக்கரையில் காட்டு யானை ஊருக்குக்குள் புகுந்துவிட, அது கும்கிகளின் உதவியுடன் பிடிக்கப்பட்டு டாப்ஸ்லிப் முகாமுக்கு அனுப்பப்பட்டது.

பெரும்பாலான இடங்களில் யானைகள் ஊருக்குள் புகுந்ததாகவே மக்கள் சொல்கிறார்கள். ஆனால், யானைகளின் வழித்தடம் ஆக்கிரமிக்கப்பட்டதால் அவை மனிதர்கள் வசிக்கும் இடங்களுக்கு வருகின்றன. யானைகளுக்கு நினைவாற்றல் அதிகமுண்டு. எனவே, அவை தங்களது வழித்தடத்தை மறப்பது சிரமம். கோவை, ஒசூர், தருமபுரி, ஈரோடு, சத்தியமங்கலம் உள்ளிட்ட வனப் பகுதிகளில்தான் யானைகள், மனிதர்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகமாக நிகழ்கின்றன. இவற்றில், கோவை மாவட்ட வனப் பகுதி இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது.

Advertisement

கோவையில் வழிபாட்டுத் தலங்கள், தங்கும் விடுதிகள், கல்லூரிகள், வீடுகள் என ஆக்கிரமிப்புகளுக்கு அளவே இல்லை. எப்போதும்போல வனத் துறையினர் யானைகள் ஊருக்குள் வரமால் தடுப்பதற்கான முயற்சிகளை மட்டுமே மேற்கொள்கின்றனர்.

வழியில்லாமல் தவிக்கும் யானைகள்: சுற்றுச்சூழல் மாற்றம், ஆக்கிரமிப்புகள் காரணமாக யானைகள் கூட்டம் சிதறி, சிறு சிறு குழுக்களாக இடம் பெயர்கின்றன. ஒரு கூட்டத்தில் முன்பெல்லாம் 20- 30 யானைகள் இருக்கும். ஆனால், இப்போது 6- 10 யானைகள் மட்டுமே உள்ளன. இதுவும் மனிதர்களின் மீதான தாக்குதலுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. சில யானைகள் கூட்டத்தை விட்டுப் பிரிந்து ஊருக்குள் புகுந்துவிடுவதால் பிரச்னைகள் எழுகின்றன.

இதுகுறித்து இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தைச் சேர்ந்த பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி (கோவை) கூறியதாவது:

காட்டை ஒட்டியுள்ள பகுதிகளில் தனியார் தங்கும் விடுதிகள் அதிகமாகிவிட்டதால், யானைகளின் வழித்தடம் மறைக்கப்படுகிறது. யானைகள் தங்கும் இடத்தை மாற்றிக் கொண்டே இருக்கும். காட்டில் அவற்றுக்குத் தேவையான நீர் ஆதாரங்கள், உணவுகள் போன்றவை இல்லாததால், மனிதர்கள் வசிக்கும் இடங்களை நோக்கி நகர்கின்றன.

மேலும், யானைகள் மனிதர்களைத் தாக்குவதற்கு முக்கியமான காரணம் கடந்த 10 ஆண்டுகளில் அவற்றுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சல், மனிதர்களின் ஆக்கிரமிப்பு, இடையூறு போன்றவையே. அதனால், அவை மனிதர்களை எதிரியாகக் கருதத் தொடங்கிவிட்டன. நமது முன்னோர்கள் யானைகளைப் புரிந்து கொண்டு வனத்தையும் பாதுகாத்தனர். ஆனால், இப்போதுள்ள நிலைமை வேறு.

யானைகள் மனிதர்களைத் தாக்காமல் இருப்பதற்கு அகழி வெட்டுவது, மின் வேலி அமைப்பது போன்றவை தாற்காலிக ஏற்பாடுதான்.

யானைகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்தி, இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலமே, யானைகளையும், மனிதர்களையும் காப்பாற்ற முடியும் என்றார் அவர்.

வனத் துறை என்ன செய்திருக்கிறது?: நீர், உணவை தேடி மனிதர்களின் வசிப்பிடங்களுக்கு யானைகள் வருகின்றன. எனவே, வனப் பகுதிக்கு உள்பட்ட சில இடங்களில் தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தண்ணீர்த் தொட்டியில் நிலத்தடி நீர் மோட்டார் மூலம் எடுக்கப்பட்டு தேக்கப்படுகிறது. இந்த மோட்டார்களுக்கு தேவையான மின்சாரம் சூரிய ஒளி மூலம் கிடைக்கிறது.

மேலும், யானைகளுக்குப் பிடித்தமான உணவு வகைகள், செடிகள், மரங்கள் போன்றவை வன எல்லையில் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றையும் மீறி யானைகள் வராமல் தடுப்பதற்கு கோவை மாவட்ட வனப் பகுதி முழுவதும் அகழிகள் வெட்டப்பட்டுள்ளன. யானைகளை விரட்ட 136 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்குத் தேவையான பட்டாசு, உபகரணங்கள் ஆகியவை வனத் துறையின் சார்பில் வழங்கப்பட்டுள்ளன. இவர்கள் யானைகள் ஊருக்குள் வந்தால் அவற்றை வனத்துக்குள் விரட்டி அடிக்கும் பணியை மேற்கொள்கின்றனர்.

"வன உயிரினங்கள் ஊருக்குள் வந்தால்

இடையூறு செய்ய வேண்டாம்'

வனத்தை ஒட்டியுள்ள விளைநிலங்களில் வன விலங்குகளை கவரும் கரும்பு, வாழை போன்றவை பயிர் செய்யப்படுகின்றன. இதனால், வனத்துக்குள் போதிய உணவு கிடைத்தாலும், சில வன உயிரினங்கள் ருசிக்காக வெளியே வந்து பயிர் சேதத்தை ஏற்படுத்துகின்றன.

வனப்பகுதிகளில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் வயதான மாமிச உண்ணிகளும், பல் சரியாக இல்லாத, காயங்கள் ஏற்பட்ட மாமிச உண்ணிகளும் காட்டில் உள்ள விலங்குகளை வேட்டையாட இயலாத நிலை இருக்கிறது. அவை வனத்திற்கு அருகில் உள்ள கிராமத்திற்குள் புகுந்து கால்நடைகளை தாக்குகின்றன. இதை தவிர, கிராமத்தில் வசிப்பவர்கள், வனத்துறையின் தொடர் எச்சரிக்கைகளையும் மீறி தங்கள் கால்நடைகளை தேடி அடிக்கடி இரவு நேரத்திலும், அதிகாலை நேரத்திலும் வனத்துக்குள்ளும் அருகிலும் செல்வதால் வனவிலங்குகளால் தாக்கப்படுகின்றனர்.

இப்போது மனிதர்கள், விலங்குகளால் தாக்கப்படுவதைத் தடுப்பதற்கு பல்வேறு வகையான திட்டங்களை வனத்துறை செயல்படுத்தி வருகிறது. மேலும், வனத்துறை அவ்வப்போது விடுக்கும் எச்சரிக்கைகளை பின்பற்றி அதனை ஏற்று வனத்துக்குள் செல்லாமல் இருக்க வேண்டும் என்று வனத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments