மின்சார ரயில்களில் இனி பகலிலும் பாதுகாப்பு...!
சென்னையில் பகல் நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் தலா 5 ரயில்வே பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னையில் பகல் நேரத்தில் இயக்கப்படும் மின்சார ரயில்களில் தலா 5 ரயில்வே பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
சென்னை, புறநகரில் இயங்கும் மின்சார ரயில்களில் பொதுவாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை ரயில்வே பாதுகாப்பு படையினர் ரோந்தில் ஈடுபடுவது வழக்கம். ஆனால், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி அண்மையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர், பகல் நேரத்திலும் பாதுகாப்புப் பணியில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
காலியிடங்களால் குறைந்த பாதுகாப்பு? பாதுகாப்புப் பணியில் மூவாயிரம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில், இரண்டாயிரம் பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். இதன்படி, 40 சதவீத இடங்கள் வரை காலியாக இருக்கிறது.
ரயில் பெட்டிகள் திடீரென தீப்பிடிப்பது, பயணத்தின்போது பெண் பயணிகளுக்கு பாதுகாப்பின்மை, குழந்தைக் கடத்தல், வெடிகுண்டு விபத்து என தொடர்கதையாகி வரும் சம்பவங்கள் ரயில் பயணம் பாதுகாப்பானதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இதுபோன்ற தொடர் சம்பவங்களுக்குப் பாதுகாப்பு குறைபாடே என்று கூறப்படும் நிலையில், ஊழியர் பற்றாக்குறை காரணமாக முழுமையான பாதுகாப்பை ரயில்வே நிர்வாகம் உறுதிப்படுத்த முடியவில்லை என உயர் அதிகாரிகள்
தெரிவிக்கின்றனர்.
இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் பலர்..! 2012-ஆம் ஆண்டில் எர்ணாகுளம் - ஷோர்ணூர் பயணிகள் ரயிலில் பயணம் செய்த கேரள மாநிலம் ஷோர்ணூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு, ரயில் தண்டவாளத்தில் தூக்கி வீசப்பட்டார்.
இந்தச் சம்பவத்தையடுத்து, ரயில் பாதுகாப்பு குறைபாடு குறித்து கேரள உயர் நீதிமன்றத்தில் சில தன்னார்வ அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. வழக்கை விசாரித்த நீதிமன்றம், கேரள மாநில ரயில் நிலையங்களில் பாதுகாப்பைப் பலப்படுத்த உத்தரவிட்டது.
இதனால், சென்னை ரயில்வே கோட்டத்தில் பணிபுரிந்த பாதுகாப்பு படையினர் கேரளத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால் ஏற்பட்ட காலிப் பணியிடங்கள் இதுவரை நிரப்பப்படவில்லை என்று ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாற்றுப் பணியில்..: இதுமட்டுமின்றி, குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களும் முழுமையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதில்லை என்ற புகாரும் கூறப்படுகிறது.
ஊழியர் பற்றாக்குறை காரணமாக பணியிலிருப்பவர்கள் நாள் ஒன்றுக்கு தொடர்ந்து 12 மணி நேரம் பணியில் ஈடுபட வேண்டியுள்ளதால், உடல் நலக்குறைவு, மனச் சோர்வு போன்ற காரணங்களால் சிலர் உடல் தகுதியை இழக்கின்றனர்.
இவர்கள் மாற்றுத் துறைக்கு அனுப்பப்படுகின்றனர். 2015-ஆம் ஆண்டில் மட்டும் 35 பேர் மாற்று பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எனவே, ஊழியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டால்தான் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என தெற்கு ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாள்தோறும் சோதனை நடைபெறுமா?
இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த அதிகாரிகள் கூறியது:
பயணிகளை பாதுகாப்பதே தலையாய கடமை. ஊழியர் பற்றாக்குறை காரணமாக இந்தப் பணியை முழுமையாகச் செய்ய நிர்வாகம் அனுமதிப்பதில்லை.
சென்னை சென்ட்ரல் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள், "லக்கேஜ் ஸ்கேனர்', "மெட்டல் டிடக்டர்' ஆகியன பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பயணிகள் அனைத்து நாள்களும் சோதனை செய்யப்பட்டு
அனுப்பப்படுவது இல்லை.
பாபர் மசூதி இடிப்பு தினம், சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே பயணிகள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
இந்த நிலை மாறினால்தான் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்றார்.