தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் தேசியக் கவி பாரதியாரின் தந்தைக்குச் சொந்தமான இடம் பராமரிப்பின்றியும், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலும் இருப்பதால், அதை அரசு மீட்டு தொன்மையான இடமாகப் பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
பாரதியாரின் தந்தை சின்னசாமி ஐயர், எட்டயபுரத்தில் இருந்தபோது பருத்தி அரைவை ஆலை கட்டத் திட்டமிட்டார். எட்டயபுரத்தின் மேற்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிதப்புரம் என்ற கிராமத்தின் அருகில் கட்டட வேலைகளைத் தொடங்கினார். 1892 ஆம் ஆண்டு, பிப்ரவரி 6ஆம் தேதி, ஒரு பங்கு ரூ. 100 என்ற விகிதத்தில் 198 பங்குத் தொகையுடன் அந்த ஆலைப் பணிகள் தொடங்கப்பட்டன. நிறுவனங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஆலைக்கான இயந்திரங்கள் அனைத்தும் மதுரை வரை வந்தபோதிலும், ஆங்கிலேயரின் இடையூறால் எட்டயபுரம் வந்து சேரவில்லை. இதனால், ஆலையில் உற்பத்தியைத் தொடங்க முடியவில்லை.
ஆங்கிலேயர் செய்த சதியால் தனது தந்தை மனமுடைந்து இறந்துவிட்டதாகவும், அதனாலேயே தனது படிப்பு பாதிக்கப்பட்டதாகவும் பாரதியார் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பாரதியாரின் குடும்பத்தினர் யாரும் எட்டயபுரத்தில் இல்லாததால், பிதப்புரம் இடம் தற்போது எந்தவிதப் பாரமரிப்புமின்றி வேலிக்கருவைச் செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. ஆலையின் கட்டடங்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பாரதி ஆய்வாளரும், ரகுநாதன் கல்வி அறக்கட்டளைச் செயலருமான இளசை மணியன் கூறியதாவது:
பாரதியாரின் தந்தைக்குச் சொந்தமான இடம் தற்போது சிதிலமடைந்து காணப்படுகிறது. சிலர் ஆக்கிரமிக்கும் நிலையில் அந்த இடம் உள்ளது. பாரதியாரின் வரலாற்றுடன் தொடர்புடைய அந்த இடத்தைக் கையகப்படுத்தி பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்.
அந்த இடத்தில் எவ்விதமான தகவல் பலகையும் கிடையாது. இடத்தைச் சுற்றி வேலி அமைத்து தொன்மையான இடங்கள் மற்றும் பொருள்கள் பாதுகாக்கும் சட்டப்படி பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதுகுறித்து எழுத்தாளர் நாறும்பூநாதன் கூறியதாவது: பாரதியார் கணிதமும், இயந்திரத் தொழில்நுட்பமும் கற்று பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவரது தந்தை திருநெல்வேலி ம.தி.தா. இந்து கலாசாலைக்கு அவரைப் படிக்க அனுப்பினார். அவர் வெளிநாட்டுக்குச் சென்று படித்து, தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சியர் பதவிக்கு வர வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.
இதற்கிடையில், ஆங்கிலேயர் இடையூறு காரணமாக, பருத்தி அரைவை ஆலையில் உற்பத்தியைத் தொடங்க முடியவில்லை. தனது பால்ய வயதில் ஏற்பட்ட இந்தத் துயரமான சம்பவமே, பாரதியார் ஆங்கிலேயரை விஷம் போல் வெறுக்கக் காரணமாக அமைந்தது. வெள்ளைக்காரர்கள் செய்த சதியின் விளைவாகவே இந்தச் சூழ்நிலை ஏற்பட்டது என்பது அவரது ஆழ்மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
ஒருவேளை இந்த ஆலை தொடங்கப்பட்டு, பாரதியாரும் மேற்படிப்பு படித்திருந்தால் தமிழகத்துக்கு ஒரு கவிஞன் கிடைத்திருப்பான்; ஆனால், உணர்ச்சி கொப்புளிக்கும் ஒரு தேசியக் கவி கிடைத்திருக்காமல்கூடப் போயிருக்கலாம்.
சின்னசாமி ஐயரால் அரைகுறையாக விடப்பட்ட, சிதிலமடைந்த கட்டடங்கள் உள்ள இடத்தை மீட்க வேண்டும் என்றார் அவர்.
ஆங்கிலேயர் செய்த சதியால் தனது தந்தை மனமுடைந்து இறந்துவிட்டதாகவும், அதனாலேயே தனது படிப்பு பாதிக்கப்பட்டதாகவும் பாரதியார் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பாரதியாரின் குடும்பத்தினர் யாரும் எட்டயபுரத்தில் இல்லாததால், பிதப்புரம் இடம் தற்போது எந்தவிதப் பாரமரிப்புமின்றி வேலிக்கருவைச் செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது. ஆலையின் கட்டடங்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. அந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.