தெற்கு ரயில்வேயில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு அறிமுகம்
தெற்கு ரயில்வேயில் ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி, பயோ மெட்ரிக் விரல் ரேகை வருகைப் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது.
தெற்கு ரயில்வேயில் ஊழியர்களின் எதிர்ப்பையும் மீறி, பயோ மெட்ரிக் விரல் ரேகை வருகைப் பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய ரயில்வேயின் நான்கு மண்டலங்களில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயில், இந்த முறைக்கு தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்ததால், இது நடைமுறைக்கு வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டது.
இப்போது தெற்கு ரயில்வே அலுவலகங்களிலும், சென்னை ரயில்வே கோட்ட அலுவலங்களிலும் பயோ மெட்ரிக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
ஊழியர்கள் தங்களின் வருகைப் பதிவை விரல் ரேகை மூலம் பதிவு செய்யும் முறை, மத்திய உள்துறை அமைச்சகத்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த பயோ மெட்ரிக் அடையாள முறையை இந்தியன் ரயில்வேயில் உள்ள அலுவலகங்களிலும், முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் ரூ.4.4 கோடியில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எந்தெந்த அலுவலகங்களில் இவற்றை அமல்படுத்துவது என்பதை மண்டல ரயில்வே முடிவு செய்யும்.
பின்னர், இந்த முறையானது அனைத்து உற்பத்தி மையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருந்தது.
எதனால் பயோ மெட்ரிக்?: நேரம் தவறாமையை அனைத்து ஊழியர்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்ற காரணத்துக்காகவே, பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என்று ரயில்வே உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:
ஊழியர்கள் பலர் அலுவலகங்களுக்குத் தொடர்ந்து தாமதமாக வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுபோன்ற ஊழியர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
ரயில்வே அலுவலகங்களில் உயரதிகாரிகளில் இருந்து சாதாரண ஊழியர்கள் வரை வருகைப்பதிவு குறித்த விஷயத்தில் நேரம் தவறாமையை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். ஊழியர்கள், அதிகாரிகள் குறித்த நேரத்திற்கு அலுவலகம் வருவதை ரயில்வே அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்றார் அந்த அதிகாரி.
ஆதார் எண் அடிப்படை: ஆதார் எண்ணை அடிப்படையாகக் கொண்ட பயோ மெட்ரிக் தொழில்நுட்பம் மூலம் ஊழியர்கள் வருகையைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் ரயில்வேயில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இப்போது, வருகைப் பதிவேட்டு புத்தகத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கையெழுத்திடுவதன் மூலம் அவர்களது வருகை பதிவு செய்யப்படுகிறது. இந்த நடைமுறைக்குப் பதிலாக பயோ மெட்ரிக் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.
வருகைப் பதிவேடு இணையதளம்: ஊழியர்களின் அன்றாட வருகைப் பதிவேட்டை அனைவரும் காணும் வகையில் ஜ்ஜ்ஜ்.ஹற்ற்ங்ய்க்ஹய்ஸ்ரீங்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், பயோ மெட்ரிக் முறையில் 1.30 லட்சம் ஊழியர்களின் வருகைப் பதிவேட்டு விவரம் இடம் பெறும்.
இப்போதுள்ள நடைமுறைப்படி, மத்திய அரசு ஊழியர் மாதத்துக்கு இரு முறை மட்டும் அலுவலகத்துக்கு அதிகபட்சமாக ஒரு மணி நேரம் தாமதமாக வரலாம். இதற்கு மேல் தாமதமாக வந்தால், அந்த ஊழியருக்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறையில் அரை நாள் கழிக்கப்படும். நியாயமான காரணங்களுக்காக தாமதமாக வர நேரிட்டால், சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு சலுகை அளிக்கும் அதிகாரம் அவர்களது உயரதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.