கோயம்பேடு - ஷெனாய் நகர் இடையே சுரங்கப் பாதையில் விரைவில் மெட்ரோ சோதனை ஓட்டம்
கோயம்பேடு - ஷெனாய் நகர் இடையிலான சுரங்கப் பாதையில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஏப்ரலில்
கோயம்பேடு - ஷெனாய் நகர் இடையிலான சுரங்கப் பாதையில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஏப்ரலில் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் திட்டத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எழும்பூர் நேரு பூங்காவில் இருந்து கோயம்பேடு வரை சோதனை ஓட்டம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், நேரு பூங்கா சுரங்கத்தில் சிக்னல் பணி முழுமை பெறாததால், கோயம்பேடு முதல் செனாய் நகர் வரை முதல் கட்டமாக சோதனை ஓட்டம் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையில் ரூ. 20 ஆயிரம் கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. முதல் கட்டமாக, ஆலந்தூர்- கோயம்பேடு இடையிலான மெட்ரோ ரயில் சேவை 2015-ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட்டது.
பல்வேறு இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாகவும், சுரங்கப் பாதையில் பணிகள் 85 சதவிதம் நிறைவடைந்துவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விரைவில் இயக்கப்படவுள்ள மெட்ரோ ரயில்கள்: வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை முதல் பாதையிலும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 2-ஆவது பாதையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளது. முதல் வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம், சென்ட்ரல், புதிய தலைமைச் செயலகம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஜெமினி, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை, சைதாபேட்டை ஆகிய ரயில் நிலையங்கள் இடம்பெறும்.
இரண்டாவது வழித்தடத்தில் சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர், திருமங்கலம் என ஒன்பது ரயில் நிலையங்கள் உள்பட மொத்தம் 19 சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
சோதனை ஓட்டம் முடிந்தும் இயக்கப்படாத மெட்ரோ ரயில்: கோயம்பேடு - அண்ணா நகர் டவர் இடையே சுரங்கப் பாதையில் முதல் முறையாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் 2015-ஆம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது. அப்போது, 85 டன் எடை கொண்ட மெட்ரோ ரயில் எஞ்ஜினை வைத்து மேற்கொள்ளப்பட்ட 2 கி.மீ. தொலைவுக்கான சோதனை ஓட்டம் திருப்தி அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இன்னும் முழு மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில், எழும்பூர் முதல் சென்ட்ரல் இடையிலான சுரங்கப் பணிகள் விரைவாக நடைபெறுகின்றன.
வரும் செப்டம்பரில்...: மெட்ரோ ரயில் பணிகள் அனைத்தும் திட்டமிட்டப்படி நடந்தால் விமான நிலையம் - எழும்பூர் இடையே வரும் செப்டம்பரில் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த வழித்தடத்தில் நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மீட்டர் தூரம் வரை டனல் போரிங் இயந்திரம் சுரங்கம் தோண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.