தமிழ்நாடு

உலகத் திருக்குறள் பேரவை பொதுச் செயலாளர் ந.மணிமொழியன் காலமானார்

மதுரையைச் சேர்ந்த உலகத் திருக்குறள் பேரவைப் பொதுச்செயலரும், பிரபல தொழிலதிபருமான (காலேஜ்ஹவுஸ்), ந.மணிமொழியன் (71) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

DIN

மதுரையைச் சேர்ந்த உலகத் திருக்குறள் பேரவைப் பொதுச்செயலரும், பிரபல தொழிலதிபருமான (காலேஜ்ஹவுஸ்), ந.மணிமொழியன் (71) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
இவர், மதுரையில் உலகத் திருக்குறள் பேரவையை தொடங்கி 38 ஆண்டுகளாக நடத்தி வந்துள்ளார். மலேசியா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உலகத் திருக்குறள் பேரவையை தொடங்கியுள்ளார்.
திருக்குறள் மீது பற்றுக்கொண்ட அவர், திருக்குறள் பயணம் உள்ளிட்ட நான்கு இலக்கிய நூல்களை எழுதியுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ச்செம்மல் விருது, சுவாமி கிருபானந்த வாரியார் விருதுகள் உள்ளிட்ட 14 விருதுகளையும் பெற்றுள்ளார்.
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயிலின் மேற்கு கோபுரத் திருப்பணியை அவர் மேற்கொண்டிருந்தார். உலகத் திருக்குறள் பேரவைப் பொதுச்செயலர், தமிழ்நாடு ஆயிரவைசியர் சங்க மாநிலத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்தார். அண்மையில் அவரது "அகவை 70' என்ற இலக்கிய விழா மதுரையில் நடைபெற்றது.
அவரது இறுதிச்சடங்கு மதுரை சொக்கிகுளம் புலபாய் தேசாய் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் திங்கள்கிழமை பகலில் நடைபெறவுள்ளது. அவருக்கு கமலாதேவி என்ற மனைவியும், 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். தொடர்புக்கு 98430 53550.
குன்றக்குடி அடிகளார் இரங்கல்: குன்றக்குடி பொன்னம்பல தேசிகர் விடுத்துள்ள இரங்கல் செய்தி: உலகத் திருக்குறள் பேரவையின் பொதுச்செயலர் ந.மணிமொழியனார் மறைவு திருக்குறள் அறிஞர்களுக்கும், தொண்டர்களுக்கும், மாணவர்களுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
நடமாடும் திருக்குறள் பேரவையாக விளங்கிய அந்த பெருந்தகையின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகிற்கு ஈடு செய்யமுடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருக்குறள் கோபுரம் சாய்ந்து விட்டது - கவிஞர் வைரமுத்து: கவிஞர் வைரமுத்து விடுத்துள்ள இரங்கல் செய்தி: திருக்குறள் மணிமொழியன் காலமானார் என்ற செய்தி அறிந்து கலங்கிப் போனேன். மதுரை மாநகரின் மாமனிதர் மறைந்து போனார். புலவர்க்குப் புலவராகவும், புரவலர்க்குப் புரவலராகவும் திகழ்ந்த ஒரு தமிழ்க் கொடையாளரை இழந்துவிட்டோமே என இலக்கிய இதயம் சிதறி நிற்கிறது. குறளுக்கு பொருள் தந்தார், தான் ஈட்டிய பொருள் தந்தும் குறள் வளர்த்தார். அவர் குறளைக் கற்றவர் மட்டும் அல்லர். கற்றபின் அதற்குத் தக நின்றவரும் அவரேதான்.
எங்கள் தமிழ் உலகம் தோள்கொடுக்கும் ஒரு தோழமையை இழந்துவிட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு நான்கு கோபுரங்கள். ஆனால், மதுரையில் திருக்குறளுக்கு ஒரே ஒரு கோபுரம்தான். அது மணிமொழியன் தான். அதுவும் சாய்ந்து விட்டதே என்று ஓய்ந்து நிற்கிறோம். அவரை இழந்து வாடும் பண்பாடுமிக்க அவர்தம் குடும்பத்தார்க்கும், நிறுவன ஊழியர்களுக்கும், தமிழ் அன்பர்களுக்கும், இலக்கிய அமைப்புகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 22 மாவட்டங்களில் மழை!

ரஷிய எண்ணெய் கொள்முதலை குறைத்த இந்தியா, சீனா! வெள்ளை மாளிகை

உளுந்தூர்பேட்டை அருகே லாரி மீது கார் மோதியதில் 3 பேர் பலி

Dinamani வார ராசிபலன்! | Oct 26 முதல் Nov 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு வருவதாக பல கோடி மோசடி: அதிமுகவினர் 3 பேர் கைது

SCROLL FOR NEXT