தமிழ்நாடு

வருமான வரித் துறை புகார்: 3 அமைச்சர்கள் மீது காவல்துறை வழக்கு

DIN

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் அத்துமீறலில் ஈடுபட்டதாக 3 தமிழக அமைச்சர்கள் மீது போலீஸார் 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்த விவரம்: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கிரீன்வேஸ் சாலை வீட்டில் வருமான வரித்துறையினர் கடந்த 7-ஆம் தேதி சோதனை நடத்தும்போது, அங்கு வந்த அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் வீட்டுக்குள் செல்ல முயன்றனர். ஆனால் சோதனை நடைபெறுவதால், அங்கு பாதுகாப்புக்கு நின்ற மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. அவர்கள் மத்திய பாதுகாப்புப் படை வீரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அவர்கள் 3 பேரும் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தனராம்.
மேலும் வருமான வரித்துறையினரின் அனுமதியின்றி 3 பேரும் விஜயபாஸ்கர் வீட்டுக்குள் இருந்தனர்.
இதேபோல நடிகர் சரத்குமார் வீட்டில் சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, அங்கு சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ வீட்டுக்குள் செல்ல முயன்றார். அப்போது அங்கு மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள், அவரை உள்ளே விட மறுத்தனர். மத்திய பாதுகாப்புப் படை வீரர்களிடமும், வருமான வரித்துறை அதிகாரிகளிடமும் கடம்பூர் ராஜூ தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
அமைச்சர்கள் மீது வழக்கு: இச்சம்பவம் தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி வருமான வரித்துறை, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் கரண் சின்காவிடம் அறிவுறுத்தியது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கரண் சின்கா உத்தரவிட்டார். இதையடுத்து அபிராமபுரம் போலீஸார் பவன்குமார் என்ற அதிகாரியிடம் புகார் பெற்றனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் அபிராமபுரம் போலீஸார், சட்டவல்லுநர்களிடம் ஆலோசனை செய்தனர். பின்னர் வழக்குப் பதிவதற்குரிய ஆவணங்களையும், தடயங்களையும் போலீஸார் சேகரித்தனர். இந்நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட அமைச்சர்கள் காமராஜ், உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கரின் கார் ஓட்டுநர் உதயகுமார் ஆகியோர் மீது அரசு ஆவணங்களைப் பறித்துச் செல்லுதல், அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு ஊழியர்களை அச்சுறுத்துதல், வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல் ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT