முகப்பு
தமிழ்நாடு

தினகரனின் முடிவால் முடிவுக்கு வந்த குழப்பங்கள்: புதிய அமைச்சரவை உருவாகிறது

அதிமுகவிலிருந்து ஒதுங்குவது என டிடிவி தினகரன் முடிவு எடுத்து அறிவித்துள்ளதையடுத்து தமிழக அரசியலில் எழுந்த குழப்பங்கள் ஓய்ந்து, அமைச்சரவையில் அடுத்த சில நாள்களுக்குள் மாற்றங்கள்

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:19 PM
பகிர்:

அதிமுகவிலிருந்து ஒதுங்குவது என டிடிவி தினகரன் முடிவு எடுத்து அறிவித்துள்ளதையடுத்து தமிழக அரசியலில் எழுந்த குழப்பங்கள் ஓய்ந்து, அமைச்சரவையில் அடுத்த சில நாள்களுக்குள் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் இருந்து மூன்று பேருக்கு அமைச்சர்கள் பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதில், முதல்வர் பதவி யாருக்கு என்பதை இருதரப்பும் அமர்ந்து பேசி முடிவு செய்ய உள்ளன.
தியானம் முதல் தியாகம் வரை... முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி தனது பதவியை ராஜிநாமா செய்தார். இதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதன் எதிரொலியாக அவரது தலைமையில் தனி அணி உருவானது. மூத்த நிர்வாகிகள் பி.எச்.பாண்டியன், மதுசூதனன், 10 எம்.எல்.ஏ.க்கள், 10-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் எனப் பலரும் அவருக்கு ஆதரவு அளித்தனர்.
முன்னதாக, சட்டப் பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வி.கே.சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்க முடியாத நிலை ஏற்பட்டது. அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்தார்.
இந்த நிகழ்வுகளுக்கு இடையே, சொத்துக் குவிப்பு வழக்கில் பிப்ரவரி 14-ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. அதில், சசிகலா குற்றவாளி எனத் தீர்ப்பு அளிக்கப்பட்டு அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
முதல்வராக எடப்பாடி பழனிசாமி: இதனால், தமிழகத்தில் எழுந்த அரசியல் சிக்கல்களுக்கு இடையே எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார். அவர் தனது பொறுப்புகளை பிப்ரவரி 16-ஆம் தேதி ஏற்றுக் கொண்டார். பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்ற நிலையில், அதிமுக துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார்.
அரசியல் பரபரப்புகள் அடங்கிய சூழ்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டதுடன், அதிமுக என்ற பெயரை இரு அணிகளும் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தனித்தனியாகப் பெயரைத் தேர்ந்தெடுத்தனர்.
தேர்தலில் வாக்காளர்களுக்கு அதிகளவு பணம் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தேர்தல் ரத்து ஒருபுறமிருக்க, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டது.
இந்தச் சோதனை அனைத்து அமைச்சர்களிடமும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சோதனைகள் நடைபெற்று முடிந்தவுடன், இரட்டை இலைச் சின்னத்தை மீட்பதற்காக இடைத்தரகருக்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் மீது புகார் எழுந்தது. இந்தப் புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவை அனைத்தும் அமைச்சர்களிடமும், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளிடமும் கடுமையான அதிர்ச்சிகளை உருவாக்கியது. இதையடுத்து, கடந்த 14-ஆம் தேதி டிடிவி தினகரனை அவரது இல்லத்தில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் சந்தித்தனர். கட்சியில் இருந்து விலகும்படி கேட்டுக் கொண்டனர். இதற்கு டிடிவி தினகரன் எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து, அவரை கட்சியில் இருந்தும், ஆட்சியில் இருந்தும் விலக்கி வைப்பதாக அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.
இன்று குழு அமைப்பு: அதிமுக (அம்மா) அணியை வழிநடத்த குழு அமைக்கப்படும் என்று மூத்த அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார். இந்த குழு குறித்த அறிவிப்பு வியாழக்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழு ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய அமைச்சரவையை அமைப்பது குறித்த இறுதி முடிவுகளை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைக்குள் புதிய அமைச்சரவை குறித்து முடிவெடுக்கப்பட்டு அதன் பதவியேற்பு நிகழ்வு நடைபெறும் என்று உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →