தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் ஆடும் கபடநாடகம்: கனல் கக்கும் ஸ்டாலின்! 

DIN

சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் கபட நாடகம் நடத்தி தமிழக மாணவர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி துரோகம் இழைத்துள்ளார் என்று சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்  

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

“நீட் தேர்வு பிரச்னை முடிந்து போன ஒன்று”, என மக்களவைத் துணைத் தலைவர் திரு. மு.தம்பித்துரை அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாநில பாடத்திட்டத்தில் படித்த 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள், தங்களது பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு நிவாரணம் கிடைக்காதா என்று ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மக்களவைத் துணைத் தலைவர் இப்படி அறிவித்திருப்பது, இதுவரை மாநிலத்தில் உள்ள ‘குதிரை பேர’ அதிமுக அரசும், மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும் “நீட் பிரச்னைக்குத் தீர்வு காணுவோம்”, என்று கூறிவந்தது வெறும் ஏமாற்று நாடகம் என்பது நிரூபணமாகி விட்டது.

நீட் தேர்வு செல்லுமா அல்லது செல்லாதா என்ற வழக்கு 16 மாதங்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் உள்ளது. அப்படி வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு அவசர அவசரமாக அனைத்து மாநிலங்கள் மீதும் நீட் தேர்வை வலிந்து வம்படியாகத் திணித்து சமூகநீதியை சாகடித்து இருக்கிறது.

குளறுபடிகள் நிறைந்த நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மீது ஏதோ ஒரு வன்மத்துடன் திணித்துவிட்டு, இன்றைக்கு “நீட் தேர்வுக்கு நல்ல தீர்வு காணப்படும்”, என்று மத்திய - மாநில அரசுகள் மிகப் பிரமாதமாக நாடகத்தை அரங்கேற்றி தமிழக மாணவர்களை வஞ்சித்திருக்கின்றன.

4 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி, தமிழக நலன்களையம் உரிமைகளையும் அடகு வைத்துவிட்டு நிற்கும் இந்த ‘குதிரை பேர’ அதிமுக அரசு. “சிறப்பாகச் செயல்படத் தொடங்கியிருக்கிறது”, என்று மாநில பா.ஜ.க.வினர் பாராட்டுப் பத்திரம் வாசிப்பது, இரு கட்சிகளுக்கு இடையில் இருக்கும் ரகசிய உறவையும், குறுகிய நோக்கத்தையும் அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஆகவே, நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் கபட நாடகம் போடுவதை உடனடியாகக் கலைத்துவிட்டு, இதுவரை மத்திய பா.ஜ.க. அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்கள் அனைத்தையும் பொதுமக்கள் பார்வைக்கு மாநில அரசு வெளியிட வேண்டும்.

நீட் விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் பதவியை ராஜினாமா செய்ய அவராகவே முன்வரவேண்டும். “நீட் தேர்வு பிரச்னை முடிந்து போன ஒன்று”, என்று அறிவித்திருக்கும் மக்களவைத் துணைத் தலைவர் தம்பித்துரை உள்ளிட்ட மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிமுக எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் தோல்வியை ஒப்புகொண்டு ராஜினாமா செய்து விட்டு, முதலமைச்சருடன் சேர்ந்து தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

ஐபிஎல் தொடரிலிருந்து நாடு திரும்பும் இங்கிலாந்து வீரர்கள்; எந்த அணிக்கு பாதிப்பு?

குருப்பெயர்ச்சி ஒருவருக்கு பலமா? பலவீனமா?

SCROLL FOR NEXT