தமிழ்நாடு

ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுக பொருளாளர்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அதிரடி பேட்டி

DIN


திண்டுக்கல்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளே கட்சிப்பணி ஆற்றி வருகிறோம். அதன்படி அதிமுக பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் தான் செயல்பட்டு வருகிறார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.

அதிமுகவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கும் வரை கட்சியின் பொருளாளராகவும், நிதி அமைச்சராகவும் ஓ.பன்னீசெல்வம் இருந்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலாவை முதல்வராக்க பெரும்பான்மையான நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் விலகினார். இதையடுத்து பன்னீர்செல்வம தரப்பில் ஒரு அணியும், பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா தலைமையில் ஒரு அணி என இரு அணிகளாக அதிமுக உருவானது.

பொருளாராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பதவி பறிக்கப்பட்டு அமைச்சர் சீனிவாசனுக்கு வழங்கப்பட்டது. மதுசூதனனிடம் இருந்த அவைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டு அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டது.

முதல்வர் கனவில் இருந்துவந்த சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்கு சென்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பு தனது குடும்ப உறுப்பினர் டிடிவி. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார்.

ஆர்.கே. இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக இடைத்தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ள இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தில்லி திறைக்கு சென்றார். பின்னர் கட்சியில் இருந்து ஒதுங்கி இருக்கப் போவதாக அறிவித்த தினகரன் திகார் சிறையில்இருந்து வெளியே வந்த பிறகு மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்தார். தினகரனை ஒதுக்கி வைக்க முடிவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கட்சிப்பணிகளில் அவரை ஒதுக்கி வைத்தனர். இதனால் தினகரன் தலைமையில் சில எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு ஆதரவு தெரிவித்தனர்.

எனவே, கட்சிக்குள் மேலும் பிளவு ஏற்பட்டது. தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும் கடந்த புதன்கிழமை (ஆக 23) இணைந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும். அவருக்கு தாங்கள் அளித்த ஆதரவை இழந்துவிட்டார் என தமிழக பொறுப்பு ஆளுநரிடம் தனித்தனியாக கடிதம் அளித்தனர்.

அணிகள் இணைப்புக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர், ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட சில முக்கிய பதவிகள், பொறுப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில்,  அதிமுகவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நியமித்த பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம்தான். அதன் பிறகு அணிகள் பிளவால் எனக்கு சசிகலா பொருளாளர் பதவியை வழங்கினார். அதன்படி சில நாட்கள் அந்த பணியை நான் செய்து வந்தேன். ஆனால் தற்போது சசிகலாவையும், தினகரனையும் கட்சி பதவியில் இருந்து நீக்க நேற்று நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் நியமித்த மற்றும் கட்சியில் இருந்து விலக்கிய எந்த உத்தரவுகளும் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே, தற்போது வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகளே கட்சிப்பணி ஆற்றி வருகிறோம். அதன்படி பொருளாளர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் கவனித்து வருகிறார் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

வேட்டையன் கதை வித்தியாசமானது: ராணா டக்குபதி

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

SCROLL FOR NEXT