முகப்பு
தமிழ்நாடு

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை என்பது நடைமுறையில் சாத்தியமில்லை

வெள்ளிக்கிழமை முதல் (செப். 1) வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ரூ. 500 அபராதம் அல்லது 3 மாதம் சிறைத்தண்டனை

தமிழ்நாடு

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாவிட்டால் 3 மாதம் சிறை என்பது நடைமுறையில் சாத்தியமில்லை

வெள்ளிக்கிழமை முதல் (செப். 1) வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ரூ. 500 அபராதம் அல்லது 3 மாதம் சிறைத்தண்டனை

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:47 PM
பகிர்:

வெள்ளிக்கிழமை முதல் (செப். 1) வாகனம் ஓட்டும்போது அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ரூ. 500 அபராதம் அல்லது 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற தமிழக அரசின் சமீபத்திய அறிவிப்பிற்கு பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 
இது குறித்து மோட்டார் வாகன விபத்துகள் வழக்குகளில் தொடர்ந்து ஆஜராகி வரும் முன்னாள் அரசு சிறப்பு வழக்குரைஞர் எஸ்.சுரேஷ்குமார் கூறியது: 
சாலைப் போக்குவரத்து குறித்த வழக்குகளைக் கையாளும் மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தும் பொறுப்பு போக்குவரத்துக் காவல்துறையிடம் உள்ளது. இச்சட்டப்படிதான் தண்டனை, அபராதம் விதிக்கப்படுகிறது. 1989-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் போக்குவரத்துத் துறை இயங்கி வருகிறது. கடந்த 2016-இல் மோட்டார் வாகன சட்டத்தில் கொண்டு வரப்பட்ட 16 வகையான திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இதில் அபராத தொகையின் அளவு உயர்த்தப்பட்டதே தவிர சிறைத்தண்டனை கொண்டுவரப்படவில்லை. மோட்டார் வாகனச்சட்டம் 177 முதல் 210 பி வரை உள்ள மொத்த பிரிவுகளிலும் சிறைத்தண்டனை கிடையாது. 
சிறைத் தண்டனை யாருக்கு?: விபத்து ஏற்படுத்திவிட்டுத் தலை மறைவாகிவிடுதல், உயிரிழப்பு ஏற்படும் என்று தெரிந்தும் விபத்தை ஏற்படுத்துதல், உயிரிழப்பை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடுதல் போன்ற குற்றங்களுக்கு அதிகபட்சமாக சுமார் 7 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனை வழங்க முடியும். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்குவது விதி மீறல்தான். வாகனத்தை இயக்குபவர் அதற்குரிய உரிமம் பெற்றிருக்க வேண்டும். மாறாக அந்த உரிமத்தை வாகனத்தை இயக்கும்போதெல்லாம் சட்டைப்பையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதல்ல. புதிய மோட்டார் வாகன சட்டத்தில் ஓட்டுநர் ஒருவர் வாகனத்தை இயக்கும் போது உரிமம் இல்லாமல் இருந்தால் அதற்கு ரூ.500 முதல் 5000 வரை அபராதம் மட்டுமே விதிக்க முடியும். இது தவிர சிறைத்தண்டனை குறித்து ஏதும் கூறப்படவில்லை. அபராதத்தைக் கட்டத் தவறினால் குறைந்தபட்ச சிறைத்தண்டனை என்பது அனைத்து சட்டப் பிரிவுகளிலும் பொதுவாகக் கூறப்படுவதாகும். இதே நடைமுறை இங்கும் பொருந்துமே தவிர ஒரு விசாரணை அதிகாரி நினைத்தவுடன் நேரடியாகச் சிறைச்சாலைக்கு அனுப்பிவிட முடியாது. 
அபராதத்தைச் செலுத்த கால அவகாசம் உண்டு: ஒருவேளை அசல் ஓட்டுநர் உரிமத்திற்குப் பதிலாக அதன் நகலை வைத்துள்ளார் என்றால், போக்குவரத்துச் சோதனையின்போது அசல் ஓட்டுநர் உரிமத்தை காண்பிக்க அவகாசம் கோரலாம், மேலும் குற்றவியல் நடுவரிடம் அபராதத் தொகையை செலுத்த அவகாசம் கோரலாம். இந்த சட்டத்தின் கீழ் அபராதத் தொகையை சம்பந்தப்பட்ட காவலரிடம் உடனே கட்ட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ரசீதை பெற்று 15 நாளைக்குள் நீதிமன்றத்தில் கட்டலாம். இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின்படி எந்த அதிகாரியும் எந்த குற்ற வழக்கிலும் விசாரணை இன்றி நேரடியாகத் தண்டனை வழங்க முடியாது. அதற்கு முதல் தகவல் அறிக்கை, நீதிமன்ற விசாரணை போன்ற நடைமுறைகள் உள்ளன. ஆகவே மூன்று மாத சிறைத்தண்டனை என்பது இது போன்ற ஓட்டுநர் உரிமம் விவகாரத்தில் கொண்டுவர முடியாது. தமிழக அரசின் அறிவிப்பு பொதுமக்களை பீதிக்கு உள்ளாக்குவது போல்தான் உள்ளது என்றார் சுரேஷ்குமார்.
எதிர்பாராமல் நடப்பதே விபத்து:
இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கே.பி.விவேகானந்தன் கூறியது, தமிழக அரசின் திடீர் உத்தரவு மக்களை பீதியடையச் செய்துள்ளது உண்மைதான். விபத்துகள் அதிகரிக்க அசல் வாகன உரிமம் வைத்திருக்காததுதான் காரணம் என்பது எவ்விதத்திலும் ஏற்புடையது இல்லை. விபத்து என்பதே எதிர்பாராமல் நடப்பதுதான். விபத்துக்குக் காரணம் வாகனம் ஓட்டியவராகவும் இருக்கலாம், விபத்தில் பாதிக்கப்பட்டவராகவும் இருக்கலாம். விபத்துகளுக்கு உள்நோக்கம் கற்பிக்க முடியாது. எனவேதான் மோட்டார் வாகனச் சட்டத்தில் பெரும்பாலும் குறைந்த பட்ச தண்டனையே வழங்கப்படுகிறது. 
விபத்து நடந்த இடத்திற்கு வரும் போலீஸார், விபத்துக்கான காரணம் என்ன? யார் தவறிழைத்தவர்? என உடனடியாக முடிவு செய்துவிட முடியாது. 
பாதிக்கப்பட்டவர்கள் மீதான மனிதாபிமானம்: போலீஸாரைப் பொருத்தவரை ஒரு விபத்தில் பாதிக்கப்பட்டவரை புகார்தாரராகவும், பாதிக்கப்படாதவரை தவறிழைத்தவராகவும்தான் பெரும்பாலும் வழக்குப் பதிவு செய்கின்றனர். இதற்குக் காரணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்க வேண்டும் என்ற மனிதாபிமானமே. மது அருந்தி வாகனம் ஓட்டுவதுதான் விபத்துகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. விபத்து நடைபெற்ற பிறகு மருத்துவமனையில் அளிக்கப்படும் விபத்துக் குறிப்பு (அஸ்ரீஸ்ரீண்க்ங்ய்ற் தங்ல்ர்ழ்ற்) புள்ளி விவரங்களின்படி இதனை உறுதி செய்ய முடியும். எந்த ஒரு விசாரணை அதிகாரியிடமும் தண்டனை வழங்கும் அதிகாரத்தை ஒப்படைத்துவிட முடியாது. காரணம் அவர்கள் சுய விருப்பத்தின்படி செயல்பட வாய்ப்பு உள்ளது. எனவே தமிழக அரசு இந்த விஷயத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும்வகையில் பொறுமையாகச் செயல்பட வேண்டும்.
மாற்றுத் தீர்வுகள் என்ன?
வாகன ஓட்டுநர்கள் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்கத்தான் வேண்டுமா? அல்லது மாற்று எதுவும் இல்லையா? என்ற பொதுவான கேள்விகள் குறித்து இணையதள பயன்பாட்டில் இருக்கும் செயலி வடிமைப்பாளர் கோகுல் விஸ்வேஷ்வரன் கூறியது: 
ஓட்டுநர் உரிமம் தொலைந்து விட்டால் மாற்று உரிமம் பெறுவதற்கு 20 நாட்கள் வரை ஆகும் நிலை உள்ளது. அதுவரை ஒருவர் எங்குமே செல்லமுடியாது என்பது நடைமுறைக்கு ஒத்துவராது. சிறிய செயலி மூலம் நமது பாக்கெட்டில் அத்தனை அசல் ஆவணங்களையும் பராமரிக்கலாம். 
டிஜிட்டல் லாக்கர்: மத்திய அரசும், தரைவழிப்போக்குவரத்து அமைச்சகமும் இணைந்து உருவாக்கியுள்ளடிஜிலாக்கர் (ஈண்ஞ்ண்கர்ஸ்ரீந்ங்ழ்) செயலியில் நமது அசல் ஆவணங்களை பதிவேற்றிக் கொள்ளலாம். நம்மை சோதிக்கும் அதிகாரியிடம் செல்லிடப்பேசி மூலமாகக் காட்டலாம். இந்த டிஜிலாக்கர் பயன்பாட்டில் தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்துள்ளன. 
ஒருவருடைய ஆதார் எண் மூலம் இதில் பதிவு செய்து அசல் ஆவணங்களைப் பதிவேற்றலாம். இதை சோதனை அதிகாரியிடம் காண்பிக்கலாம்.
ஆதார் அட்டை, விரல் ரேகை முறை: ஓட்டுநர் உரிமத்தை ஆதார் எண்ணுடன் இணைத்துவிட்டால் போக்குவரத்துக் காவலர் சோதிக்கும் போது ஓட்டுநர் உரிமம் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள முடியும் . இதற்கு அதிக செலவும் ஆகாது. அதிகபட்சம் இந்த கருவி ரூ.2000 க்குள் தான் இருக்கும். 
ஸ்மார்ட் கார்டு: தற்போதுள்ள ஓட்டுநர் உரிமத்தை ஸ்மார்ட் கார்டாக மாற்றிவிடலாம். இதன் மூலம் உரிமம் தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள முடியும். எனவே தேவையற்ற பீதியை பொதுமக்களிடம் திணிப்பதை விட அரசே நவீன முறைகளைக் கையாள வேண்டும்.

அசல் வாகன உரிமம் இல்லாவிட்டால் ரூ.500 அபராதம்
வாகன ஓட்டிகள் வெள்ளிக்கிழமை (செப்.1) முதல் அசல் வாகன உரிமம் வைத்திருக்காவிட்டால் ரூ.500 அபராதம் அல்லது 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களோ, போக்குவரத்து விதிமுறைகளை மதிக்கின்ற வாகன ஓட்டிகளோ பயப்படத் தேவையில்லை. 
தவறு செய்கிறவர்களிடமிருந்து மட்டுமே அசல் வாகன ஓட்டுநர் உரிமம் பெறப்படும். இதற்காக எந்தவொரு சிறப்பு ஏற்பாடும் செய்யப்படவில்லை. வழக்கமான முறையிலேயே சென்னையில் வாகன சோதனை நடைபெறும் என சென்னை காவல்துறையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.
நகல் வாகன உரிமம் பெற...
அசல் வாகன உரிமம் கட்டாயம் என்ற உத்தரவையடுத்து, இந்த ஆவணம் இல்லாத வாகன ஓட்டிகள், புதிய நகல் வாகன உரிமம் பெறும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதனால் சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.
நகல் வாகன உரிமம் பெற என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அசல் வாகன உரிமம் தொலைந்துவிட்டதாக தங்கள் வசிப்பிடத்துக்குட்பட்ட காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளித்து, அதனை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற சான்றிதழை காவல் துறையிடமிருந்து பெற வேண்டும்; அசல் வாகன உரிமம் தொலைந்துவிட்டதாக ரூ.20 மதிப்புள்ள பத்திரத் தாளில் சுய சான்று அளிக்க வேண்டும்; இந்தச் சான்றுகளுடன் வசிப்பிடத்துக்குட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வந்து உரிய படிவத்தில் (மருத்துவரின் சான்றிதழும் இணைக்கப்பட வேண்டும்) இரு சக்கர வாகனமாக இருந்தால் ரூ.370 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்; இரு சக்கர வாகனம் -கார் இணைந்த நகல் வாகன உரிமமாக இருந்தால் ரூ.430 செலுத்த வேண்டும்.
இவ்வாறு விண்ணப்பித்த பிறகு, தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் 
விண்ணப்பதாரர்கள் குறித்த விவரம் மின்னஞ்சலில் அனுப்பப்படும். 10 அல்லது 15 நாள்களுக்குள் நகல் வாகன உரிமம் அளிக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →