தமிழ்நாடு

மழைக்கால நிவாரணத் தொகைக்கு காத்திருக்கும் உப்பளத் தொழிலாளர்கள்!

தி. இன்பராஜ்

தொடர் மழை காரணமாக தூத்துக்குடியில் உள்ள உப்பளங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்பதால் தொழிலையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ள உப்பளத் தொழிலாளர்கள், தங்களுக்கு மழைக்கால நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

உப்பு உற்பத்தியில் சிறந்த மாவட்டமாகத் திகழ்ந்த தூத்துக்குடி, தற்போது அதற்கான அனைத்துத் தகுதிகளையும் இழந்து வரும் நிலையில் உள்ளது. 
தூத்துக்குடி புறநகர்ப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் புகை துகள்களால், தரம் குறைந்த உப்பு என்ற முத்திரையும் குத்தப்பட்டுள்ளது.

இதனால், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியில் சிறப்பிடம் பெற்றிருந்த தூத்துக்குடி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குஜராத் மாநிலத்திலிருந்து இரண்டு கப்பல்களில் உப்பு இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பளங்கள் உள்ளன. தூத்துக்குடி, முள்ளக்காடு, ஆறுமுகனேரி, வேம்பார் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் உப்பளங்கள் உள்ளன. அண்மையில் பெய்த தொடர் மழையில் உப்பளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பளங்கள் அனைத்தும் மழைநீரால் சூழ்ந்து, ஏரி போல காட்சியளிக்கின்றன.

மழை நீரோடு மண்ணையும் சேர்த்துக் கொண்டு வந்த காட்டாற்று வெள்ளம் உப்பளங்களில் தேங்கியுள்ளதால் இன்னும் மூன்று மாதங்களுக்கு உப்பு உற்பத்தியை தொடங்க முடியாத நிலைக்கு உப்பள உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். உப்பளத் தொழிலாளர்களில் பெரும்பாலானோருக்கு மாற்றுத் தொழில் இல்லாததால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

மழைக் காலங்களில் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களுக்கும் வழங்குவதுபோன்று, தங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கடந்த சில ஆண்டுகளாகவே உப்பளத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அவர்களின் கோரிக்கையை ஏற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தின்போது உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணத் தொகையாக மாதம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தார். அதிமுக தேர்தல் அறிக்கையிலும் இந்த அறிவிப்பு இடம்பெற்றது. ஆனால், இதுவரை எந்தவித நிவாரணத்தொகையும் வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட உப்பளத் தொழிலாளர்கள், மாவட்ட ஆட்சியரிடம் அண்மையில் மனு அளித்தனர். முதல்வரின் தனிப்பிரிவுக்கும் தங்களது கோரிக்கை விவரங்களை மனுவாக அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அழகுமுத்து பாண்டியன் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பளங்களில் பணியாற்றுகின்றனர். இந்தத் தொழிலையே நம்பியுள்ள தொழிலாளர்களுக்கு மாற்றுத் தொழிலுக்கு செல்ல வாய்ப்பும் இல்லை. ஆண்டு முழுவதும் உப்பு வணிகம் நடைபெறுகிறது. ஆனால் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு மழை காரணமாக வேலைவாய்ப்பு வழங்கப்படுவதில்லை. எனவே, மாதம் ரூ. 5 ஆயிரம் வீதம் அந்த மூன்று மாதங்களுக்கு மட்டும் நிவாரணத்தொகை வழங்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றார் அவர்.

உப்பளத் தொழிலாளர்களின் பாதிப்பு குறித்து அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மா. கிருஷ்ணமூர்த்தி கூறியது: மண்பாண்டத் தொழிலாளர்கள், மீனவர்களைப் போல் உப்பளத் தொழிலாளர்களுக்கும் தொழில் பாதிக்கப்பட்ட காலங்களில் நிவாரணத்தொகை வழங்குவதே அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான தீர்வு ஆகும். 
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உப்பள நிலங்கள் தற்போது குத்தகை அடிப்படையில் தனியாரிடம் உள்ளன. அந்த நிலங்களை மீட்டு உப்பளத் தொழிலில் பெரும்பகுதியாக தொழில் புரியக்கூடிய பெண் தொழிலாளர்களைக் கொண்டு மத்திய உப்பளத் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கினால் விளிம்பு நிலையில் உள்ள பெண் தொழிலாளர்களின் வாழ்வு சிறக்கும். மேலும், உப்பளத் தொழிலாளர்களுக்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என்றார் அவர்.

தமிழக அரசின் நிவாரணத்தொகை அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர் உப்பளத் 
தொழிலாளர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

கனடா சாலை விபத்தில் இறந்த இந்திய தம்பதி அடையாளம் தெரிந்தது

SCROLL FOR NEXT