தமிழ்நாடு

ஜி.ஜி. ரவி சகோதரர் மீது கொலை வெறித் தாக்குதல்: துப்பாக்கிச் சூடு நடத்தியதால் தப்பிச் சென்ற கும்பல்

DIN

மறைந்த தொழிலதிபர் ஜி.ஜி. ரவியின் சகோதரர் மீது மர்மக் கும்பல் திங்கள்கிழமை கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. அதில் அவர் காயமடைந்தார். அவருடைய பாதுகாப்புக்காக சென்ற காவலர் துப்பாக்கியால் சுட்டதையடுத்து, மர்மக் கும்பல் தப்பியோடியது.
வேலூர் மாநாகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜி.ஜி. ரவி. இவரது சகோதரர் ஜி.ஜி. ரமேஷ். இவர்கள் கல்லூரி ஒன்றை நிர்வகித்து வந்தனர். மேலும் பைனான்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வந்தனர். இவர்களுக்கும், ரவுடி குப்பன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு ஜி.ஜி. ரமேஷ் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக குப்பன், அவரது கூட்டாளி மகாலிங்கம் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர். பிறகு அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
அதைத் தொடர்ந்து, கடந்த 2015-ஆம் ஆண்டு ஜி.ஜி. ரவியை கொலை செய்ய முயன்றபோது, ரவியின் உறவினர்களால் மகாலிங்கம் கொலை செய்யப்பட்டார். இதில் ஜி.ஜி. ரவி காயமடைந்தார். 
இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ஜி.ஜி. ரவி வேலூரில் ஒரு திருமண மண்டபத்தின் முன்பு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ரவுடி குப்பனை போலீஸார் கைது செய்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டதால் ஜி.ஜி. ரவியின் சகோதரர் ஜி.ஜி.செல்வம் (49) போலீஸ் பாதுகாப்பு கேட்டுப் பெற்றிருந்தார். அதனால் அவருடன் தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் துப்பாக்கியுடன் அவருக்கு பாதுகாப்பு அளித்து வந்தார். 
இந்நிலையில் திங்கள்கிழமை இரவு தோட்டப்பாளையம் பகுதியில் ஜி.ஜி. செல்வம் சென்றபோது சுமார் 6 பேர் கொண்ட கும்பல் போலீஸ் பாதுகாப்பையும் மீறி, அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. அவரை கத்தியால் வெட்டியதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 
துப்பாக்கியால் சுட்ட காவலர் : அப்போது பாதுகாப்புக்காக உடனிருந்த காவலர், அந்த கும்பலை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதற்குள் அந்த கும்பல் தப்பியோடியது.
காயமடைந்த செல்வம் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனர். 
தகவல் அறிந்த வேலூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இச்சம்பவத்தால் வேலூர் தோட்டப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வேலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி பகலவன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார். ஜி.ஜி. செல்வத்தை தாக்கிவிட்டு தலைமறைவானவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஜி.ஜி. செல்வம் கொலை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவத்திலும் ரவுடி குப்பனுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT