வெற்றிவேல் முன்ஜாமீன் மனு: விசாரணை ஒத்திவைப்பு
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விடியோவை வெளியிட்டது தொடர்பாக முன்ஜாமீன் கோரி டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் ஜனவரி 3 ஆம்
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை விடியோவை வெளியிட்டது தொடர்பாக முன்ஜாமீன் கோரி டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேல் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் ஜனவரி 3 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
டிடிவி தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விடியோ காட்சிகளை கடந்த 20 ஆம் தேதி வெளியிட்டார். இதுகுறித்து ஆர்.கே.நகர் தேர்தல் நடத்தும் அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதுபோல ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் செயலாளர் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாசதுக்கம் போலீஸ் நிலையத்தில் மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளில் காவல்துறையினர் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆர்.பொங்கியப்பன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.