தமிழ்நாடு

கூடுதல் கிராமப் பணிகளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்த கிராம நிர்வாக அலுவலர்கள்

DIN

தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிச் சுமை காரணமாகக் கூடுதல் கிராமப் பணிகளைக் கிராம நிர்வாக அலுவலர்கள் திங்கள்கிழமை திரும்ப ஒப்படைத்தனர்.
ஒரத்தநாடு அருகேயுள்ள தலையாமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் எம். வெங்கடேசன் (34) பணிச்சுமை காரணமாக ரெட்டிபாளையம் ரயில்வே கேட் அருகே பிப். 3ஆம் தேதி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இதுதொடர்பாக தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கிராம நிர்வாகப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்றும், கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக உள்ள கூடுதல் கிராமப் பணிகளைச் சேர்த்து பார்த்து வந்ததைத் திரும்ப ஒப்படைப்பது எனவும் முடிவு செய்தனர்.
இதன்படி, தஞ்சாவூர் வட்ட அலுவலகத்தில் 17 கிராம நிர்வாக அலுவலர்கள் கூடுதல் கிராமத்தின் கணக்குப் புத்தகம், வரைபடம் உள்பட 21 ஆவணங்களை திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.
அப்போது, கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் சொர்ண. அறிவழகன் தெரிவித்தது: தஞ்சாவூர் வட்டத்தில் 63 வருவாய் கிராமங்கள் உள்ளன. மொத்தம் 63 கிராம நிர்வாக அலுவலர்கள் இருக்க வேண்டும். ஆனால் 45 கிராம நிர்வாக அலுவலர்கள்தான் உள்ளனர். மீதமுள்ள 18 கிராமங்களின் கணக்குகளைக் கூடுதலாக 16 கிராம நிர்வாக அலுவலர்கள் கவனித்து வருகின்றனர். ஏற்கெனவே, கிராம நிர்வாக அலுவலர்களுக்குப் பணிச்சுமை அதிகமாக உள்ளது.
இந்நிலையில் கூடுதல் பணியைக் கொடுத்து மேலும் பணிச்சுமையைத் திணிக்கின்றனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் ஸ்மார்ட் கார்டு கணக்கு எடுக்கும் பணியில் இருக்கும்போது விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் பணி மேற்கொள்ள உத்தரவு வந்தது. இந்தப் பணி முடிவதற்குள் வறட்சி நிவாரணம் கணக்கு எடுக்கும் பணி தொடங்க வேண்டும் என பணிக்கு மேல் பணியை மாவட்ட நிர்வாகம் திணித்து வருகிறது.
எனவே, தஞ்சாவூர் வருவாய் கிராமத்தில் கூடுதல் பணி செய்த திருவேதிக்குடி, கூடலூர், மானாங்கோரை, திட்டை, நல்லிச்சேரி, மருங்குளம், குருவாடிப்பட்டி, கல்விராயன்பேட்டை, மடிகை, கள்ளப்பெரம்பூர் 2-ம் சேத்தி, சீராளூர், பிள்ளையார்நத்தம், சக்கரைசாமந்தம், ஆலக்குடி முதன்மை, நரசநாயகபுரம், கொண்டவிட்டான்திடல், நா. வல்லுண்டான்பட்டு, வேலூர் ஆகிய 18 கிராமங்களில் கூடுதல் பணி பார்த்து வந்த 16 கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர்புடைய கூடுதல் கிராமத்தின் 21 ஆவணங்களை தஞ்சாவூர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்துள்ளனர். அடுத்து, தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் புதன்கிழமை (பிப்.8) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ள உள்ளோம் என்றார் அறிவழகன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT