தமிழ்நாடு

வீரப்பனை வீழ்த்தியது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி: பாதுகாப்பு ஆலோசகர் விஜயகுமார்

DIN

வீரப்பன் வழக்கில் கிடைத்த வெற்றி தனி மனிதர் ஒருவருக்கு கிடைத்தது கிடையாது; கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி என ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே.விஜயகுமார் தெரிவித்தார்.
தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 20 ஆண்டுகளாக மறைந்திருந்து, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த சந்தனக் கடத்தல் வீரப்பன், கடந்த 2004 -ஆம் ஆண்டு தமிழக சிறப்பு அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தப் படைக்கு தலைமை தாங்கியவரும், மத்திய உள்துறை அமைச்சக மூத்த பாதுகாப்பு ஆலோசகருமான கே.விஜயகுமார், வீரப்பனுக்கு எதிரான வேட்டையில் தனது அனுபவங்களை "வீரப்பன்: சேசிங் தி பிரிகண்ட்' என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் நூலாக எழுதியுள்ளார்.
இந்தப் புத்தகத்தில் வீரப்பன் செய்த கொலைகள், சமூகவிரோதச் செயல்கள், கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இந்தப் புத்தகத்தை அண்மையில் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார். சென்னையில் இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணன் புத்தகத்தை வெளியிட, ஓய்வு பெற்ற டி.ஜி.பி. வால்டர் தேவாரம் அதனை பெற்றுக் கொண்டார். விழாவில், வீரப்பன் வழக்குத் தொடர்பாக விஜயகுமார் பேசியது:
காவல் துறையில் எனக்கு பல வழிக்காட்டிகள் இருக்கின்றனர். அவர்களில் முதலாவதாக இருப்பவர் ஐ.ஜி. எப்.வி.அருள், அடுத்தப்படியாக இருப்பவர் டி.ஜி.பி. வால்டர் தேவாரம். தமிழ்நாடு சிறப்பு அதிரடிப் படை வால்டர் தேவாரத்தினால் உருவாக்கப்பட்டு, அவர் தலைமையில் இயங்கியதாகும்.
நாங்கள் வீரப்பன் வேட்டையில் இருந்த போது, கென்ய நாட்டில் வனத்தில் பதுங்கி வாழ்ந்த ஒரு போராளி குறித்த புத்தகத்தை தேவாரம் எனக்கு அளித்தார். அந்த புத்தகம் வீரப்பனைப் பிடிப்பதற்கு மிகவும் உதவியாக இருந்தது.
ரூ.25 கோடிக்கு பேரம்: அதிரடிப்படை கொடுத்த நெருக்கடியின் காரணமாக, வீரப்பனின் கூட்டாளி கோவிந்தன், அதிரடிப்படை அதிகாரிகளில் ஒருவராக இருந்த சஞ்சய் அரோராவிடம் ரூ.25 கோடி தருவதாகவும், அதில் ரூ.5 கோடியை பிரதமரின் நிவாரண நிதிக்கு செலுத்தும்படியும், மீதி பணத்தை வைத்துக் கொள்ளும்படியும் தெரிவித்தார்.
அதற்கு பலனாக, அதிரடிப்படையினரை அங்கிருந்து திரும்ப பெறுமாறும் கூறினார். இவ்வாறு வீரப்பன், பல்வேறு வகைகளில் அதிரடிப்படை பிடியில் இருந்து தப்பிக்க முயன்றார்.
ஜாதகத்தில் நம்பிக்கை: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவத்துக்குப் பின்னர், சேலம், மேட்டூர் பகுதிகளில் 500 ரூபாய் நோட்டுகள் அதிகமாக புழங்குவதாக எங்களுக்கு உளவுத் தகவல் கிடைத்தது. மேலும் வீரப்பனுக்கு ஜாதக நம்பிக்கை அதிகமாக உண்டு என்பதும் எங்களுக்கு தெரிய வந்தது. இதனால் அவரது ஜாதகத்தை பெற்று, அதையும் பார்த்தோம். அந்த ஜாதகத்தின் அடிப்படையிலும் சில ரகசியத் தகவல்கள் எங்களுக்கு கிடைத்தன.
ஜெயலலிதா அளித்த சுதந்திரம்: வீரப்பன் வழக்கு வெற்றிகரமாக முடிந்ததற்கு அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா எங்களுக்கு அளித்த சுதந்திரம் முக்கியமான காரணமாகும்.
அதேபோல் இந்த வழக்கில் அவர், எங்களுக்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கவில்லை. இதனால் எந்த நெருக்கடியும் இன்றி மிகுந்த சுதந்திரத்துடன் செயல்பட முடிந்தது. வீரப்பன் சுட்டுக் கொலை செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, ஜெயலலிதா எங்களை சத்தியமங்கலத்தில் உள்ள அதிரடிப்படை முகாமில் சந்தித்துப் பேசினார். அப்போதும் அவர், "விரைவில் நல்ல தகவல் தாருங்கள்' என கூறிச் சென்றார்.
சம்பவத்தன்று வீரப்பன் தரப்பை சுட்டத்தில், வீரப்பன் தலையில் இரு தோட்டாக்கள் பாய்ந்திருந்தன. அவருக்கு உயிர் இருந்தது; இதையடுத்து அவரைக் காப்பாற்ற முயற்சித்தோம்.
ஆனால் மருத்துமனைக்கு செல்வதற்குள் அவர் இறந்துவிட்டார். வீரப்பன் வழக்கில் கிடைத்த வெற்றி தனி மனிதர் ஒருவருக்கு கிடைத்தது கிடையாது; அனைவரது கூட்டு முயற்சிக்கும் கிடைத்த வெற்றி என்றார் அவர்.
இந்த விழாவில் தமிழக டி.ஜி.பி. தே.க.ராஜேந்திரன், ஏ.டி.ஜி.பி.க்கள், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.கள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT