தமிழ்நாடு

அரசுத் திட்டங்களை மக்களுக்கு நேரில் சென்று வழங்க வேண்டும்: அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

DIN

அரசு நலத் திட்டங்களை மக்களுக்கு நேரிலேயே சென்று வழங்கவும், அரசுக் கட்டடங்களைத் திறக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ள நிலையில் மக்கள் ஆதரவை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பெற முடியும் என்ற நம்பிக்கையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், தமிழகத்தில் புதிய கட்டடங்கள் திறப்பு, நலத் திட்ட உதவிகள் வழங்குதல் போன்றவை பெரிய அளவில் நடைபெறவில்லை.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட ஏராளமான புதிய கட்டடங்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளன. இந்தக் கட்டடங்களை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாகத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், கிடப்பில் உள்ள நலத் திட்டங்களையும் அடுத்தடுத்து வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விரைவில்...: இந்த நிலையில், தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்துவிட்டு சென்னை திரும்பியவுடன் புதிய கட்டடங்கள் திறப்பு, நலத் திட்ட உதவிகள் வழங்குவது போன்ற பணிகள் சூடுபிடிக்கும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்களிடம் நன்கு அறிமுகமாகி, அவர்களது ஆதரவைப் பெற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, புதிய கட்டடங்கள், நலத் திட்ட உதவிகள் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சர்களே நேரடியாகச் சென்று திறக்கவும், பொது மக்களிடம் உதவிகளை வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாநிலம் தழுவிய திட்டம் என்றால், அதனை முதல்வர் தொடங்கி வைக்கவும், ஒரு துறையின் சார்பிலான திட்டம் என்றால் சம்பந்தப்பட்ட மாவட்டத்துக்கு அந்தத் துறையின் அமைச்சர் நேரில் சென்று திறந்து வைக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விழாக்களில் சம்பந்தப்பட்ட தொகுதியின் எம்எல்ஏக்களை பங்கேற்கச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
காரணம் என்ன? எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அமைச்சரவைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவு அளித்ததால், அதிமுக எம்எல்ஏக்கள் மீது தொகுதி மக்கள் கோபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
இதுபோன்ற சூழ்நிலைகள் ஏதும் தொகுதிகளில் இல்லை என்பதைக் காட்டவும், அரசின் நலத் திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்பதை தெரியப்படுத்தவும் நேரிலேயே சென்று கட்டடங்களை திறக்கவும், நலத் திட்ட உதவிகளையும் அளிக்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் கூறின.
இனி காணொலிக்காட்சி முறை இல்லை!
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில், அரசு நலத்திட்டங்கள், புதிய கட்டடங்கள் திறப்பு உள்ளிட்டவை காணொலிக்காட்சி மூலமாகவே சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மேற்கொள்ளப்பட்டன.
மிகப் பெரிய திட்டங்கள் என்றால், சம்பந்தப்பட்ட நிகழ்விடத்தில் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் இருப்பர். ஜெயலலிதாவின் உடல் நிலை காரணமாகவும் இந்த நடவடிக்கை பின்பற்றப்பட்டு வந்தது. இப்போது காணொலிக்காட்சி முறையில் நிகழ்ச்சிகள் நடைபெறாது என்று அரசுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT