முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் ஒரு புரட்சிக்கு வித்திடாமல், விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: தி.வேல்முருகன்

ஜல்லிக்கட்டு போராட்டம் போல தமிழகத்தில் மீண்டும் ஒரு மக்கள் புரட்சிக்கு வித்திடாமல், மத்திய மாநில அரசுகள் தமிழக விவசாயிகள்

Updated On : 29 ஜனவரி, 2024 at 10:51 AM
பகிர்:
சிதம்பரம்: ஜல்லிக்கட்டு போராட்டம் போல தமிழகத்தில் மீண்டும் ஒரு மக்கள் புரட்சிக்கு வித்திடாமல், மத்திய மாநில அரசுகள் தமிழக விவசாயிகள் கோரிக்கைகளுக்கும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்தார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் பங்கீட்டுக்குழு அமைக்க மறுத்த மத்திய அரசை கண்டித்தும், நீரின்றி பயிர் கருகியதால் மனமுடைந்த தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும், விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் காந்திசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் தூக்கில் தொங்குவது போன்று நினறு கொண்டு கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் மாவட்டச் செயலாளர் மு.முடிவண்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மு.ஆளவந்தார் வரவேற்றார். நிர்வாகிகள் கோவி.தில்லைநாயகம், ச.கோபு, சா.சுகுமார், கே.ஆர்.ஜி.தமிழ், வாசு.சரவணன், சிவபுரி ஆ.சிவா, இ.கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவாக நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
அவர் பேசியது: தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமரை சந்தித்து வறட்சி நிதியாக ரூ.39 ஆயிரம் வழங்குமாறு கோரினார். ஆனால் இதுவரை மத்தியஅரசு வழங்கவில்லை. சமீபத்தில் வந்த மத்தியக்குழு நீரின்றி கருகிய நெல் வயல்களை 15 நிமிடங்களுக்கு மேல் பார்வையிடவில்லை. வறண்டு போன, காய்ந்து போன பூமியில் கால் வைக்கவில்லை. எனவே பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பார்வையிட வேண்டும். அமைச்சர்கள் தலைமையிலான குழு கணக்கெடுப்பு செய்ய வேண்டும். தமிழக முதல்வர் கடலூர் மாவட்டம் மட்டுமல்ல, எந்த மாவட்டத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட அச்சப்படுகிறார். குறைந்த பட்சம் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நேரடியாக விவசாயிகளை சந்தித்து தமிழகஅரசு விவசாயிகளுக்கான அரசு, யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என உறுதியளித்து வலியுறுத்தி தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
தமிழக முதல்வர் அறிவித்த இழப்பீடு தொகை ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம் விவசாயிகளுக்கு போதுமானதல்ல. அந்த இழப்பீடு தொகையும் வங்கியில் வரவு வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். வரவு வைக்கப்படும் இழப்பீடு தொகை விவசாயிகள் பெற்றுள்ள கடனில் வரவு வைக்கப்படும் என வங்கியினர் தெரிவிக்கின்றனர். இதனால் விவசாயிகள் எப்படி வாழ்வது, வாங்கிய கடனை எப்படி திருப்பி செலுத்துவது என்ற ஐயத்தில் தங்களது உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். மற்றொரு புறம் கருகிய நெற் பயிர்கள் கொண்ட வயலை பார்த்து மாரடைப்பு ஏற்பட்டு நெல்வயலிலேயே சுருண்டு விழுந்து இறந்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் 17 விவசாயிகள் இறந்துள்ளனர். ஆனால் ஒட்டுமொத்த தமிழகத்தில் 17 விவசாயிகள்தான் இறந்துள்ளனர் என்று, அவர்களது குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் வழங்கிவிட்டு அரசு கண்டு கொள்ளாமல் உள்ளது. இது கண்டத்திற்குரியது. எனவே உயிரிழந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.
தமிழக விவசாயிகளின் தற்கொலை சம்பவத்தை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி தடுக்க தவறியதன் விளைவுதான் விவசாயிகளின் வேரான ஜல்லிக்கட்டு போராட்டம். இது மத்திய, மாநில அரசுகளின் விவசாய விரோத போக்கிற்கு இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் கொடுத்த ஒரு சமிக்ஜையாகும். தமிழக மக்களின், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில் இன்றைய மாணவர் சமுதாயம் மீண்டும் சமூக வலைதளங்கள் வாயிலாக விவசாயிகள் பிரச்சனை, காவிரி பிரச்சனை ஆகியவற்றை கையிலெடுத்து, அது போராட்ட வடிவமாக மாறும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மீண்டும் ஒரு மக்கள் புரட்சிக்கு வித்திடாமல் மத்திய, மாநில அரசுகள் ஒட்டுமொத்த தமிழக விவசாயிகள், மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து நிறைவேற்ற முன்வர வேண்டும் என தி.வேல்முருகன் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச்செயலாளர் உ.கண்ணன், மூத்த நகரமன்ற உறுப்பினர் ஆ.ரமேஷ், மாநில மதியுரை குழு உறுப்பினர் மு.பாலகுருசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் ச.க.ராஜேந்திரன், மாநில அமைப்புக்குழு கு.வீரசோழகன், சு.சேரலாதன், ஆ.தமிழரசன், மாவட்ட பொருளாளர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில மாணவரணி தலைவர் ரவி.பிரகாஷ், மாநில மகளிரணி செயலாளர் ஜெயலட்சுமி பாலு, புதுச்சேரி மாநில அமைப்பாளர் ஸ்ரீதர், விவசாயிகள் சங்க கூட்டியக்க மாநில செயலாளர் ஏ.பி.ரவீந்திரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments