தமிழ்நாடு

அரசுக் கல்லூரியாக மாற்றப்படுமா சிக்கய்ய நாயக்கர் கல்லூரி?

ஈரோட்டில் பெரியாரின் கனவுக் கல்லூரியான சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது.

ஜெபலின்ஜான்

ஈரோட்டில் பெரியாரின் கனவுக் கல்லூரியான சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது.
ஒருங்கிணைந்த கோவை மாவட்டமாக இருந்தபோது ஈரோட்டில் 1954-இல் தொடங்கப்பட்டது ஈரோடு மகாஜன கல்லூரி. இக்கல்லூரி, பின்னர் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியாகப் பெயர் மாற்றப்பட்டது. ஏழை மாணவ, மாணவிகளுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கி அவர்களை கைதூக்கி விடும் வகையில் பெரியாரின் நேரடி மேற்பார்வையில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது.
ஈரோடு, சுற்றுப்புறப் பகுதிகளில் வாழ்ந்த கல்வியில் பரந்த சிந்தனை கொண்டவர்களின் உதவியுடனும், தனது பங்களிப்பையும் சேர்த்து இக்கல்லூரியை பெரியார் தொடங்கினார்.
ஈரோட்டில் இயங்கி வந்த பாரம்பரியமான மகாஜன பள்ளிக் குழு மூலம் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. இக்குழுவுக்கு பெரியாரின் தூரத்து உறவினரான சிக்கய்ய நாயக்கர் தலைவராக இருந்தார். இக்கல்லூரிக்கு ஈரோடு வாழ் மக்கள் பலர் நன்கொடை வழங்கினர். பலர் தங்களின் நிலத்தை தானமாக வழங்கினர்.
தமிழக அரசும் இக்கல்லூரிக்கு 14 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியது. கோபியை சேர்ந்த நிலக்கிழார் கே.கே.ராமசாமி கவுண்டர், கோபி அருகே தனக்குச் சொந்தமான 1.30 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். அதேபோல, ஈரோடு நகராட்சி சார்பிலும் ரூ. 1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.
இக்கல்லூரியின் மொத்த பரப்பளவு 52 ஏக்கராகும். இக்கல்லூரி யாருக்கும் பரம்பரை சொத்தல்ல. 1954 முதல் 1958 வரை மகாஜன கல்லூரி என்றும் 1958 முதல் 1971 வரை சிக்கய்ய நாயக்கர் மகாஜன கல்லூரி என்றும் அழைக்கப்பட்டது.
பின்னர், சிக்கய்ய நாயக்கர் கல்லூரி என அழைக்கப்பட்டு வருகிறது.
சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மேனேஜிங் போர்டு என்ற முகமை இக்கல்லூரியை நிர்வகித்து வந்தது. இக்கல்லூரியின் முதல் நிர்வாகக் குழுத் தலைவராக பெரியார் பணியாற்றியுள்ளார். கடந்த 62 ஆண்டுகளாக ஈரோடு மாவட்டத்தில் ஏழை எளிய மாணவ, மாணவிகளின் கல்விக் களஞ்சியமாக இக்கல்லூரி திகழ்ந்து வருகிறது.
ஈரோடு மட்டுமன்றி நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், முன்னணி மருத்துவர்கள், பட்டயக் கணக்காளர்கள், தொழிலதிபர்களில் பெரும்பகுதியினர் இக்கல்லூரியில் படித்தவர்கள்தான்.
இப்போது, இக்கல்லூரியில் 11 இளங்கலைப் படிப்புகள், 3 முதுகலைப் படிப்புகள் உள்ளன. சுமார் 1,500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஒவ்வோர் ஆண்டும் இக்கல்லூரியில் புதிதாக 400 மாணவ, மாணவிகள் சேர்ந்து வருகின்றனர். மொத்தமுள்ள 83 ஆசிரியர் பணியிடங்களில் 70 பேர் தற்போது பணியாற்றி வருகின்றனர். அதேபோல 52 அலுவலகப் பணியாளர் இடங்களில் 23 பேர் பணியாற்றி வருகின்றனர்.
அரசு உதவிபெறும் கல்லூரியாக இருந்த இக்கல்லூரி சில நிர்வாகப் பிரச்னைகளால், கோவை மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநரின் கட்டுப்பாட்டில் 19 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதை அரசுக் கல்லூரியாக மாற்றும் நடவடிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. ஆனால், இதுவரை அரசுக் கல்லூரியாக மாற்றப்படாததால் இக்கல்லூரிக்கு வர வேண்டிய பல சலுகைகள், மாணவர்களுக்கான பலன்கள், கல்லூரியின் உயர் கல்வி வளர்ச்சி உள்ளிட்டவை பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இக்கல்லூரியை விரைவில் அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க 4-ஆம் மண்டலத் தலைவர் ப.கமலக்கண்ணன் கூறியதாவது:
கடந்த 19 ஆண்டுகளாக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசுக் கல்லூரியாக உடனடியாக அறிவிக்க வேண்டும். கல்லூரிக்கு முகமை இல்லாததாலும், அரசுக்கு கூடுதல் நிதிச் சுமை இல்லாததாலும் ஈரோடு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை என்பதாலும் அரசுக் கல்லூரியாக அறிவிப்பதில் எவ்விதச் சட்டச் சிக்கலும் இல்லை. நடப்புச் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே இதற்கான சிறப்பு மசோதாவைத் தாக்கல் செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்.
மேலும், கூடுதலாக இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சிப் பிரிவுகளில் கூடுதல் துறைகளை உருவாக்க முடியும். இதன் மூலம் கொங்கு மண்டல ஏழை மாணவ, மாணவிகள் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வியைப் பெற முடியும். இதுகுறித்து சட்டப் பேரவையில் ஈரோடு மேற்குத் தொகுதி எம்எல்ஏ கே.வி.இராமலிங்கம் பேசியுள்ளது வரவேற்புக்குரியது என்றார்.
 

சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியாகும்

இதுகுறித்து ஈரோடு மேற்குத் தொகுதி எம்எல்ஏ கே.வி.இராமலிங்கம் (படம்) கூறியதாவது: சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அரசுக் கல்லூரியாக அறிவிக்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தேன். இக்கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தீவிர முயற்சி எடுத்தார். ஆனால், சில நிர்வாக காரணங்களால் தடை ஏற்பட்டது.
இப்போது இக்கல்லூரியை அரசுக் கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப் பேரவையில் பேசியுள்ளேன். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் ஆகியோரிடமும் இதுகுறித்து பேசியிருக்கிறேன். இதற்கான அறிவிப்பு சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT