தமிழ்நாடு

கமல் அரசியலுக்கு வந்தால் மக்கள்ஆதரவளிக்க மாட்டார்கள்

DIN

கமல் அரசியலுக்கு வந்தால் மக்கள்ஆதரவளிக்கமாட்டார்கள் என்றார் பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா.
புதுக்கோட்டைக்கு வியாழக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
அரசியலுக்கு வருவதற்கு கமலஹாசனுக்கு முழு உரிமை உள்ளது. விஸ்வரூபம் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய போது அலறினார், அழுதார், நாட்டை விட்டு வெளியேறுவேன் என்றார். தற்போது ஜிஎஸ்டி-யில் திரைத்துறைக்கு விலக்கு அளிக்காவிட்டால் திரையுலகை விட்டே வெளியேறுவேன் என அறிவித்தார். இப்படி பிரச்னைகளுக்காக ஓடுகிறவர்கள் எல்லாம் தலைவராக முடியாது. அதன் காரணமாகவே முதுகெலும்பில்லாதவர் என்றேன்.
ஹிந்தித் திணிப்புப் போராட்டத்தில் குதித்தது முதலே அரசியலுக்கு வந்துவிட்டதாக கமல் கூறுகிறார். அவர் வந்தது யாருக்குமே தெரியவில்லை. அரசியலில் கருத்து கூறுவது வேறு; அமைப்பு ரீதியாக செயல்படுவது வேறு. அவர் அரசியல் ரீதியாக செயல்படவில்லை.
அப்படி செயல்பட்டிருந்தால் அதிமுக அரசின் ஊழலை விமர்சனம் செய்வதற்கு முன்னதாக திமுகவின் ஊழல்கள் தொடர்பாகவும் அறிக்கை விட்டிருக்க வேண்டும். அதைப் போல தமிழகத்தின் பல்வேறு பிரச்னைகளுக்கும் அவர் குரல் கொடுக்கவில்லை. இதுபோன்ற இரட்டை நிலை, இரட்டை நாக்கு இருப்பவர்கள் அரசியலில் பிரகாசிக்க முடியாது. ஊழலுக்கு எதிரானவன் என தன்னை உருவகப்படுத்திக் கொள்ள நினைப்பது தவறானது.
ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை. ரஜினிக்கும், கமலுக்கு வேறுபாடுகள் உள்ளன. ரஜினி எந்த மதத்தினரையும் விமர்சனம் செய்யவில்லை. ஆனால், திராவிடர் கழகத்தைப்போல இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிவருகிறார் கமல். இந்து மதத்தை இழிவுபடுத்துவதுதான் பகுத்தறிவு என்பதல்ல. அவருடைய சமூகக்கொள்கை, சித்தாந்தக்கருத்துக்கள் பாரபட்சமானவை, இந்து மதத்துக்கு விரோதமானவை. அவர் அரசியலுக்கு வந்தால் கொள்கை ரீதியாக விமர்சனம் செய்வேன்.
இவருக்குப் பின்னணியில் இருந்து ஸ்டாலின் இயக்கி வருகிறார். 50 ஆண்டுகால திராவிட கட்சிகளின் அஸ்தமனத்தில் தான் தமிழ், தமிழர்கள், தமிழகத்துக்கு விடியல் ஏற்படும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் அனுமதியளித்து கையெழுத்திட்ட திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றார்.
பேட்டியின் போது நகரத் தலைவர் சுப்பிரமணியன், விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர் மணிவண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT