தமிழ்நாடு

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் 30 மாதங்களில் நிறைவேற்றப்படும்: முதல்வர் பழனிசாமி

DIN

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் 30 மாதங்களில் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நிகழ்ச்சி திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள கரையாம்புதூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் உழைக்கும் வர்க்கத்தின் மீது அதிக பாசம் கொண்டவர்கள். எம்.ஜி.ஆர். தனது திரைப்படங்களில் கூலித் தொழிலாளி பாத்திரத்தில் அதிகமாக நடித்துள்ளார்.
அவர் தனது பாத்திரங்கள் மூலமாகத் தொழிலாளர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தார். உலக மக்களின் நலனுக்காக ஊடகத்தைப் பயன்படுத்தியவர் அவர். திரை உலகில் அவரது பெயரும் புகழும் எப்போதும் நிலைத்து இருக்கும்.
அவரது பெயருக்கும் புகழுக்கும் காரணமான திரை வாழ்வைப் போலவே தனது சொந்த வாழ்வையும் அமைத்துக் கொண்டார். பன்முக ஆற்றல் கொண்ட அவர் உலகின் மற்றொரு அதிசயமாவார். மக்கள் நலவாழ்வின் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். அவர் திரையுலகில் உச்சத்தைத் தொட்டது போல அரசியலிலும் உச்சத்தைத் தொட்டார். தனது ஆட்சியில் மக்கள் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியைப் பின்பற்றி ஒன்றரை கோடி தொண்டர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
நலத்திட்ட உதவிகள், அடிக்கல் நாட்டும் நிகழ்வு: விழாவில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ரூ.207.37 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தார். மேலும், பள்ளிக்கல்வித் துறை, வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை, பேரூராட்சிகள் துறை மற்றும் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் ரூ.13.24 கோடி மதிப்பீட்டில் 13 புதிய திட்டப் பணிகளுக்கும் முதல்வர் அடிக்கல் நாட்டினார். நூற்றாண்டு விழாவை ஒட்டி, திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஒரு வார காலமாக பள்ளி மாணவ, மாணவியரிடையே பல்வேறு கட்டுரை, கவிதை, பேச்சு மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசுகளை முதல்வர் வழங்கினார்.
மேலும், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மகளிர் திட்டம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், திருப்பூர் மாநகராட்சி, பள்ளிக் கல்வித் துறை, வனத் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, தொழிலாளர் நலத் துறை சமூக பாதுகாப்புத் திட்டம், சமூக நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, கூட்டுறவுத் துறை, தாட்கோ, கைத்தறி மற்றும் துணி நூல் துறை, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்ட தொழில் மையம் ஆகிய துறைகளின் சார்பில் 21 ஆயிரத்து 99 பயனாளிகளுக்கு ரூ.220 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.
முன்னதாக, விழாவுக்கு சட்டப் பேரவைத் தலைவர் ப.தனபால் தலைமை வகித்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்றுப் பேசினார். மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி நன்றி தெரிவித்தார். தமிழக அமைச்சர்கள், மக்களை உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள், வாரிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

SCROLL FOR NEXT