தமிழ்நாடு

அகண்ட அலைவரிசை சேவையில் பின்தங்குகிறதா பிஎஸ்என்எல்?

DIN

அகண்ட அலைவரிசை இணையதள வேகத்தில் (எம்பிபிஎஸ்) தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஒப்பிடுகையில் பிஎஸ்என்எல் மிகவும் பின்தங்கி உள்ளது. இதனால், இந்நிறுவனம் வாடிக்கையாளர்களை தொடர்ந்து இழந்து வருகிறது.
தனிநபர் முதல் அலுவலகங்கள் வரை இணையதள வசதி இன்று அடிப்படையாகிவிட்டது. இதன் காரணமாக, இணையதள சேவையை மக்களுக்கு அளிப்பதில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன.
பின்தங்கும் பிஎஸ்என்எல்: அகண்ட அலைவரிசை சேவையை பொருத்தவரை, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை, பிஎஸ்என்எல் உடன் ஒப்பிடுகையில் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசத்தை கொண்டுள்ளது.
வாடிக்கையாளர்களை இழக்கும் பிஎஸ்என்எல்: அகண்ட அலைவரிசை சேவையில் ஏசிடி, ரிலைன்ஸ், ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக சேவைகளை வழங்கி வருகின்றன. இதில், தனியார் நிறுவனங்கள் அதிகபட்சமாக 200 எம்பிபிஎஸ் வேகத்தை வழங்குகின்றன. ஆனால், பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகபட்ச வேகம் 24 எம்பிபிஎஸ் அளவிலேயே உள்ளது.
இதனால், கடந்த சில ஆண்டுகளாக அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர்களையும் பிஎஸ்என்எல் இழந்து வருகிறது.நிகழ்கால சூழலுக்கேற்ப தொழில்நுட்ப விஷயங்களை பிஎஸ்என்எல் நிறுவனம் மேம்படுத்தவில்லையெனில், நாளடைவில் இந்நிறுவனம் தனியாருக்கு தாரைவார்க்கப்படும் சூழல் ஏற்பட்டுவிடும் என தொலைத்தொடர்பு ஆலோசனைக் குழுவினர் எச்சரிப்பதுடன், வருத்தத்துடன் எச்சரிக்கின்றனர்.
இதுகுறித்து இக்குழுவின் பிரதிநிதிகள் கூறியதாவது: அனைத்து தொழில்நுட்ப விஷயங்களை சூழலுக்கேற்ப அமல்படுத்துவதில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு வசதி, வாய்ப்புகள் அதிகம் உண்டு. ஆனால், சேவை வழங்குவதில், தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களைவிட, பிஎஸ்என்எல் பின்தங்கிய நிலையில் இருப்பது ஏனென்று புரியவில்லை.
ஏற்கெனவே, நாள்தோறும் 10 -க்கும் மேற்பட்ட அகண்ட அலைவரிசை வாடிக்கையாளர்கள், தங்களது பிஎஸ்என்எல் இணைப்பை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர். எனவே, இந்த வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பிஎஸ்என்எல் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்து முக்கியமாக, காப்பர் வயரிலிருந்து ஆப்டிக் "ஃ"பைபர்-க்கு மாறுவதுடன், வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்த வேண்டும் என்றனர் அவர்கள்.
இதுகுறித்து பிஎஸ்என்எல் (சென்னை வட்டம்) உயர்அதிகாரி ஒருவர் கூறியதாவது: அகண்ட அலைவரிசை திட்ட சேவைகளில் அடுக்குமாடி கட்டடங்கள், பெருவணிக நிறுவனங்கள் உள்ள பகுதிகளில் ஆப்டிக் "ஃ"பைபர் வயர்கள் மூலம் அதிவேக சேவைகளை அளிக்க முயற்சி எடுத்து வருகிறோம். அடுத்த 6 மாத காலங்களில் இந்த சேவையை அளிப்பது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
பட்டயக் கணக்காளர் (ஆடிட்டர்), சிசிடிவி நிறுவன ஊழியர் ஆகியோர் கூறியதாவது: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிக தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதுபோல், சிசிடிவி கேமரா பயன்பாடு உள்ளிட்ட பணிகளில் பதிவிறக்கம், பதிவேற்றம் என்பது முக்கியமானதாக உள்ளது. இதற்கு, அதிவேக அகண்ட அலைவரிசை சேவை முக்கியமானது. இதில், தனியார் தொலைத்தொடர்பு சேவைகளை விட பிஎஸ்என்எல் மிகவும் பின்தங்கியுள்ளது. இதனால், அதிவேக சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.

நினைத்தால் முடியும்!
சென்னை வட்டத்தில் மட்டும் 20 -க்கும் மேற்பட்ட பிஎஸ்என்எல் பொது மேலாளர் அலுவலகங்கள் உள்ளன. இவையனைத்தும் பெரும்பாலும் ஆப்டிக் "ஃ"பைபர் வயர்களால் இணைக்கப்பட்டுள்ளன.
இதற்கேற்ப அதிக அளவு தொலைத்தொடர்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், தனிநபர் திட்டங்களுக்கு காப்பர் வயர் மூலமே அகண்ட அலைவரிசை சேவை வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் அலுவலகங்களின் இணைய வசதிக்கு ஆப்டிக் "ஃ"பைபர் பயன்படுத்தப்படும் போது, இதனை ஏன் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கக்கூடாது.
பிஎஸ்என்எல் நினைத்தால் தரமான, அதிவேக சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியும் என தொலைத்தொடர்பு நிறுவன பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துன்பங்களைப் போக்கும் கோயில்

பி.டி. சார் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடமாடும் போகன்வில்லா! திவ்யா துரைசாமி..

பாவங்களைப் போக்கும்..!

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

SCROLL FOR NEXT