தமிழ்நாடு

அப்துல் கலாம் சிலை அருகில் வைக்கப்பட்ட குர்ரான், பைபிள் அகற்றம்

ராமேசுவரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவு மணி மண்டபத்தில் உள்ள அவரது சிலை அருகில் வைக்கப்பட்ட பைபிள் மற்றும் குர்ரான் புனித நூல்கள்அகற்றப்பட்டது.

DIN

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் சொந்த ஊரான ராமேசுவரத்தில் உள்ள பேய்க்கரும்பில் ரூ.15 கோடி செலவில் கட்டப்பட்ட அவரது மணிமண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 27-ந் தேதி திறந்து வைத்தார். 

இந்த மணிமண்டபத்தில் இடம்பெற்ற அப்துல் கலாம் சிலைகளில் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதில் கலாம் அவர்கள் வீணை வாசிப்பது போன்ற சிலை வைக்கப்பட்டு அதன் அருகில் பகவத் கீதை புத்தகம் இடம்பெற்றது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

அப்துல் கலாம் சாதி, மத, இன, மொழி என அனைத்துக்கும் அப்பாற்பட்டவர். எனவே வீணை வாசிப்பது போன்றும் பகவத் கீதை இடம்பெற்றதும் தவறு என தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் அவ்விடத்தில் திருக்குறள் வைத்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

இந்நிலையில், அந்தச் சிலையில் இடம்பெற்றுள்ள பகவத் கீதை அருகில் இஸ்லாமின் புனித நூலான குர்ரான் மற்றும் கிறிஸ்துவ புனித நூலான பைபிள் ஆகியவற்றை கலாம் அவர்களின் அண்ணன் பேரன் சலீம் ஞாயிற்றுக்கிழமை வைத்தார்.

இதுகுறித்து சலீம் கூறும்போது:

நான் கலாம் அவர்களுடன் 6 வருட காலம் பணியாற்றியுள்ளேன். அவரது அலுவலகத்தில் எப்போதும் அனைத்து புத்தகங்களும் இடம்பெற்றிருக்கும்.

மேலும், பகவத் கீதை மட்டும் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய காரணத்தால் இதைச் செய்தேன். இதுகுறித்து மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளேன்.

அவர்கள் விரைவில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தனர். கடந்த 2 தினங்களாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் அந்தச் சிலை அருகில் ஒரு கண்ணாடிப் பேழையில் குர்ரானும், பைபிளும் வைக்கப்பட்டிருந்தது.

அதையே வெளியே எடுத்து வைத்தேன். இதில் அரசியல் வேண்டாம் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து, குர்ரான் மற்றும் பைபிள் ஆகிய இரண்டு புனித நூல்களும் அங்கிருந்து அகற்றப்பட்டு மீண்டும் அந்தச் சிலை பின்புறம் உள்ள அதே கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டது. 

உலகெங்கும் இருந்து மக்கள் அதிகளவில் இந்த மணிமண்டபத்தை காண வருகை தருவதால் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாஸ்மாக் கடைகளால் அதிகரிக்கும் அத்துமீறல்கள்!

ஆசிய யு19 குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 14 பதக்கங்கள்!

சிவகங்கையில் மாட்டு வண்டிப் பந்தயம்

பகடைக்காயாகும் உக்ரைன்!

காக்க உதவுமா காப்பீடுகள்?

SCROLL FOR NEXT