மதுரை, தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கூடுதல் மருத்துவர்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 1, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் 32, தாலுகா மருத்துவமனைகள் 240, காசநோய் மருத்துவமனைகள் 7, மகளிர் நலம் மற்றும் குழந்தைகள் மருத்துவமனைகள் 7, நடமாடும் மருத்துவமனைகள் 11, தொழுநோய் மறுவாழ்வு மையம் 1 ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மேலும் கிராமப்புற மக்களுக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் 1600 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இங்கு மகப்பேறு மற்றும் பொது மருத்துவம் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்கள்தொகையில் 80 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஒரு லட்சம் பேர் உள்நோயாளிகளாக சிகிச்சைப் பெறுகின்றனர்.
தமிழகத்தில் சுகாதாரத்துறைக்கு அரசு நிதிநிலை அறிக்கையில் ரூ.10 ஆயிரத்து 500 கோடியை ஒதுக்கியுள்ளது. வட மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அனைத்து நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவர்கள் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் கூடுதல் பணிச்சுமையில் மருத்துவர்கள் அவதிப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்கள் கூறியது: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் முதல், கிராமப்புறங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை 1900 மருத்துவ நிலையங்கள் உள்ளன. இங்கு அரசு மருத்துவர்களிண் எண்ணிக்கை 18 ஆயிரம் மட்டுமே. இதில் மகப்பேறு உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள் 500 பேர் உள்ளனர். சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவர்கள் 600 பேரும், முதுநிலை மருத்துவர்கள் 9 ஆயிரம் பேரும் உள்ளனர்.
மருத்துவக்கவுன்சிóல் விதிமுறைகள் மீறல்: இந்திய மருத்துவக் கவுன்சில் விதிமுறைகளின் படி சாதாரண மருத்துவர் நாள் ஒன்றுக்கு 40 முதல் 50 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவர்கள் தினசரி 10-க்கும் குறைவான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் சிகிச்சை தரமானதாக இருக்கும். ஆனால் மருத்துவர் பற்றாக்குறை இருப்பதால் சாதாரண மருத்துவர் தினசரி 100 முதல் 200 வரையிலான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவர் தினசரி 30-க்கும் மேற்பட்ட நோயாளிகளை கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் நோயாளிகளை அவசரமாக கவனிப்பதால் நோய் அறிகுறிகளை ஆய்வு செய்து சிகிச்சை அளிக்க முடிவது இல்லை.
பின்பற்றப்படாத உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை: உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி ஆயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் 500 பேருக்கு ஒரு மருத்துவர் உள்ளார். ஆனால் தமிழகத்தில் 5 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அளவிலேயே உள்ளது. தற்போதுள்ள 18 ஆயிரம் மருத்துவர்களில் ஆண்டுதோறும் 500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணி ஓய்வுபெற்றுச்செல்கின்றனர். அந்த பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஓய்வு பெற்றவர்களின் பணியையும், அந்தந்த துறை மருத்துவர்களே கவனிக்க வேண்டியுள்ளது.
தமிழகத்தின் மக்கள்தொகை, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஆகியவற்றை கணக்கில் எடுத்துப் பார்க்கும்போது, குறைந்தது 1 லட்சம் அரசு மருத்துவர்களாவது இருக்கவேண்டும். ஆனால் தமிழகத்தில் 18 ஆயிரம் மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர்.
அரசு மருத்துவமனையில் பற்றாக்குறை இருப்பதால் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால் அங்கும் பற்றாக்குறை உள்ளது. தமிழகத்தில் இதுவரை பதிவுசெய்துள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை 1 லட்சம். இதில் இறப்பு, முதுமை, உடல்நலக்குறைவு ஆகியவற்றால் 20 ஆயிரம் மருத்துவர்கள் குறைந்துள்ளனர்.
எனவே, தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிவது மற்றும் தனியாக சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் 40 ஆயிரத்துக்கும் குறைவாகவே உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை சேர்த்து தமிழகத்தில் ஒட்டு மொத்தமாக 60 ஆயிரம் மருத்துவர்களே உள்ளனர். இந்த 60 ஆயிரம் மருத்துவர்கள்தான் தமிழகத்தில் 7 கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
இதில் நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் மருத்துவர்களால் ஒவ்வொரு நோயாளியையும் கவனித்து உரிய சிகிச்சை அளிக்க முடிவது இல்லை. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒவ்வொரு துறையிலும் வெளிநோயாளிகள் பிரிவில் நீண்ட வரிசையில் நோயாளிகள் காத்திருக்கின்றனர்.
உள்நோயாளிகள் பிரிவில் அறுவைச் சிகிச்சை உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளுக்கும் நோயாளிகள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
எனவே, அரசு மருத்துவர் பற்றாக்குறையைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் அண்மையில் மத்திய அரசின் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் ஓய்வு பெறும் வயது 65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநிலங்களில் மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயது 58 ஆக உள்ளது.
இந்த வயதை 65 ஆக உயர்த்தலாம். இதன்மூலம் சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துர்களை கூடுதலாக 7 ஆண்டுகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். அரசு மருத்துவமனைகளில் பணி ஓய்வு பெறும் மருத்துவர்களை தனியார் மருத்துவமனைகள் பயன்படுத்திக்கொள்கின்றனர். அதையே அரசும் செய்யலாம் என்றனர்.
இதுதொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோயாளிகள் குறித்தும், அரசு மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பது குறித்தும் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால் அந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை. மருத்துவர்கள் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.