தமிழ்நாடு

அண்ணனை தள்ளிவிட்டு தம்பி தாலி கட்டிய சம்பவம்: ஊடகங்களில் விடியோ வெளியாகாததன் பின்னணி?

DIN

வேலூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே அண்ணனைத் தள்ளிவிட்டு மணப்பெண்ணுக்கு தம்பி தாலி கட்டிய சம்பவத்தில், திருமண விடியோவை உறவினர்கள் பணம் கொடுத்து வாங்கி அழித்துவிட்டனர்.

திருப்பத்தூரை அடுத்த செல்லரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் கிராம சிப்பந்தியாகப் பணியாற்றி வருகிறார். இவருக்கு ராஜேஷ், ரஞ்சித், வினோத் என 3 மகன்கள் உள்ளனர். இதில் ராஜேஷும், வினோத்தும் திருப்பூரில் தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ராஜேஷுக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த பெண்ணை நிச்சயம் செய்தனர்.

அதன்படி கடந்த 31-ஆம் தேதி (புதன்கிழமை) மணமகன் வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. பின்னர் வியாழக்கிழமை காலை இலவம்பட்டி வெண்குன்றம் முருகன் கோயிலில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

திருமணத்துக்காக வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மணபந்தல் அருகே அமர்ந்திருந்தனர். அப்போது முகூர்த்த நேரத்தில் மணமகன் ராஜேஷ் மணப்பெண்ணுக்கு தாலி கட்ட முயன்றபோது, பின்னால் நின்றுக் கொண்டிருந்த ராஜேஷின் தம்பி வினோத் திடீரென ராஜேஷை தள்ளிவிட்டு, கையில் மறைத்து வைத்திருந்த மற்றொரு தாலியை மணப்பெண்ணின் கழுத்தில் கட்டினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத உறவினர்கள் அதிர்ச்சியில் திகைத்து நின்றனர். உடனே இரு வீட்டாரும், பெற்றோரும் விசாரித்ததில், ராஜேஷிற்கு பெண் பார்க்க சென்றபோது, உடன் சென்ற வினோத்துக்கும், மணப்பெண்ணிற்கும் காதல் ஏற்பட்டதாம்.

பின்னர், ஏற்கெனவே திட்டமிட்டப்படி வியாழக்கிழமை காலை ராஜேஷ் தாலி கட்டும் முன்பு வினோத் தாலி கட்டியது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், தம்பதியரை தாக்கியதால் திருமண விழாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில்,  விரக்தியடைந்த ராஜேஷ், தான் அணிருந்த முகூர்த்த வேட்டி, சட்டையைக் கழட்டி கோபத்தில் வீசிவிட்டுச் சென்றார். 

இந்த திருமணத்தை விடியோ எடுக்க திருப்பத்தூரைச் சேர்ந்த ஒருவரை உறவினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அவர், அண்ணனை தள்ளிவிட்டு தம்பி தாலி கட்டிய அனைத்து காட்சிகளையும் தனது விடியோவில் பதிவு செய்திருந்தார். இதனை ஊடகங்களில் வெளியிட சிலர் கேட்டிருந்தனர்.

இதையறிந்த உறவினர்கள், உடனடியாக திருப்பத்தூர் சென்று அந்த விடியோகிராபரிடம் பணம் கொடுத்து விடியோவை வாங்கி அந்த சிப்களை உடைத்து அழித்தனர். இதனால், இந்த விடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியாகாமல் தப்பித்தன என்கிறார்கள் மணமக்களின் குடும்பத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT