தமிழ்நாடு

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது: எடப்பாடி கே. பழனிசாமி

DIN

மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றார் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியை வெள்ளிக்கிழமை திறந்துவைத்த அவர் செய்தியாளர்களிடம் மேலும்
கூறியது:
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மருத்துவக் கல்லூரி தற்போது திறக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் அதிமுகவின் ஆதரவு யாருக்கு என்பதை ஆலோசித்து அறிவிப்போம். பாஜக தீண்டத்தகாத கட்சி அல்ல என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய விவரம் எதுவும் எனக்குத் தெரியாது. எய்ம்ஸ் மருத்துவமனையை எங்கு அமைக்க வேண்டும் என்ற அறிக்கையை மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஏற்கெனவே மத்திய அரசிடம் அளித்துள்ளார். அந்த இடத்தில் மருத்துவமனை அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
கால்நடைச் சந்தை கட்டுப்பாடு குறித்து மத்திய அரசிடமிருந்து இதுவரை அறிக்கை வரவில்லை. அறிக்கை கிடைத்தவுடன்தான் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்க முடியும். இதனிடையே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை பரிசீலிக்கப்படுமெனத் தெரிவித்துள்ளார்.
மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு வலிமையாக உள்ளது. 123 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் சிறப்பாகச் செயல்படுகிறது. விவசாயிகளுக்கு வண்டல் மண் திட்டம், மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் திட்டம், நிலம் வழிகாட்டு மதிப்பு குறைப்பு போன்ற பல்வேறு திட்டங்களால் மக்கள் மத்தியில் தமிழக அரசு நன்மதிப்பைப் பெற்றுள்ளது. இதை பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள்தான் திட்டமிட்டு பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். மருத்துவர் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு காணப்படும். எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் இந்த அரசை பினாமி அரசு, ஜெராக்ஸ் அரசு எனக் கூறிவருகிறார்.
ஆனால் இந்த அரசு வலிமையான அரசாகவும், மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாகவும் இயங்குகிறது. கடந்த காலத்தில் திமுக அரசு மைனாரிட்டி அரசாகவே இருந்தது. எனவே அதிமுக ஆட்சி குறித்துப் பேச ஸ்டாலினுக்கு தகுதியில்லை என்றார் முதல்வர். மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT