சென்னை: குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு வேட்பாளர் மீரா குமாருக்கு தனது ஆதரவை அளிப்பதாக மனித நேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளரும் எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாகப்பட்டினம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தமிமுன் அன்சாரி. மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரான இவர், அந்த தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்
ஆனால் தற்பொழுது அதிமுக மூன்று அணிகளாக சட்டமன்றத்தில் பிரிந்து செயல்பட்டு வருகிறது. முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் பொழுது, அன்சாரி ஆட்சிக்கு ஆதரவாக வாக்களித்தார். பின்னர் தற்பொழுது மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வரின் பதிலில் திருப்தி இல்லாமல், இவரைப் போலவே அதிமுக சின்னத்தில் நின்று வெற்றி பெற்றவர்களான தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோருடன் சேர்ந்து வெளிநடப்பு செய்தனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் வேட்பாளரான ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு கேட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார். இதையடுத்து 3 அணிகளாக பிரிந்துள்ள அதிமுக, பாஜக வேட்பாளருக்கு தனது ஆதரவை அளித்துள்ளது.
இந்நிலையில், குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு வேட்பாளர் மீரா குமாருக்கு தனது ஆதரவை அளிப்பதாக தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
மேலும், தலித் சமுதாயத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருப்பதால் மீராகுமாருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய பதவி பறிபோனாலும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிக்க போவதில்லை என்று தமிமுன் அன்சாரி சிலி தினங்களுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.