தமிழ்நாடு

சிறுதானியங்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் விவசாயிகள்! பள்ளத்தாக்கில் ஒரு முன்மாதிரி முயற்சி

சா. ஜெயப்பிரகாஷ்

விவசாயிகள் உள்ளிட்ட 980 பேரைக் கொண்ட "சோபா' (sitlingi organic farmers association) என்ற இயற்கை விவசாயிகள் நிறுவனம், விதவிதமான ஆர்கானிக் விளை பொருள்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்து வருகிறது.

விவசாயிகளே விலை நிர்ணயம் செய்யும் முதலாளிகள் என்ற கருத்தாக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் கடந்த 2016}17ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருவாய் ரூ. 75 லட்சம்!
தருமபுரி மாவட்டத்தில், மலைகள் சூழ்ந்த அழகிய பள்ளத்தாக்குப் பகுதி "சிட்லிங்கி'. இந்த ஊராட்சிக்குள்பட்ட 15 கிராமங்களுடன், அருகிலுள்ள கோட்டப்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த 6 கிராமங்களையும் சேர்த்து 21 கிராமங்களை உள்ளடக்கி 57 பேரைக் கொண்ட "சிட்லிங்கி பள்ளத்தாக்கு இயற்கை விவசாயிகள் சங்கம் கடந்த 2008}ல் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்பிறகு, 2015}ல் இந்தக் கிராமங்களைச் சேர்ந்த 500 விவசாயிகள் மற்றும் வீட்டிலுள்ள பெண்களையும் சேர்த்து, விவசாயிகளே விலையையும் நிர்ணயம் செய்யும் முதலாளிகள் என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் 980 பேரைக் கொண்ட தொழில் நிறுவனமாக (company act) பதிவு செய்யப்பட்டது.
அப்போதிருந்தே கேழ்வரகு, வரகு, திணை, சாமை, கம்பு போன்ற சிறுதானியங்களை வாங்கி, அவற்றை மதிப்புக் கூட்டி முறையாக உணவுப் பொருள் வழங்கல் துறையில் சான்றிதழ் பெற்று, அழகாகப் பொட்டலமிட்டு, சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
அதாவது, சிறுதானிய அரிசி, அரைத்த மாவுகள், சத்துமாவு, கேழ்வரகு அப்பளம், பிஸ்கெட், மஞ்சள் பொடி, சாம்பார் பொடி, சிறுதானிய பிஸ்கெட் உள்ளிட்ட 40}க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. விவசாயிகள்தான் நேரடியாக நிறுவன ஆவணங்களில் கையெழுத்திட முடியும். விலை நிர்ணயக் குழு, தர நிர்ணயக் குழு, நிர்வாகக் குழு உள்ளிட்ட ஏராளமான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே, விவசாயிகளின் நம்பிக்கை மிக முக்கியமானதாகி விடுகிறது.
கடந்த 2016}17ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் விற்பனை வருவாய் ரூ. 75 லட்சம். பஞ்சாப், மும்பை போன்ற இடங்களில் இருந்தும் எங்களுக்கு மொத்த வியாபார "ஆர்டர்கள்' உள்ளன என்கிறார் ஒருங்கிணைப்பாளர் டி. மஞ்சுநாத்.
தொடக்கத்தில் நபார்டு வங்கி மூலம் இந்த நிறுவனத்துடன் இணைந்த 10 குழுக்களுக்கு இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகளை விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக ரூ. 10 லட்சம் கடனாக வழங்கப்பட்டிருக்கிறது.
அதன்பிறகு மலைவாழ் மக்கள் சுகாதார முனைப்பு இயக்கம் (பஏஐ) என்ற தொண்டு நிறுவனத்தின் நிதி உதவியுடன் இத்தனைப் பெரிய நிறுவனமாக வளர்ந்து நிற்கிறது. தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த கிராமங்களாக இருந்தாலும், இங்கிருந்து சேலம், வாழப்பாடிதான் இவர்களுக்குப் பக்கம்.
விவசாய விளை பொருள்களை எப்போதாவது வரும் பேருந்தில் ஏற்றிச் சென்று விற்று வரும் மிகக் குறைந்த லாபத்தில் வாழ்க்கையை நடத்தி வந்த விவசாயிகள், இப்போது போதுமான அளவு வருமானத்தையும் தரக் கூடிய நிலைக்கு உயர்ந்திருக்கிறார்கள். 2004}ல் இப் பகுதியில் நடத்தப்பட்ட பாத யாத்திரைதான் இத்தனை பெரிய நிறுவனம் உதயமாகக் காரணம். இப்போது இவர்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு "ஸ்வாட்' (சிட்லிங்கி பள்ளத்தாக்கு விவசாய வளர்ச்சி) என்ற பெயரில் "பிராண்ட்' ஆக முன்வைத்து விற்பனை செய்கிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT