தமிழ்நாடு

ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு அடித்தளமிட்டவர் எம்.ஜி.ஆர்.: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

DIN

ஏழைக் குழந்தைகளுக்கு சத்துணவை வழங்கி அவர்களின் கல்விக்கு அடித்தளமிட்டவர் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். என பள்ளிக்கல்வி, விளையாட் டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கூறினார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் இங்கு செவ்வாய்க்கிழமை மாணவர்களின் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கொ. வீரராகவராவ் தலைமை வகித்தார். பல்கலைக்கழக துணைவேந்தர் பி.பி. செல்லத்துரை அறிமுகவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆற்றிய சிறப்புரை: தமிழகத்தில் சத்துணவை அளித்ததன் மூலம் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் கல்வி கற்பதற்கு முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். அடித்தளமிட்டார். அவரது வழியில் தற்போதைய அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கான மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசு முழு உதவியை அளிக்கும். மாணவர்கள் நலன் காக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ ஆற்றிய நிறைவுரை: காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தந்தார். மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். கிராமப்புற குழந்தைகளின் பசியாற்றும் வகையில் சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அத்திட்டம் தற்போது பல மாநிலங்களில் செயல்படுத்தப்படுவது பெருமைக்குரியது.
மூச்சை அடக்கி யோகா பயிற்சியில் ஈடுபட்டால் உடல் நலன் மேம்படும் என எம்.ஜி.ஆர். தனது திரைப்படக்காட்சி மூலம் விளக்கியுள்ளார். சமூகத்தில் நல்ல கருத்தை தமது திரைப்படம் மூலம் விளக்கி இளந்தலைமுறைக்கு வழிகாட்டிய தலைவராக எம்.ஜி.ஆர். விளங்கினார். அரசியலில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திய அவர் இறந்தும், இறவாத நிலையை எட்டியுள்ளார் என்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திண்டுக்கல் சி. சீனிவாசன் , கே.பி.அன்பழகன், ஆர்.பி.உதயகுமார், ஆர்.காமராஜ் , சி.விஜயபாஸ்கர் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, ஏ.கே.போஸ், பா.நீதிபதி, பி.பெரியபுள்ளான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பல்கலைக்கழக நாட்டுநலப்பணித் திட்டத்தைச் சேர்ந்த திருமங்கலம், தேனி, சிவகாசி உள்ளிட்ட பல்வேறு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியர் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
நாட்டுநலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி. ராஜ்குமார் வரவேற்றார். பல்கலைக்கழக ஆலோசகர் ஏ. செல்வராஜ் வாழ்த்திப்பேசினார். பதிவாளர் (பொறுப்பு) வி. சின்னையா நன்றி கூறினார்.

அதிமுகவினருக்கு மிரட்டல்

காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள டாக்டர் மு.வ. அரங்கில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா யோகா பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவில் 7 தமிழக அமைச்சர்கள் பங்கேற்றனர். அரங்கில் நுழைந்த அனைவருரிடமும்மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது: விழா நடத்துவது குறித்து அதிமுகவினருக்கு மிரட்டல் வந்ததாக கூறப்பட்டது. மர்மநபர் தொலைபேசியில் மிரட்டியதாக வந்த தகவலை அடுத்தே கூடுதல் பாதுகாப்பு மற்றும் வெடிகுண்டு கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT