தமிழ்நாடு

புகையிலைப் பொருட்கள் தடைக்குப் பின்னால் இருக்கும் 'பகீர்' தகவல்கள் உண்மையா?

தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசின் அடிப்படை ஊழியர் முதல் அமைச்சர் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ENS

சென்னை: தமிழகத்தில் தடை விதிக்கப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய தமிழக அரசின் அடிப்படை ஊழியர் முதல் அமைச்சர் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டு, அதே தமிழகத்தில் அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அரசின் அடிப்படை ஊழியர் முதல் அமைச்சர் வரை பல லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது தொடர்பான ஆவணங்களும், குட்கா நிறுவனத்தின் உரிமையாளர் வருமான வரித்துறையில் அளித்த வாக்குமூலமும் நேற்று ஊடகங்களில் வெளியாகின.

எம்டிஎம் ரக குட்கா நிறுவனத்தின் கூட்டாளிகளில் ஒருவரான மாதவ ராவ் கடந்த ஆண்டு வருமான வரித்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில், தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்காவை உற்பத்தி செய்து விற்பனை செய்வதை கண்டும் காணாமல் இருக்க, மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சருக்கு மொத்தமாக ரூ.42 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது 2016ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை தலா ரூ.14 லட்சம் என 3 தவணைகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை காவல்துறை ஆணையருக்கு ரூ.60 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. 2016ம் ஆண்டு ஏப்ரல் முதல் மே மாத இடைவெளியில் 3 தவணைகளில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாதவ ராவ் வீடு மற்றும் அவரது கணக்காளர் யோகேஷ்வரியின் வீடுகளில் நடந்த வருமான வரித்துறை சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விசாரணையில் மாதவ ராவ் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழகத்தில் உற்பத்தி செய்து விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்ட புகையிலைப் பொருட்களை, நாங்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யவே இந்த பணம் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சருக்கும், காவல்துறை ஆணையருக்கும் ராஜேந்திரன் என்பவர் மூலமாகவும், மத்திய வரித்துறை அதிகாரிகளுக்கு நந்தகுமார் என்பவர் மூலமாகவும்  லஞ்சப் பணம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

மத்திய வரித்துறை அதிகாரிக்கு மொத்தமாக ரூ.16 லட்சம் லஞ்ச அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் இதோடு நின்றுவிடவில்லை. செங்குன்றத்தைச் சேர்ந்த காவல்துறை துணை ஆணையருக்கும் ரூ.30 லட்சமும், சென்னை மாநகராட்சியின் கவுன்சிலருக்கு ரு.14 லட்சமும் லஞ்சமாக அளிக்கப்பட்டுள்ளது.

அதோடு, புகையிலைப் பொருட்களுக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை நடைமுறைப்படுத்தும் தமிழக உணவுப் பாதுகாப்புத் துறைக்கும் ரூ.35 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் வியாபாரம் எந்த தடையும் இல்லாமல் நடைபெறுவதற்காக இந்த பணம் வழங்கப்பட்டதாகவும் ராவ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வருமான வரித்துறை சொல்லும் தகவல் என்னவென்றால், இது கடந்த ஆண்டு நடந்த சோதனையின் போது கிடைத்த ஆவணங்கள், வாக்குமூலங்கள். இதன் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுகிறார்கள்.

புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்யவும் வைத்திருக்கவும் விற்பனை செய்யவும் தமிழக அரசு கடந்த 2013ம் ஆண்டு தடை விதித்தது. ஆனால் எந்த தடையும் இல்லாமல் இன்று வரை பல கடைகளில் இந்த புகையிலைப் பொருட்கள் விற்பனையாகிக் கொண்டு தான் இருக்கிறது. எனவே, இதுபோன்ற தடைகளுக்குப் பின்னால் இருப்பது மக்களின் உடல் நலம் மட்டும்தானா? என்ற மிகப்பெரிய கேள்வி மக்கள் மனதில் எழுத்தான் செய்கிறது.

இவையெல்லாம் வெறும் குற்றச்சாட்டுகளாகவும் புகாராகவும் மட்டுமேதான் உள்ளது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கும் என்பது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே மக்களுக்குத் தெரியும். ஆனால், தடை விதிக்கப்பட்ட பிறகும் புகையிலைப் பொருட்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கும் நிதர்சனமான உண்மை மட்டுமே மக்களுக்கு ஒரு நெருடலை ஏற்படுத்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT