நாங்கள் ஊரார் பிள்ளைகள் அல்ல!
இன்று தமிழ்நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் இரு சொற்கள் ‘ஹைட்ரோ கார்பன்'. ‘விளை நிலங்கள் பாழாகிவிடும். நிலத்தடி நீர் முற்றிலும் காணாமல் போகும். கடல் நீர் உட்புகுந்துவிடும். நில நடுக்கம் ஏற்பட்டால் சேதம் அதிகமிருக்கும்.
இன்று தமிழ்நாட்டை உலுக்கிக்கொண்டிருக்கும் இரு சொற்கள் ‘ஹைட்ரோ கார்பன்'. ‘விளை நிலங்கள் பாழாகிவிடும். நிலத்தடி நீர் முற்றிலும் காணாமல் போகும். கடல் நீர் உட்புகுந்துவிடும். நில நடுக்கம் ஏற்பட்டால் சேதம் அதிகமிருக்கும். மீத்தேன் என்ற பேய், உறுமாறி ஹைட்ரோ கார்பன் என்ற பிசாசு வடிவில் வந்துள்ளது' என்ற பலர் விமர்சனம் செய்து வருவதை பார்க்க முடிகிறது.
‘இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது இப்படி போராட்டங்கள் நடைபெறுகிறதா!' என்று தலை நகரிலிருந்து தமிழகத்திற்கு எதிராக குரல் வருகிறது. ‘வேறு எந்த மாநிலங்களுக்காவது இத்தகைய அநீதி இழைக்கப்படுகிறதா' என்று நம்ம ஊரிலும் பதில் குரல் எழும்புகிறது.
தமிழ்நாடு போராட்ட பூமியா? நிச்சயம் இல்லை. அடிப்படை நாகரீகம், ஒழுக்கம் ஆகியவற்றை கடைபிடிப்பதில் தமிழ்நாட்டு மக்களுக்கு நிகரானவர்கள் யாரும் இருக்க முடியாது. காவிரி பிரச்னை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த போது கடைபிடித்த ஒழுக்கம் ஆகியவை தமிழர்களின் ஒழுக்கத்திற்கு உதாரணங்கள். ஒரு குட்டிக்கதையை படிப்போம்.
ஒரு நாட்டின் அரசனை சந்திக்க வைத்தியன் ஒருவன் வந்தான்.
‘அரசே! புதிய மருந்து ஒன்று கண்டு பிடித்திருக்கிறேன். அதை சாப்பிடுபவர்களுக்கு இறப்பே ஏற்படாது. அதை மக்களிடம் சோதித்து பார்க்க விரும்புகிறேன். எனக்கு அனுமதி கொடுங்கள்', என்று கேட்டான்.
அரசனுக்கு ஆச்சர்யம். யோசித்தார்.
‘நல்லது. நமது நாட்டின் தென் மூலையில் மூன்று கிராமங்கள் இருக்கின்றன. அங்கு செல். முதல் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மருந்தை கொடுத்து பரிசோதனை செய்', என்று அனுப்பி வைத்தார் அரசர்.
அதன்படி முதல் கிராமத்திற்கு சென்றான் வைத்தியன். மக்களுக்கு மகிழ்ச்சி. மரணமே இல்லாத வாழ்க்கை என்றால் யாருக்குத்தான் கசக்கும். அனைவரும் வைத்தியன் கொடுத்த மருந்தை மகிழ்ச்சியோடு சாப்பிட்டனர்.
மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்துகொள்ள அனைவரும் காத்திருந்தனர். அடுத்த நாள் பொழுது விடிந்தது. அவர்களுக்கு அதிர்ச்சி. காரணம், மருந்தை சாப்பிட்ட அனைவரும் குடுகுடு கிழவர்களாக மாறியிருந்தனர். எழுந்துகூட நிற்க முடியாமல் கீழே துவண்டு கிடந்தனர்.
வைத்தியன் அரசரிடம் சென்றான்.
‘அரசே! என் மருந்து நன்றாகத்தான் வேலை செய்துள்ளது. இவர்கள் கிழவர்களாக மாறிவிட்டார்கள் என்று நினைக்க வேண்டாம். இவர்களுக்கு மரணம் கிடையாது. இருந்தாலும் என் மருந்தில் சிறிது மாற்றம் செய்து கொண்டு வருகிறேன். பிறகு இந்தப் பிரச்னை இருக்காது', என்றான் வைத்தியன்.
சற்று நேரத்தில் வேறொரு மருந்துடன் வந்தான். இம்முறை இரண்டாவது கிராம மக்கள் மீது சோதனையை நடத்தச் சொன்னார் அரசர். மக்களும் மருந்தை சாப்பிட்டார்கள்.
அடுத்த நாள். வைத்தியன் அதிர்ந்து போனான். காரணம் இம்முறை அந்த ஊரில் உள்ளவர்கள் எல்லோரும் இளைஞர்களாக மாறியிருந்தார்கள். ஆனால் ஒவ்வொருவரும் உயிருக்கு போராடியபடி படுக்கையில் கிடந்தனர்.
முதல் கிராமத்தில் வசிப்பவர்கள் கிழவர்களாக மாறியிருந்தாலும், எழுந்து நடக்க முடியாத நிலையில் இருந்தாலும், உயிர் போகாது. ஆனால் இரண்டாவது கிராமத்தில் இளைஞர்களாக மாறியிருந்தாலும் எந்த நேரத்திலும் உயிர் போகிற கேவலமான நிலை.
அரசனிடம் சென்று நிலையை விளக்கினான் வைத்தியன்.
‘அரசே! என்னுடைய ஆராய்ச்சி வெற்றி பெற்றுள்ளது. மருந்து நன்றாகத்தான் வேலை செய்கிறது. இந்த இரண்டு மருந்தையும் கலந்து புதிய மருந்தை கொண்டு வருகிறேன். பிறகு என் ஆராய்ச்சியின் வெற்றியை நீங்கள் உணர்வீர்கள்', என்று சொல்லிவிட்டு கிளம்பினான் வைத்தியன்.
அரசன் அதற்கு அனுமதி வழங்கினான்.
இதைக் கேள்விப்பட்ட மூன்றாவது கிராமத்து மக்கள் ஊரை காலி செய்து ஓட்டம் பிடித்தனர். நடப்பவற்றை பார்த்துக் கொண்டிருந்த அமைச்சர் பேசினார்.
‘அரசே! நம் நாட்டில் எத்தனையோ கிராமங்கள் இருக்கின்றன. ஆனால், இது போன்ற சோதனைகளுக்கு ஏன் தென் மூலையில் இருக்கும் மூன்று கிராமங்களை தேர்ந்தெடுத்தீர்கள்', என்று கேட்டார் அமைச்சர்.
‘நல்ல கேள்வி. நாட்டில் பல கிராமங்கள் இருந்தாலும், இந்த மூன்று கிராம மக்கள் மட்டும் என் மீது வைத்திருக்கும் அன்பை முறையாக வெளிப்படுத்துவதில்லை. அதனால் அவர்கள் மீது சோதனையை நடத்தச் சொன்னேன். சோதனையில் வெற்றி கிடைத்திருந்தால், அந்த மருந்தை நமக்கு பிடித்தமான மற்றவர்களுக்கும் கொடுத்திருப்பேன். தோல்வியடைந்தால், நம்முடைய அபிமானிகளை நாம் இழக்கவில்லை என்ற திருப்தியோடு சோதனை முடிந்திருக்கும்', என்று சொன்னார் அரசர்.
இந்த அரசரின் நிலையில் இருப்பவர்கள்தான் நமது தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இந்திய தேசிய அரசியலில் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கை, அக்கறை தமிழக மக்களிடம் இருப்பதில்லை. அதற்கு உதாரணம்தான் நாம் இன்று எதிர்ப்பு தெரிவிக்கும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்கள். விளை நிலங்கள் போனாலும் பரவாயில்லை. கிராமங்கள் பாலைவனங்களாக ஆனாலும் பரவாயில்லை என்ற முடிவை தேசிய கட்சிகள் எடுத்தது வருத்தமளிக்கிறது. கதையில் வருவதைப் போல சோதனைகளைச் செய்து பார்க்க தமிழகம் சோதனைக் களமல்ல. தமிழர்கள் கூண்டில் அடைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படும் எலிகளும் அல்ல.
‘நாடு நலம் பெற ஒரு மாநிலத்தை இழப்பதில் தவறில்லை', என்று யாராவது சொன்னாலும், ‘நாட்டுக்காக தியாகம் செய்வோம்', என்று யாராவது உங்களை அழைத்தாலும், அவர்களிடத்தில் ஒரு கேள்வியைக் கேளுங்கள். தியாகம் என்ற வார்த்தை உயிர் பெறுகிறது என்றால், அங்கு “இழப்பு” என்பது நிச்சயம் இருக்கும். ‘ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் எத்தகைய இழப்புகள் ஏற்படும், எப்படிப்பட்ட தியாகங்களை செய்யப்போகிறீர்கள்' போன்ற விவரங்கள் நிலத்தை கையகப்படுத்தும் முன் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டதா? நிலங்களை விற்றவர்கள் மெத்த படித்தவர்களோ, அணு விஞ்ஞானிகளோ அல்ல. அவர்கள் தேச நலனுக்காக மட்டுமே நிலங்கள் விற்பனை செய்துள்ளார்கள். தற்போது அந்த திட்டம் தனது இனத்தையே அழிக்கும் என்ற உண்மை புரிந்தவுடன் அவர்கள் போராட்டுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
இன்றைய தினத்தில், இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது அணு உலைக்கு அஸ்திவாரம் போட முடியுமா? ஆனால் தமிழகத்தில் கூடங்குளம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் எதிர்ப்பை காந்திய வழியில் மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். கூடங்குளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிற உலை, ஒருவேளை விஷத்தை கக்குமேயானால், சுடுகாடாய் போவது தமிழகம்தான். கேரளத்துக்காரனும், கர்நாடகனும் அணு உலையை எதிர்க்கிறான். ஆனால் அதில் கிடைக்கும் மின்சாரம் அவனுக்கும் போய்ச் சேருகிறது. சுகத்தை பிரித்து கொடுக்கும் மத்திய அரசு, சங்கடங்களையும், சிக்கல்களையும் ஏன் பிரித்துக் கொடுப்பதில்லை? வருத்தமான ஒரு விஷயம், தமிழகத்தின் தேவைக்கு தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்கப்படுகிறது. இது என்ன நியாயம்?
காவிரி பிரச்னை, சேது சமுத்திரத் திட்டம், மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன், போன்ற எல்லா திட்டங்களிலும் மத்தியில் ஆளுகின்ற, ஆண்ட தேசிய கட்சிகள் தமிழ் நாட்டிற்கு வஞ்சனையை மட்டுமே செய்து வந்திருக்கிறது. அதைப் பற்றி விளக்கிக்கூற வேண்டிய அவசியமில்லை. மக்கள் தங்களின் எதிர்ப்பை தேர்தலில் வெளிப்படுத்துகிறார்கள். அதனால் தான் தேசிய கட்சிகள் இன்றுவரை தனது சொந்த காலில் நிற்க முடியாமல் வீரவசனங்களை மட்டுமே நம்பி காலத்தை கழிக்கிறார்கள்.
நாட்டின் எந்த பகுதியிலும் இத்தகைய அநீதி நடக்காது. மத்திய அரசு நடக்கவும் விடாது. காரணம் மற்ற எல்லா மாநிலங்களிலும் தேசிய கட்சிகளுக்கென்று ஒரு ஓட்டு வங்கி உள்ளது. இங்கு அது கிடையாது.
திராவிட கட்சிகள் மோசம் என்று சொல்பவர்கள் தேசிய கட்சிகளின் இந்த செயல்களை எப்படி நியாயப்படுத்தப் போகிறீர்கள்? மக்கள் இன்று தொடர்ந்திருக்கும் இந்தப் போராட்டங்கள் தேசியக்கட்சிகளின் நிலைப்பாடுகளுக்கு எதிராகத்தானே தவிர தேசத்திற்கு எதிரானது அல்ல.
மத்திய அரசே! உங்களிடம் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். இப்போது போராட்டங்கள் நடக்கின்றன. எங்கள் கைகளை உயர்த்தியிருக்கிறோம். இவையெல்லாம் ஏதோ மத்திய அரசுக்கு எதிரான, தேசத்துக்கு எதிரான போர் என்று நினைக்க வேண்டாம். மகாபாரதத்தில் திரெளபதியின் துகில் உரிக்கப்படும் போது, எவ்வாறு கைகளை உயர்த்தி பகவான் கிருஷ்ணரை பிரார்த்தித்தாளோ அப்படித்தான் எங்கள் கைகளும் இன்று உயர்ந்திருக்கின்றன. தேசியத்தின் மீது எங்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையே இத்தனை வஞ்சனைகளுக்கு பிறகும் காந்திய வழியில் உங்களுக்கு அழுத்தம் கொடுக்க முயல்கிறோம்.
தன் குழந்தைகளுடன் ஆற்றில் குளிக்கச் சென்றார் ஒரு தந்தை. உடன் பக்கத்து வீட்டு சிறுவனையும் அழைத்துச் சென்றார். அனைவரும் ஆற்றங்கரையை சென்றடைந்தனர். தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. எவ்வளவு ஆழம் இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை. பக்கத்து வீட்டு சிறுவனை அழைத்தார் அந்த பொறுப்பான தந்தை.
‘டேய் தம்பி ஆற்றில் இறங்கி எவ்வளவு ஆழம் இருக்குனு பாரு', என்றார்.
இந்த தந்தையின் நிலையில் தான் இருக்கிறது நமது தேசிய கட்சிகளின் அரசுகள். எல்லா பிரச்னையான விஷயங்களையும் தமிழ்நாட்டில் களமிறக்கி சோதித்துப் பார்க்கிறது. ஆழம் பார்க்க ஊரார் பிள்ளையை ஆற்றில் இறக்கிவிடும் சுயநல தந்தையாக நீங்கள் இருக்கலாம். ஆனால், நாங்கள் ஊரார் பிள்ளைகள் அல்ல. உங்கள் பிள்ளைகள்.
-சாது ஸ்ரீராம்