ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நிதிநிலை அறிக்கையை வைத்தது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் இடையே பேரவையில் கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் அவையில் 25 நிமிடங்களுக்கும் அமளி நிலவியது.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் உதயசூரியன் பேசியது:
சட்டப்பேரவையில் 1989-இல் கருணாநிதி ரூ.70 ஆயிரம் கோடிக்கு பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். அதே சமயம், கை ரிக்ஷா ஒழிப்பு, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத் திட்டம் போன்ற திட்டங்களை அறிவித்தார்.
அப்போது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த திருநாவுக்கரசர், கஜானாவும், களஞ்சியமும் காலியாக உள்ளது. எப்படித் திட்டங்களை நிறைவேற்றப் போகிறீர்கள் என்றார். அதற்கு கருணாநிதி, கஜானாவும் களஞ்சியமும் காலியானாலும் ஞானம் இன்னும் காலியாகவில்லை என்றார்.
க.அன்பழகன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறிய அளவிலான பைலை எடுத்து வந்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தனர். ஆனால், நீங்கள் (டி.ஜெயக்குமார்) என்று குறிப்பிட்டு சில விஷயங்களை கூறினார்.
அதற்கு அதிமுக உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து உதயசூரியன் பேசியதை பேரவைத் தலைவர் தனபால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார்.
டி.ஜெயக்குமார்: நிதிநிலை அறிக்கையை எதில் எடுத்து வருகிறோம் என்பது பிரச்னை இல்லை. அதில் உள்ள அம்சங்கள்தான் முக்கியம். திமுக ஆதரவு பெற்ற கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போதும் தமிழகத்துக்குப் போதிய வருவாய் வரவில்லை.
இதற்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின்: திமுக ஆட்சியில் இருந்துபோதுதான் மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம், தங்க நாற்கரச் சாலை திட்டம், கத்திப்பாரா மேம்பாலம் போன்ற திட்டங்கள் மத்திய அரசிடம் இருந்து கேட்டுப் பெறப்பட்டன. இதுபோன்ற பட்டியலை எங்களால் சொல்ல முடியும். என் கேள்வி ஒன்றே ஒன்றுதான். நிதிநிலை அறிக்கை என்பது ரகசியமாகத் தாக்கல் செய்ய வேண்டிய ஒன்றாகும். ஆனால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய வேண்டிய நிதிநிலை அறிக்கையை ஜெயலலிதா சமாதிக்கு நிதியமைச்சர் கொண்டு சென்றார். இது மரபா?
டி.ஜெயக்குமார்: நிதிநிலை அறிக்கையை ஜெயலலிதா சமாதியில் வைத்து ஆசி பெற்றேன். அதில் உள்ள விவரங்கள் பத்திரிகைகளில் செய்தியாகக் கசிந்திருந்தால் அது தவறு. அப்படி, வெளியாகியிருந்தால் அதற்கு நான் தார்மீகப் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். பெட்டியை வைத்துத்தான் ஆசி பெற்றேன். பெட்டிக்குள் என்ன இருந்தது தெரியுமா?
மு.க.ஸ்டாலின்: பத்திரிகை, தொலைக்காட்சிகளில் நிதி நிலை அறிக்கையை வைத்து ஆசி வாங்கியதாகத்தான் செய்திகள் வந்தன. அப்படியானால், அங்கு வெறும் பெட்டியைத்தான் வைத்தீர்களா?
டி.ஜெயக்குமார்: இது சாதாரண விஷயம். நிதிநிலை அறிக்கை வெளியே கசிந்தால்தான் பிரச்னை. பதவிப் பிரமாணம் எடுக்கும்போது ரகசியத்தைக் காப்போம் என்று உறுதிமொழி எடுóக்கிறோம். அதை மீறி எதுவும் செயல்படவில்லை என்றார்.
இந்த நேரத்தில் திமுக உறுப்பினர்கள் சிலர் கொடுத்த குரலால், அதிமுக உறுப்பினர்கள் எழுந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பேரவைத் தலைவரின் கட்டுப்பாட்டை மீறி திமுக - அதிமுக உறுப்பினர்கள் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தனர். இதனால் அவையில் சிறிது பெரும் அமளி நீடித்தது.
பேரவைத் தலைவர் தனபால்: எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் சொல்ல வேண்டிய கடமை உள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமைதியாகக் கேட்கின்றனர். அதே போல ஆளுங்கட்சியினர் பேசும்போதும் முறையாக ஒத்துழைப்புக் கொடுத்தால்தான் அவை அமைதியாக இருக்கும். யார் பேசினாலும் பேரவைத் தலைவரைப் பார்த்துப் பேச வேண்டும். அவையில் உட்கார்ந்தபடி பேசுவது கண்டிக்கத்தக்கது என்றார். அதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அமைதியாக அமர்ந்தனர்.
டி.ஜெயக்குமார்: ஜெயலலிதா நினைவிடத்தில் நிதிநிலை அறிக்கையை வைத்து ஆசி பெற்றது தவறு ஒன்றும் இல்லை என்று கூறி, திமுக ஆட்சியில் நடைபெற்றதாக ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின்: ஜெயலலிதா நினைவிடத்தில் நிதிநிலை அறிக்கையை வைத்தது தொடர்பாக ஆளுநரிடம் புகார் கொடுத்துள்ளோம். அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது அவரின் உரிமை. அதற்குள் நான் செல்லவில்லை. ஆனால், அமைச்சர், திமுக தொடர்பாகக் கூறியவை தவறான தகவல். ஓர் அமைச்சர் அவைக்குத் தவறான தகவல் தரலாமா? அதனை உடனே அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டும்.
அதைத் தொடர்ந்து அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றொரு சம்பவத்தைக் குறிப்பிட்டார்.
அந்தத் தகவலும் தவறானது என்றும், அதற்கும் ஆதாரம் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று ஸ்டாலின் கோரினார்.
அவை முன்னவர் செங்கோட்டையன்: அமைச்சர் குறிப்பிட்டுக் கூறிய தகவலையும், எதிர்க்கட்சித் தலைவர் கூறியதையும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடலாம் என்றார். பேரவைத் தலைவரும் அந்தத் தகவல்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டார். இந்த விவகாரத்தால் 25 நிமிடங்களுக்கு அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.