தமிழ்நாடு

எழுத்தாளர் அசோகமித்திரனுக்கு நிகர் எவருமில்லை: எஸ்.ராமகிருஷ்ணன் இரங்கல்

தினமணி

பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரனின் மறைவு குறித்து தனது இணையதளத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தெரிவித்திருப்பதாவது:
சென்னை நகரின் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்ததில் அவருக்கு நிகர் எவருமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரபல தமிழ் எழுத்தாளர் அசோகமித்திரன் (85) சென்னை வேளச்சேரியில் வியாழக்கிழமை (மார்ச் 23) இரவு காலமானார். அவரது மறைவுக்கு இந்திய இலக்கிய உலகமே இரங்கல் தெரிவித்துக்கொண்டிருக்கிறது.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில், “சென்னை நகரின் வாழ்க்கையை எழுத்தில் பதிவு செய்ததில் அவருக்கு நிகர் எவருமில்லை. சினிமாவின் மறுபக்கம் பற்றி அவர் எழுதிய கரைந்த நிழல்கள் நாவல் தமிழின் மகத்தான படைப்பு. ஒற்றன், தண்ணீர், மானசரோவர் எனத் தனது முக்கிய நாவல்களின் வழியே தமிழ் புனைவெழுத்தின் உச்சங்களை அவர் படைத்துக் காட்டியுள்ளார். ஹாலிவுட் திரைப்படங்கள் குறித்தும், அமெரிக்க எழுத்தாளர்கள் குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகள் அபாரமானவை. எளிமையும் கலைநேர்த்தியும் மிக்க சிறுகதைகளை எழுதியவர் அசோகமித்ரன். அவரது நகைச்சுவை உணர்வு அபாரமானது.

தனது கஷ்டங்களை, வேதனைகளைக் கலையாக மாற்றத் தெரிந்த அற்புதமான படைப்பாளி. அவரது மறைவு தமிழ் இலக்கியத்திற்குப் பேரிழப்பாகும்.” என்று எழுதியுள்ளார்.

ஆந்திர மாநிலம் செகந்திராபாதில் 1931-ல் பிறந்த அசோகமித்திரன், தந்தையின் மறைவுக்குப் பிறகு 1952-ல் சென்னையில் குடியேறினார். ஜெமினி ஸ்டுடியோவில் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றிய அவர், 1956-ஆம் ஆண்டு முதல் எழுதத் தொடங்கினார்.

ஜெமினி ஸ்டூடியோ அனுபவங்களின் அடிப்படையில் 'மை ஃபோர்ட்டீன் இயர்ஸ் வித் பாஸ்' என்ற ஆங்கில நூலை எழுதினார்.
'கரைந்த நிழல்கள்', 'தண்ணீர்', '18-ஆவது அட்சக்கோடு', 'ஒற்றன்', 'மானசரோவர்' ஆகியவை அசோகமித்திரனின் பிரபலமான நாவல்களில் சில. அவர் 250-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். அவரது நூற்றுக்கணக்கான கட்டுரைகள் பல்வேறு தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. கணையாழி மாத இதழின் ஆசிரியராக சுமார் 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஆங்கிலத்திலும் பல கட்டுரைகளை எழுதியுள்ளார்.

சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகளை பத்திரிகைகளில் அசோகமித்திரன் எழுத ஆரம்பித்தார். இவரது படைப்புகள் பிற இந்திய மொழிகள், ஆங்கிலம், ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. சாகித்ய அகாதெமி விருது, திருவிக விருது, டால்மியா மத நல்லிணக்க விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 'அப்பாவின் சிநேகிதர்' என்ற நூலுக்காக சாகித்ய அகாதெமி விருதைப் பெற்றார்.

மறைந்த அசோகமித்திரனின் உடல் அவரது மகன் தி.ராமகிருஷ்ணனின் சென்னை வேளச்சேரி இல்லத்தில் (எஸ் 5, பாபாஸ் கார்டன், சாஸ்திரி தெரு (பிஎஸ்என்எல் தொலைபேசி அலுவலகம் அருகில்) வேளச்சேரி-தொ.பே. எண் 044-22431698) பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு வெள்ளிக்கிழமை (மார்ச் 24) பெசன்ட் நகர் மின் மயானத்தில் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT