தமிழ்நாடு

தமிழக விவசாயிகள் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? மூன்று நாட்களில பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

DIN

புதுதில்லி: தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பான வழக்கில் விவசாயிகள் நலனுக்காக தமிழக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது பற்றி மூன்று நாட்களில பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையைத் தடுக்க மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு பொது நல வழக்காடு மையம் சார்பில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் ரமேஷ் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீது கடந்த மாதம் 13-ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் கடந்த மாதம் 21-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தமிழக அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ஏற்பட்ட வறட்சியின் பாதிப்பால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. தமிழகத்தில் 82 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். உடல் நலக் குறைவு, வயது முதிர்ச்சி, மாரடைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த 82 விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல பல்வேறு மாநில அரசுகளின் சார்பிலும் பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை பரிசீலித்த நீதிபதிகள், 'இந்த விவகாரம் தொடர்பான விசாரணையை மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப் பரிந்துரைக்கிறோம். வரும் செவ்வாய்க்கிழமை (மே 2) மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரிக்கும்' என்று குறிப்பிட்டனர்.

அதன் அடிப்படையில் இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்பொழுது நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விவசாயிகளின் தற்கொலையினை தடுக்க தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் என்னவென்று கேள்வி எழுப்பியது.

அப்பொழுது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விவசாயிகள் நலன் காக்க விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை மற்றும் உழவர் சந்தை ஆகியவை நிறுவப்பட்டுள்ளன என்று கூறினார். மேலும் மாநிலத்தில் 32 மாவட்டங்களில் விவசாயிகளுக்கான தகவல் மைங்களும், விழிப்புணர்வு அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், விவசாயிகள் தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் என்ன என்று குறித்து தெரிவிக்க வேண்டும் என்று கோரினர். மேலும் இது தொடர்பாக மூன்று நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT