முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் உரிய அனுமதி பெற்று விரைவில் வெளியிடப்படும் என அதிமுக அம்மா கட்சியின் கர்நாடக மாநிலச் செயலர் வா.புகழேந்தி தெரிவித்தார்.
அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மதுரை பழங்காநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கட்சியின் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி.தினகரன் மீது அடிப்படை ஆதாரம் இல்லாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இருந்து வெளியே வந்து விடுவார் என்பதால் இன்னொரு வழக்குப்பதிவு செய்கின்றனர்.
அரசியல் உள்நோக்கத்துடன் இத்தகைய வழக்குகள் பதிவு செய்வது கண்டனத்துக்குரியது. எத்தகைய வழக்குகள் பதிவு செய்தாலும் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்படும்.
மதுரையில் தொடங்கியுள்ள போராட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெறும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது குறித்து சர்ச்சை எழுப்பப்படுகிறது. சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டால் பிரச்னைக்கு முடிவு ஏற்படுமே எனக் கேட்கிறீர்கள். அது உண்மைதான். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற புகைப்படம் உரிய அனுமதி பெற்று விரைவில் வெளியிடப்படும் என்றார்.
முன்னதாக புகழேந்தி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நிர்வாகிகள் ராமசுப்பு, வெற்றிப்பாண்டி, செழியன், உமா கணேசன், அதிமுக தொழிற்சங்க துணைத் தலைவர் பரமானந்தம், கட்சி நிர்வாகிகள் பெரியகுளம் முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் அரசியல் உள்நோக்கத்துடன் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த வழக்கைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.