தமிழ்நாடு

ரூ.85 ஆயிரம் கோடியில் அடுத்த கட்ட மெட்ரோ ரயில் திட்டம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

DIN

சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ரூ.85 ஆயிரம் கோடி செலவில் 107 கி.மீ. தூரத்துக்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமங்கலம் - நேரு பூங்கா இடையிலான சுரங்க வழி மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவை தொடக்க விழாவில் அவர் பேசியது:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தில், 54 கி.மீ. நீள வழித்தடங்கள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இச்சேவையை மேலும் விரிவுபடுத்த இரண்டாம் கட்டமாக, மூன்று மெட்ரோ ரயில் வழித்தடங்களில் செயல்படுத்த முடிவு செய்து, வரைவு சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான நிர்வாக ஒப்புதல் வழங்கியிருந்தது.
அதனடிப்படையில் விரிவான திட்ட அறிக்கையை ரைட்ஸ் நிறுவனம் அரசுக்குத் தயாரித்து அளித்துள்ளது. அவ்வறிக்கையில் 107.55 கி.மீ. நீளத்திலான மூன்று வழித்தடங்கள் அதாவது மாதவரம் முதல் சிறுசேரி வரை ஒரு வழித்தடமும் சென்னை புறநகர் பேருந்து நிலையம் முதல் கலங்கரை விளக்கம் வரை ஒரு வழித்தடமும் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை ஒரு வழித்தடமும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இவ்விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொண்ட அரசு, அவ்வழித்தடங்களை ரூ. 85,047 கோடி செலவில் செயல்படுத்த கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளது.
இத்திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல், நிதியுதவி மற்றும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் கடனுதவி பெறவும், மத்திய நகர்ப்புற அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் இத்திட்டம் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையின் 2016-2017 ஆம் ஆண்டுக்கான சுழல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த விரிவாக்கத் திட்டத்துக்கு விரைவில் மத்திய அரசின் ஒப்புதல் வழங்க வேண்டும். 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போதைய தி.மு.க ஆட்சியின் போது மத்திய அரசு, மாநில அரசு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதில் பல அம்சங்கள் மாநில அரசின் நலன்களுக்கு எதிராக இருப்பதாலும், திட்ட செயலாக்க காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தும் என்பதாலும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மாற்றி அமைக்கப்பட வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரதமரிடம் கேட்டுக்கொண்டார்.
இதுகுறித்த விரிவான விவரங்களை பிரதமருக்கு நான் அனுப்பியிருந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளேன். மாநில அரசு பாதிக்கப்படாத வகையில் ஒப்பந்தத்தை மாற்றி அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வழித்தடங்கள் தற்போது பயன்பாட்டிலுள்ள புறநகர் ரயில், வெளியூர் பேருந்து, மாநகரப் பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை ஒருங்கிணைக்கும் வகையில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் சென்னை பெருநகரப் பகுதியில் பொதுப் போக்குவரத்தின் பங்கு கணிசமான அளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே வித்திட்டார். ரூ.14,600 கோடி மதிப்பீட்டிலான சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு, 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு மே மாதம் வரை அப்போதைய தி.மு.க. ஆட்சியில் ரூ.1,143 கோடி மட்டுமே செலவிடப்பட்டது.
2011-ஆம் ஆண்டு ஜூன் முதல் 2017- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ரூ.13,787 கோடி செலவிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் முதற்கட்டத்தில், மீதமுள்ள சுரங்க வழித்தடமான நேரு பூங்கா முதல் சென்னை சென்ட்ரல் வழித்தடம் மற்றும் சுரங்கப்பாதை ரயில் நிலையங்களின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வழித்தடம் இந்த ஆண்டின் இறுதிக்குள்ளும், எஞ்சியுள்ள சின்னமலை முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான சுரங்க வழித்தடம் 2018 ஆம் ஆண்டு மத்தியிலும் முடிக்கப்பட்டு, மெட்ரோ ரயில் சேவை துவக்கப்படும் என்றார் எடப்பாடி கே.பழனிசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பனா சோரன் வேட்புமனுத் தாக்கல்!

கோடை விடுமுறை: ஏப். 30-ல் வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

விஷமான சிக்கன் ஷவர்மா: 12 பேர் மருத்துவமனையில் அனுமதி!

ஓ.. கிரேசி மின்னல்...!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி

SCROLL FOR NEXT