தமிழ்நாடு

விவசாயிகள் அல்லாதவர்கள் வண்டல் மண் அள்ளினால் நடவடிக்கை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி

DIN

விவசாயிகள் அல்லாதவர்கள் வண்டல் மண் அள்ளினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.
மேட்டூர் அணை தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்த பிறகு, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியது: மேட்டூர் அணையில் 120 அடி தண்ணீர் தேக்க முடியும். அணையின் நீர் கொள்ளளவு 93.470 டிஎம்சி ஆகும். காவிரியின் நீர்பிடிப்புப் பகுதி கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தில் 14,300 சதுர மைல் பரப்பளவாகும். அணையின் நீர்ப்பரப்புப் பகுதி 59.25 சதுர மைல் ஆகும்.
தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் சுமார் 16.05 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டுகளில் இதுவரை 38 ஆண்டுகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
ரூ.50 கோடியில் கால்வாய் புனரமைப்புப் பணி: சேலம் மாவட்டம், மேட்டூர் மேற்குக்கரை கால்வாய் மேல் சரகம் 7,283 மீட்டர் முதல் 13,920 மீட்டர் வரை மற்றும் நாமக்கல் மாவட்டம், குமாரபுரி மேட்டூர் கிழக்குக்கரை கால்வாய் கீழ் சரகம் 45,300 மீட்டர் முதல் 58,000 மீட்டர் வரை கால்வாய் புனரமைக்கும் பணிகள் ரூ. 50 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளன.
சேலம் காடையாம்பட்டி சரபங்கா நதிக்கரையைப் பலப்படுத்தும் 3 ஏரிகள், 4 அணைக்கட்டுகள் புனரமைக்கும் பணிகள் ரூ.7.81 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளன. அணைகள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ், மேட்டூர் அணையைப் புனரமைத்து மேம்பாடு செய்யும் பணி ரூ. 10.72 கோடி மதிப்பில் முன்னேற்றத்தில் உள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்த சாதனையை விளக்கும் பொருட்டு, மேட்டூர் அணை பூங்காவின் முகப்பில் கல்வெட்டாக பதித்து பூங்காவின் நுழைவுவாயிலை சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 140 ஆண்டுகள் இல்லாத கடும் வறட்சி தற்போது நிலவுகிறது. வறட்சியை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் ஆகியவைகளை தூர்வாரி, கரைகளைப் பலப்படுத்தி மழை வெள்ளம் தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல் கட்டமாக ரூ.100 கோடி திட்டத்தில் 1,519 ஏரிகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு, தூர்வாரப்படுகின்றன. மேலும் ரூ. 300 கோடி திட்டத்தில் 2,065 ஏரிகளைத் தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைவில் துவங்கப்படும் என்றார்.
மண் அள்ள விதி தளர்த்தல்: அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் அளித்த பதில் விவரம்:
விவசாயிகள் மண் அள்ள முன்னர் ஆட்சியரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டு, அந்தந்த வட்டாட்சியர் மூலம் மண் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் தங்களின் நிலங்களுக்குத் தேவையான வண்டல் மண்ணை மேட்டூர் அணையிலிருந்து கொண்டு செல்வதற்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்யும். விவசாயிகள் அல்லாதவர்கள் வண்டல் மண் அள்ளினால் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேட்டூர் தோணிமடுவு திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.
ஆளுநர் நிராகரிக்கவில்லை: அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனத்துக்குத் தேடல் குழு அளித்த 3 பேர் பட்டியலை ஆளுநர் நிராகரிக்கவில்லை. மாறாக, அவர் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என நினைக்கிறார். தமிழக அரசும் அதைத்தான் நினைக்கிறது என்றார்.
பேட்டியின்போது அமைச்சர்கள் பி.தங்கமணி, வி.சரோஜா, கே.பி.அன்பழகன், அரசுத் துறை அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

கொடைக்கானல்: இன்றிரவு முதல் இ-பாஸ் பெற பதிவு செய்யலாம்

வாரணாசியில் மே 14-ல் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT