புதுவையில் கல்லறை திருநாள் அனுசரிப்பு: முன்னோர் கல்லறைகளில் கிறிஸ்துவர்கள் மலர்தூவி அஞ்சலி
புதுவையில் கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் இன்று கல்லறை தோட்டத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
புதுவையில் கல்லறை திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் இன்று கல்லறை தோட்டத்திற்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் நவம்பர் 2-நம் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இந்நாளில் கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்த கல்லறைகளுக்கு வர்ணம் பூசி, மலர்களால் அலங் கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றுவார்கள். இறந்தவர்களின் ஆன்மாக்கள் இளைப்பாறுதல் அடைவதற்காக பிரார்த்தனையும் செய்வார்கள்.
இதை முன்னிட்டு புதுவையில் உள்ள கிறிஸ்தவர்களின் கல்லறைகளை சுத்தம் செய்து சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கல்லறைகளில் உள்ள செடிகளை அகற்றி விட்டு வர்ணம் பூசப்பட்டது. கல்லறைகளை அலங்கரிப்பதற்காக மிஷன்வீதியில் ஜென்மராக்கினி மாதா கோயில் அருகில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல்வேறு வகையான மலர்களை கிறிஸ்துவர்கள் வாங்கிச் சென்றனர்.
சிறப்பு திருப்பலி
புதுவையில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கல்லறை திருநாளை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. உப்பளம் நேதாஜி நகரில் உள்ள கல்லறை தோட்டத்தில் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது அங்குள்ள கல்லறைகளை மலர்களால் அலங்கரித்து இறந்தவர்களின் உறவினர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அதையடுத்து சிறப்பு பிரார்த்தனைகளும், கல்லறைகளில் புனித நீர் தெளித்து மந்திரிக்கும் நிகழ்ச்சியும் நடந்தன.
அதேபோல் அரியாங்குப்பம், நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கல்லறை தோட்டங்களிலும் ஏராளமான கிறிஸ்தவர்கள் மலர்தூவி அஞ்சலி மற்றும் பிரார்த்தனை செய்தனர்.