தமிழ்நாடு

பாஜகவினர் மூவர் எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டது செல்லாது: புதுவை பேரவைத் தலைவர் உத்தரவு

தினமணி

புதுவை சட்டப்பேரவைக்கு பாஜகவைச் சேர்ந்த 3 பேர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப்பட்டது செல்லாது என்று, சட்டப்பேரவைத் தலைவர் வி.வைத்திலிங்கம் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
 புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரை சட்டப்பேரவையின் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமனம் செய்து ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார். ஆனால், அவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்க பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்து விட்டார்.
 இதற்கிடையே, ஆளுநர் மாளிகையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் எந்தவித அறிவிப்புமின்றி ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதற்கு ஆளும் காங்கிரஸ் அரசு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும், இதுதொடர்பாக அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அது நிலுவையில் உள்ளது.
 நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்ட 3 பேரும் தங்களுக்கு எம்.எல்.ஏ.க்களுக்குரிய சலுகைகளை வழங்க வேண்டும் என பேரவைத் தலைவரிடம் கடிதம் அளித்தனர். ஆனால், உரிய வகையில் அறிவிப்பு இல்லை எனக் கூறி வைத்திலிங்கம் அதை நிராகரித்து விட்டார்.
 இதற்கிடையே, அவர் அமெரிக்கா சென்ற நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் கிடப்பில் இருந்தது. வைத்திலிங்கம் கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்காவிலிருந்து புதுச்சேரிக்கு வந்தார். நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் உரிய அறிவிப்பை தலைமைச் செயலருக்கு ஏற்கெனவே அனுப்பி வைத்துள்ளது. பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் இதில் என்ன முடிவெடுப்பார் என எதிர்பார்ப்பு நிலவியது.
 இதற்கிடையே பேரவைச் செயலாளர் வின்சென்ட் ராயர் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் தொடர்பாக வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:
 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனம் என்பது அரசியல் சட்டத்தின்படியும், புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகள் படியும் உரிய தகுதி வாய்ந்த நபரால் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இது செல்லாது. மேலும் துணைநிலை ஆளுநர் மூலம் நியமன எம்.எல்.ஏ.க்களாக பதவிப் பிரமாணம் மேற்கொள்ளப்பட்டாலும், பேரவைத் தலைவரால் அவையின் நியமன எம்.எல்.ஏ.க்களாக அங்கீகரிக்க வேண்டும் என்ற நிலை இல்லை என்பதால் செல்லாததாகி விடுகிறது. எனவே எம்.எல்.ஏ.க்களுக்கான சலுகைகள், வசதிகள் கோரி உங்களால் அளிக்கப்பட்ட முறையீடுகள் நிராகரிக்கப்படுகிறது என உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
 மேலும், இந்த உத்தரவு நியமன எம்.எல்.ஏ.க்களாக பதவிப் பிரமாணம் ஏற்ற 3 பேருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT