தமிழ்நாடு

ஆபத்தான நிலையில் கால்வாயைக் கடக்கும் பள்ளி மாணவர்கள்...!

DIN

கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சின்னமாங்கோடு பகுதியில் இருந்து சில்வர் கால்வாயை இடுப்பளவு நீரில் கடந்து சுண்ணாம்புகுளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சென்று வருகின்றனர். 
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அருகே உள்ள சின்னமாங்கோடு பகுதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். 
இப்பகுதியில் தொடக்கப் பள்ளி மட்டும் உள்ளது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி படிப்பைத்தொடரவும், தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கவும் இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தினமும் 7 கி.மீ. தொலைவில் உள்ள சுண்ணாம்புக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், தனியார் பள்ளிகளுக்கும் சென்று வருகின்றனர். 
இந்நிலையில், தொடர் மழை காரணமாக இப்பகுதி மாணவர்கள் வரும் வழியில் உள்ள சில்வர் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இவ்வழியே அனைத்து வாகனப் போக்குவரத்தும் சில நாள்களாகவே தடைபட்டு உள்ளன. 
இந்நிலையில், இப்பகுதி மாணவர்கள் தலையில் புத்தகப் பையை சுமந்தபடி இந்த கால்வாயை இடுப்பளவு நீரில் நடந்தே கடந்து மறுகரையை அடைகின்றனர். அங்கிருந்து நடந்தோ அல்லது அவ்வழியே செல்லும் வாகனங்களிலோ பள்ளிக்குச் சென்று வரும் அவல நிலை உள்ளது.
தரைப் பாலம் அமைக்க கோரிக்கை: இதுகுறித்து, இப்பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் கூறியதாவது: கும்மிடிப்பூண்டி வட்டம், ஆரம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்டும், பொன்னேரி வட்டம் மீஞ்சூர் ஒன்றியம், பூங்குளம் ஊராட்சிக்கு உள்பட்டும் உள்ள சின்னமாங்கோடு பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், பள்ளிக்கு தினமும் சுண்ணாம்புகுளம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சென்று வருகின்றனர். 
வெயில் காலத்தில் சின்னமாங்கோடு-சுண்ணாம்புகுளம் சாலையில் மேற்கண்ட சில்வர் கால்வாய் வறண்டு காணப்படும்.
மழைக் காலம் வந்தால் இந்த கால்வாய் வழியே வெள்ளநீர் பழவேற்காடு ஏரிக்கு பாயும். இந்த கால்வாயை இடுப்பளவு நீரில் நடந்து கடக்க வேண்டி உள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த அவல நிலை நீடிக்கிறது. மழைநீரின் அளவு அதிகரித்தால் இந்த கால்வாயைக் கடக்க படகு வசதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது. 
மழைக்காலங்களில் தங்கள் பிள்ளைகளை இந்த கால்வாய் வழியே பள்ளிக்கு அனுப்ப பயந்து பலர் அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் விட்டு விடுகின்றனர். 
இந்த கால்வாயில் சிறுபாலம் கட்டித்தர வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். 
கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதேபோல மழைக் காலத்தில் இந்த கால்வாயை இப்பகுதி மாணவர்கள் படகில் கடக்க முயன்ற போது, படகு கவிழ்ந்து பெரிய விபத்து ஏற்பட்டுள்ளதை நினைவுகூரும் இப்பகுதி மக்கள், இந்த ஆண்டாவது சிறுதரைப்பாலம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT