விழுப்புரம் ஆட்சியரகத்தில் தொழிலாளி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
நிலப் பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளைக் கண்டித்து, குடும்பத்துடன் தீக்குளிக்கும் நோக்கத்தில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தொழிலாளியால்
நிலப் பிரச்னையில் நடவடிக்கை எடுக்காத அரசு அதிகாரிகளைக் கண்டித்து, குடும்பத்துடன் தீக்குளிக்கும் நோக்கத்தில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன் வந்த தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் காந்தி நகரைச் சேர்ந்தவர் செல்வம் (42). கூலித் தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவருக்கும், நிலப் பிரச்னை இருந்து வருகிறது. இதற்கு தீர்வு காணக் கோரி, செல்வம் வருவாய்த் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இதனால், மனமுடைந்த செல்வம், தனது மனைவி சித்ரா(38), மகள் சோனியா(17), மகன் கோகுல்(15), உறவினரான ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் செல்வராஜ் ஆகியோரை அழைத்துக் கொண்டு, கையில் மண்ணெண்ணெய் கேனுடன், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வியாழக்கிழமை காலை வந்தார்.
ஆட்சியரக நுழைவு வாயிலில் சோதனையிட்ட போலீஸார், மண்ணெண்ணெய் கேனை பறித்து, அவர்கள் 5 பேரையும் தாலுகா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது, நிலப் பிரச்னை தொடர்பாக நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தனர். இதுகுறித்து, போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.