தமிழ்நாடு

2050-க்குள் சென்னையின் ஒரு பகுதி கடலில் மூழ்கும்: ஆமதாபாத் பல்கலை. பேராசிரியர் எச்சரிக்கை

DIN

கடல் நீர்மட்ட உயர்வால் 2050-ஆம் ஆண்டுக்குள் சென்னை உள்பட தமிழகத்தின் கடற்கரை ஓரத்திலுள்ள பல பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதால் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆமதாபாத் சிபிஇடி பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்ரீவத்சன் கூறினார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியது: 

இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையம் (எஸ்.ஏ.சி.) 2012-ஆம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், உலக வெப்பமயமாதலால் 2100-ஆம் ஆண்டுக்குள் கடல்நீர் மட்டம் ஒரு மீட்டர் உயரக்கூடும். இதன் காரணமாக, தமிழகக் கடற்கரை ஓரமுள்ள 218.54 கி.மீ நெடுஞ்சாலைகள், 85.66 சதுர கி.மீ ரயில்வே கட்டமைப்புகள், 497.65 சதுர கி.மீ. விளை நிலங்கள், 826 சதுர கி.மீ நிலத்தடி நீர்ப்படுகைகள் கடலுக்குள் மூழ்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 3.11 சதுர கி.மீ. அளவுக்கு கடலில் மூழ்கக்கூடும் என்றும் கூறுகிறது. 

மாநிலத் திட்டக் குழு 2015-ஆம் ஆண்டு நடத்திய ஆய்வில், கடல் நீர் மட்ட உயர்வால் சென்னையில் 2050-ஆம் ஆண்டுக்குள் 144 சதுர கி.மீ. நிலங்கள் கடலில் மூழ்குவதுடன், 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர் என கணித்துள்ளது. இந்த அறிக்கையை தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. 

கடல்நீர் மட்ட உயர்வால் கடலோரம் வசிக்கும் லட்சக்கணக்கான மீனவக் குடும்பங்களும் பாதிக்கப்படுவர். இவை உடனடியாக நிகழ்ந்துவிடாது என்றாலும், உயர் அலை வீச்சால் வெள்ள பாதிப்புகள் தொடர்ச்சியாக இருக்கும். 

இதைக் கருத்தில் கொண்டு கடற்கரை ஓரங்களில் புதிய கட்டுமானங்கள் மேற்கொள்வதை அரசு இப்போதே தடுக்க வேண்டும். கடற்கரை மண்டல மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்தி கடல்நீர் மட்ட உயர்வு, பாதிக்கப்படும் பகுதிகள், அதற்கு உறுதியான அபாயக்கோடு நிர்ணயம் செய்து பாதுகாத்திட வேண்டும். எஸ்.ஏ.சி. மற்றும் மாநிலத் திட்டக்குழுவின் ஆய்வறிக்கைகளை தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். பாதிக்கக்கூடிய மீனவக் குடும்பங்களுக்கு பாதுகாப்பான இடங்களில் குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT