தமிழ்நாடு

திருத்தணி அரசுப் பள்ளியில் அழுகிய முட்டைகள் விநியோகம்: மாணவர்கள் அதிர்ச்சி

தினமணி

திருத்தணியில் அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவுடன் வழங்க இருந்த முட்டைகள் அழுகிய நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், அப்பள்ளி மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், குறிப்பிட்ட மாணவர்களுக்கு முட்டை வழங்குவது ரத்து செய்யப்பட்டது.

 திருத்தணி ஆலமரம் தெருவில் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது.

 இப்பள்ளியில், 282 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களில், 140 மாணவ, மாணவியர் சத்துணவு சாப்பிடுகின்றனர். சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து நாள்கள் முட்டை வழங்கப்படுகிறது.

 இதில், சனிக்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் 250 முட்டைகள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. திங்கள்கிழமை சத்துணவு அமைப்பாளர் ஷகிலா, அவற்றில் 100 முட்டைகளை சமையல் பணியாளரிடம் கொடுத்துள்ளார். வேக வைத்த முட்டைகளை உரிக்கும்போது, அவை அழுகிய நிலையில், புழுப்பூச்சியுடனும் காணப்பட்டது. இதை சமையல் பணியாளர், பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதியிடம் தெரிவித்தார்.

 முட்டைகளைப் பார்வையிட்ட தலைமை ஆசிரியை, முட்டைகள் அழுகியுள்ளதை உறுதி செய்த பின், மிச்சமுள்ள முட்டைகளை வேக வைக்கும்படி கூறினார். அதில் 20 முட்டைகள் நல்ல நிலையில் இருந்தன. அதிகமான முட்டைகள் அழுகிப்போனதால் மதிய உணவின் போது குறிப்பிட்ட மாணவர்களுக்கு முட்டைகள் வழங்கப்படவில்லை.

 இதுகுறித்து, தகவல் அறிந்ததும் திருத்தணி வட்டாட்சியர் நரசிம்மன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜராஜன் ஆகியோர் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, முட்டைகள் வரும்போதே அழுகிய நிலையில் இருந்தது என்றும், அதைக் கவனிக்காமல் வேகவைத்ததும் தெரியவந்தது.

 தாற்காலிக பணி நீக்கம்!

 இதைத்தொடர்ந்து, ஆட்சியர் எ. சுந்தரவல்லி உத்தரவின்படி, கடமை தவறி கவனக்குறைவாக செயல்பட்டதாக பள்ளியின் சத்துணவு அமைப்பாளர், தாற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பள்ளிக்கு முட்டைகளை விநியோகம் செய்யும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 ஒவ்வொரு பள்ளியிலும் சத்துணவு அமைப்பாளர்கள் ஒப்பந்ததாரர்களிடமிருந்து முட்டைகளைப் பெற்றுக்கொள்ளும்போது முட்டையின் தரம் குறித்து உரிய ஆய்வுக்குப் பின்னரே பெற்றுக்கொள்ளவும், மற்றும் முட்டைகளை சமையலுக்கு பயன்படுத்துவதற்கு முன்னரும் முட்டையின் தரம் குறித்து ஆய்வு செய்யவும் அனைத்து சத்துணவு பணியாளர்களுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

 மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்து கண்காணிக்க வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு), பள்ளி தலைமை ஆசிரியர், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆகியோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவறும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT