தமிழ்நாடு

மதுவிலக்கை அமல்படுத்தாமல் மதுபானங்களின் விலையை உயர்த்துவதா?: மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு

DIN

மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றவர்கள் மதுபானங்களின் விலையை உயர்த்தியிருப்பது முரண்பாடாக உள்ளது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் புதன்கிழமை அவர் அளித்த பேட்டி:
டாஸ்மாக், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை அமைச்சர்கள் மாற்றியதாகப் புகார் எழுந்துள்ளது. இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. முறையான விசாரணை நடந்தால் அனைத்து உண்மைகளும் வெளியே வரும்.
ஊழியர்களுக்கு ஊதியம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். இது போன்ற கோரிக்கையுடன் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆனால், இந்த ஆட்சி அதுபற்றியெல்லாம் கவலைப்படவில்லை. இது கண்டிக்கத்தக்கது. ஊதியம் வழங்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டெங்கு விவகாரம்: டெங்கு உள்பட பல பிரச்னைகளில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டு வருகிறோம். ஆனால், பயன் எதுவும் இல்லை. டெங்கு விவகாரத்தில் மத்திய அரசிடம் மாநில அரசு உதவி எதுவும் கேட்காததால் எங்களால் 
எதுவும் செய்ய முடியவில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சரே கூறியுள்ளார். இதன் மூலம் தமிழக அரசின் அலட்சியம் வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது. டெங்கு குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
அண்ணா பெயர்: அண்ணா இருந்திருந்தால் பாஜகவில் சேர்ந்திருப்பார் என்று முரளிதரராவ் கூறியுள்ளார். அண்ணாவின் பெயரைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் சூழ்நிலை இன்றைக்கு பாஜகவுக்கும் வந்துவிட்டது. அண்ணா பெயரைப் பயன்படுத்தியதற்காக திமுக சார்பில் நன்றி. 
ஆனால், மூன்றரை ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையில் உள்ள பாஜக ஆட்சி எதையுமே செய்யவில்லை. இந்த ஆட்சியால் மக்களுக்கு எந்தவொரு பயனுமே கிடைக்கவில்லை. 
எனவேதான், அதையெல்லாம் திசை திருப்பும் வகையில் இப்படிப்பட்ட பிரசாரத்தில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குட்கா விவகாரம்: குட்கா விவகாரத்தில் அமைச்சர், டிஜிபி பெயரைச் சேர்க்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிடுவோம். திமுகவை ஊழல் கட்சி என்று கூறும் அமைச்சர் ஜெயக்குமார் குட்கா விவகாரம் குறித்து முதலில் விளக்கம் அளிக்கட்டும். 
மதுபான விலை: தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில் அரசின் வருவாயை அதிகரிக்க மதுபானங்களின் விலையை ரூ. 12 வரை உயர்த்த அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவோம் என்று சொன்னவர்கள் இன்றைக்கு இப்படிப்பட்ட அறிவிப்பை வெளியிட்டு இருப்பதில் இருந்து, எப்படிப்பட்ட முரண்பட்ட ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT